Election bannerElection banner
Published:Updated:

`எல்லையில் தமிழர்களைத் தவிக்க விடுகிறார்கள்' -கேரள அரசின் செயலால் கொதித்த விஜயதரணி எம்.எல்.ஏ

கேரள எல்லையில் சாலை ஓரம் தவித்த தமிழர்கள்
கேரள எல்லையில் சாலை ஓரம் தவித்த தமிழர்கள்

அவர்களுக்குக் கொரோனா சோதனை செய்து நெகட்டிவ் என உறுதி செய்துவிட்டு ஊருக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால், எதையும் கேரள அரசு செய்வதில்லை.

கொரோனா ஊரடங்கு காரணமாகப் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுவிட்டன. இதனால் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசித்த தமிழர்கள் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் மாநிலங்களுக்குள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்நாட்டு விமானச் சேவைகள் தொடங்கின. அதேசமயம் கேரள மாநிலத்தில் வெளிநாடுகளிலிருந்தும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், கேரள மாநிலத்தில் எதாவது ஒரு முகவரியைக் கொடுத்து அதன்மூலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட ஏர்போர்ட்டுகளுக்கு வந்துவிடுகின்றனர். அங்கு வந்தபிறகு அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல இ-பாஸ் தேவைப்படுவதால் என்ன செய்வது எனத் தெரியாமல் விழிக்கின்றனர்.

விஜயதரணி
விஜயதரணி

அவர்களைக் கேரள அரசு தமிழக எல்லைகளில் கொண்டு விட்டுவிடுகிறது. நேற்று முன்தினம் 57 தமிழர்களை கேரள அரசு கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளைப் பகுதியில் கொண்டு விட்டுவிட்டுச் சென்றுவிட்டது. கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், நோயாளிகள் என அனைவரும் சாலை ஓரத்தில் ஒருநாள் இரவைக் கழிக்கும் நிலை ஏற்பட்டது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயதரணி எம்.எல்.ஏ கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கேரள மாநில விமான நிலையங்களுக்கு வருகிறார்கள். அங்கு வந்த உடன் கேரள அதிகாரிகள் அவர்களின் முகவரியைக் கேட்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் அருகில் உள்ள தமிழக மாவட்ட எல்லைகளில் கொண்டு வந்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களை கொண்டு வந்து விடுவது குறித்து தமிழக அதிகாரிகளுக்கும் தகவல் கொடுப்பது இல்லை. இ பாஸ் எடுக்க வேண்டும் என்பது பற்றியும் தெரிவிப்பது இல்லை.

வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்களை விமான நிலையம் அருகிலேயே க்வாரன்டீனில் வைத்து, அவர்களுக்குக் கொரோனா சோதனை செய்து நெகட்டிவ் என உறுதி செய்துவிட்டு ஊருக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் இது எதையும் கேரள அரசு செய்வதில்லை. கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளைப் பகுதியில் நேற்று முன்தினம் கேரள அரசால் விடப்பட்ட தமிழர்களுக்கு வசதிகளைச் செய்துகொடுக்காமல் இருந்தால் நான் போராட்டம் நடத்துவேன் என அறிவித்ததால் தமிழக அதிகாரிகள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்" என்றார் கொதிப்புடன்.

அதிகாரிகளிடம் 
வாக்குவாதம் செய்யும்  விஜயதரணி
அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் விஜயதரணி

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், "வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள், அவர்கள் மொபைல்களில் இருந்துதான் இ பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்தால்தான் அவர்களை க்வாரன்டீனில் வைப்பதற்கான இடத்தை ஏற்பாடு செய்ய முடியும். கேரளத்திலிருந்து வந்தவர்களுக்கு உதவ அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் க்வாரன்டீனில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு