Published:Updated:

`குலத் தொழில் செய்தால் மட்டும்தான் சாதிச் சான்றிதழ்!' -  நெல்லை அதிகாரிகளால் கலங்கும் மக்கள் 

தங்களின் குலத்துக்குச் சொந்தமான தொழிலைச் செய்து வருவதாகக் கிராம மக்களிடம் ஒப்புதல் பெற்று வந்தால் மட்டுமே சாதிச் சான்றிதழ் வழங்க முடியும் எனப் புதிரை வண்ணார் சமூக மக்களிடம் அதிகாரிகள் கடுமை காட்டுவதாக வேதனை தெரிவித்தனர். 

சாதிச் சான்றிதழ் வழங்குமாறு மனு அளித்த மக்கள்
சாதிச் சான்றிதழ் வழங்குமாறு மனு அளித்த மக்கள்

நெல்லை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்குச் சாதிச் சான்றிதழ் கிடைப்பது என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. நெல்லையை அடுத்துள்ள தருவை கிராமத்தில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்குச் சாதிச் சான்றிதழ் கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகிறார்கள். இதற்காகப் பல மாதங்கள் அவர்கள் அலைந்தும் சான்றிதழ் கிடைக்கவில்லை. 

மனு அளிக்க வந்திருந்த கிராம மக்கள்
மனு அளிக்க வந்திருந்த கிராம மக்கள்

இந்த நிலையில், புதிரை வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து சாதிச் சான்று கேட்டு மனு அளித்தார்கள். தங்களுக்குச் சாதிச் சான்றிதழ் கொடுக்க மறுப்பதால், குழந்தைகளால் உயர் கல்வி படிக்க இயலவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ``எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் 10 முதல் 15 குடும்பங்களாக வசித்து வருகிறோம். கடந்த காலங்களில், பட்டியலின மக்களின் துணிகளுக்குச் சலவை செய்யும் தொழில் செய்து வந்தோம். தற்போது ஏற்பட்ட கால மாற்றத்தால் பெரும்பாலான மக்கள் குலத் தொழிலைக் கைவிட்டு கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். 

ஆட்சியர் அலுவலகம் முன்பாக கிராம மக்கள்
ஆட்சியர் அலுவலகம் முன்பாக கிராம மக்கள்

எங்களின் குழந்தைகளின் படிப்புக்காகச் சாதிச் சான்றிதழ் அவசியப்படுகிறது. ஆனால், அரசு அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்து வருகின்றனர். அதோடு எங்கள் வீடுகளுக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், `உங்கள் வீட்டில் கழுதை இருக்கிறதா? சலவைத் துணிகள் எங்கே?’ எனக் கேள்விகளைக் கேட்கின்றனர். கழுதை கூட வைத்திருக்காத நீங்கள் எப்படி புதிரை வண்ணார் சான்றிதழ் கேட்கலாம் எனத் தெரிவித்து சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள்.

எங்களை மீண்டும் குலத் தொழிலுக்குத் தள்ளும் வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. எங்கள் மீது அதிகாரிகள் தீண்டாமையைத் திணிக்கிறார்கள். அத்துடன், நாங்கள் புதிரை வண்ணார் என்பதற்குச் சான்றாக, நாங்கள் தொழில் செய்யும் பத்து வீடுகளில் கையெழுத்து வாங்கி வருமாறு நிர்பந்திக்கிறார்கள். 

``சாதிச் சான்றிதழ் வேண்டும்..!” - பாம்புகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை அதிர வைத்த நாடோடி இன மக்கள்
எங்களை மீண்டும் குலத் தொழிலுக்குத் தள்ளும் வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.
கிராம மக்கள்

பணம் இருப்பவர்களுக்குச் சான்றிதழ் உடனே கிடைத்து விடுகிறது. எங்களைப் போன்ற ஏழைகளிடம் ரூ.15,000 இல்லாததால் சான்றிதழ் கிடைப்பதில்லை. எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு எங்களுக்குச் சான்றிதழ் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும்’’ என்றார்கள், வேதனையுடன். இது தொடர்பாக மனுவை நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் கிராம மக்கள் அளித்தனர்.