`நீ இங்கே வேலைபார்க்க கூடாது; ஓடிவிடு'- விருதுநகர் புதிய கல்வி அதிகாரி மிரட்டப்பட்டாரா?
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற பெண் மாவட்ட கல்வி அலுவலரை பொறுப்பு அலுவலரும், அரசியல்வாதியும் பணி செய்யவிடாமல் வெளியேற்றியதாக தகவல்கள் வெளிவருகின்றன.

விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக மதுரை மாவட்டம் காடுபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரான வளர்மதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையில் இருந்து இதற்கான உத்தரவும் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, இன்று விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்த அவர் கையெழுத்திட்டு மாவட்டக் கல்வி அலுவலராக தன் பணியை தொடங்கிய அவர் மாவட்ட ஆட்சியரையும் சந்தித்தார்.

பின்னர் கல்வி அலுவலகத்தில் உள்ள தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்து பணியாற்றிக் கொண்டிருந்த போது ஏற்கெனவே விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக (பொறுப்பு) உள்ள மோகன் என்பவர் அலுவலகத்துக்கு வந்து இங்கே பணிபுரிய கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டார் என்றும். நாற்காலியில் உட்கார்ந்திருந்த வளர்மதியை இழுத்து வெளியே தள்ளினார் என்றும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
வளர்மதி பணியில் இருந்தபோது அங்குவந்த மோகன், ``நீ இங்கே பணியாற்றக் கூடாது. பணிமாறுதல் பெற்று வேறு இடத்துக்கு சென்றுவிடு. என்னை மீறி உன்னால் இங்கே இருக்க முடியாது என ஒருமையில் பேசி மிரட்டியதாகவும், இதனால் அவர் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே அழுதபடி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார் என்றார் எனவும் அங்கிருந்த அலுவலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ”மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பு வகித்து வரும் மோகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. ஆனால் அமைச்சர் பெயரை சொல்லி தப்பித்து வருகிறார். இதற்கு முன் மாவட்ட முதன்மை கல்வி அலுவராக இருந்த சுவாமிநாதனும் இவருக்கு ஆதரவாகவே இருந்தார். இதனால் இவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இப்போது கூட மாவட்ட அமைச்சருக்கு மிகவும் நெருக்கமாக உள்ள கதிரவன் புதிய அலுவலரை பொறுப்பேற்க விடாமல் தொலைபேசியில் பேசி மிரட்டியுள்ளனர். பதவியேற்ற சில நிமிடங்களிலேயே அவரை மாற்றிவிட்டனர். மோகன் போன்ற நபர்களால் தான் மாவட்டத்தின் கல்வித்தரம் பின்தங்கி வருகிறது. கல்வித்துறையை அரசியலாக்கிக் கொண்டிருப்பதால் இன்னும் கல்வித்தரம் எந்த அளவுக்கு கீழே போகப்போகிறது என்பது புரியவில்லை” எனத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வளர்மதியிடம் கேட்டபோது, ``எனக்கு சொந்த ஊர் மதுரை என்பதால் நான் மதுரையிலேயே பதவி கிடைக்க வேண்டும் என எதிர்பாத்திருந்தேன். விருதுநகரில் பணியில் சேர்ந்த பின் மதுரை மாவட்ட கல்வி அலுவலராக பதவி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, மதுரைக்கு வந்துவிட்டேன். விருதுநகரில் என்னை யாரும் பணி செய்யவிடாமல் தடுக்கவில்லை. எந்த பிரச்சினையும் நடக்கவில்லை'' என்றார்.

மோகனிடம் கேட்டபோது, ``33 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 8 மாதங்களாக மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பு வகித்து வருகிறேன். இன்று புதிய அலுவலரை சந்திக்க சென்றேனே தவிர அவரிடம் எந்த பிரச்சினையும் செய்யவில்லை. அவரது கணவரும், பிள்ளையும் அங்கே தான் இருந்தனர். ஆனால் எனக்கு வேண்டாத சிலர் என் மீது வீண் பழி சுமத்திவிட்டனர்'' எனத் தெரிவித்தார்.
``என்னை இங்கு பணி செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என்று புலம்பிய டிஇஓவுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பின் நான் எதுவும் பேசவில்லை. இங்கு தான் பணி புரிய வேண்டும் என்றில்லை மதுரை கொடுத்தாலும் போதும் எனக்கூறி வருகிறார்'' என்கின்றனர் கலெக்டர் அலுவலக வட்டாரங்கள்.