Published:Updated:

`உங்க டாய்லெட்டை சுத்தம் பண்ண நான் எம்.பி ஆகல!' - மீண்டும் சர்ச்சையில் பிரக்யா சிங்

மலையரசு

`உங்கள் கழிவறையை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதைச் சரியாக தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.'

பிரக்யா சிங் தாகூர்
பிரக்யா சிங் தாகூர்

போபால் மக்களவைத் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர். சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர். தேர்தல் பிரசாரத்தில் நாதுராம் கோட்சே குறித்த கமலின் பேச்சுக்குப் பதிலளித்த பிரக்யா, `நாதுராம் கோட்சே ஒரு தேசப்பக்தராக இருந்தார். இருக்கிறார். இன்னும் இருப்பார். அவரைத் தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி தரப்படும்' எனக் கூறி அதிரவைத்தார்.

பிரக்யா சிங் தாகூர்
பிரக்யா சிங் தாகூர்

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழ கருத்து கூறிய அரைமணி நேரத்துக்குள்ளாகவே பா.ஜ.க மேலிடம் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது. போதாக்குறைக்கு பிரதமர் மோடியும், ``காந்தியை அவமதித்த பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். அவரது பேச்சு மன்னிக்க முடியாத குற்றம்" எனக் கூறினார். இந்த விவகாரத்தில் அவருக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பிரக்யா பேசியுள்ளார். போபால் தொகுதிக்குட்பட்ட பா.ஜ.க தொண்டர் ஒருவர் சமீபத்தில் பிரக்யாவுக்கு போன் செய்து தனது பகுதியில் சுகாதாரத்தின் நிலை மிக மோசமாக உள்ளது எனக் கூறியதாகத் தெரிகிறது. இந்தப் புகார் குறித்து செஹோர் பகுதியில் நடந்த பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரக்யா, ``உங்கள் கழிவறையை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதைச் சரியாக தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

பிரக்யா சிங்
பிரக்யா சிங்

நான் என்ன காரணத்துக்காக எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டேனோ அதை சிறப்பாகச் செய்வேன். ஒரு எம்.பி என்ற முறையில் எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தொகுதியின் மேம்பாட்டை உயர்த்த வேலை செய்வேன். உங்களின் குறைகளை லோக்கல் பிரதிநிதிகளை வைத்து தீர்த்துக்கொள்ளுங்கள். அதைவிடுத்து எனக்கு அடிக்கடி போன் செய்வதை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்" எனக் கோபமாக பேசியுள்ளார். இந்தக் காட்சிகள் வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.