Published:Updated:

`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..!’ - திமுக அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

அமைச்சர்  தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்

மதுராந்தகத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் கழுத்தை அறுத்துடுவோம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டார். இவர் இந்தக் கூட்டத்தில் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய அமைச்சர், ``இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதன் முக்கியமான நோக்கம், வருகின்ற உள்ளாட்சித் தேர்தல். நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நமது ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுவருகிறது. ஆனால், இந்த தொகுதியில் நமக்குச் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. எங்களையெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களாக நீங்கள் உட்காரவைத்துவிட்டார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில் உங்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக அமரவைக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது. அரசினுடைய நலத்திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேர்க்க வேண்டுமென்றால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நம் ஆட்களாக இருக்க வேண்டும். ஒரு அ.தி.மு.க-ரன் கூட நமது ஆட்சியில் பொறுப்பில் இருக்கக் கூடாது என்று தலைவரிடம் சொல்லியிருக்கிறோம்" என்றார்.

அமைச்சர்  தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தொடர்ந்து பேசியவர், ``வரும் செப்டம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். இந்தத் தேர்தலில் தலைமை யாருக்கு சீட் கொடுக்கிறதோ அவர்களுக்காக உழைக்க வேண்டும். துரோகம் செய்யவே கூடாது. தி.மு.க.வில் இருந்துகொண்டு துரோகம் செய்தால் முன்னேறவே முடியாது. நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். பி.டி.ஓ அலுவலகத்துக்குப் போக முடிகிறதா? மற்றவர்களெல்லாம் தைரியமாகப் போக முடியும். திமுக-காரர்கள் போக முடியாது. இதுவே தேர்தலில் நாம் ஜெயித்திருந்தால், போடா அப்படின்னு நீ சொல்லியிருக்கலாம். அதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்த இடத்தையும் கைப்பற்றினால்தான் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு போகலாம். சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்போல கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் `இந்த வேட்பாளர் நல்லது கெட்டதுக்கு வந்தாரா... நாம கஷ்டம்னு போய் சொன்னா, நமக்கு ஆதரவாக இருப்பாரா’ என்பதையெல்லாம் பார்த்துத்தான் ஓட்டுப்போடுவார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ``வேட்பாளர்களில் யாரை நிறுத்தினால் வெற்றிபெறுவார்கள், சமுதாய பலம் எப்படி இருக்கிறது, பணம் வைத்திருக்கிறாரா, யோக்கியமான ஆளா என்றெல்லாம் பார்த்துத்தான் சீட் கொடுப்போம். இந்தத் தேர்தலில் உனக்கு வேண்டியவர், எனக்கு வேண்டியவர், ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்க மாட்டோம். வேட்பாளரை வெற்றியடையச் செய்யவேண்டியது உங்கள் கடமை. சிலர் தங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கூடவே இருந்து தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்வார்கள். அந்த துரோகம் இருக்கவே கூடாது. அது உங்களுக்குத்தான் இழப்பு. இது மிகவும் முக்கியமான தேர்தல். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று தலைவரிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அமைச்சர்  தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்

இந்தத் தேர்தலில் வெற்றி அடையவில்லையென்றால் ஒன்றியச் செயலாளர்கள் கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை. கட்சிதான் நமக்கு முக்கியம். ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு சந்தோஷமாக எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல், எல்லாவற்றையும் இங்கேயே தூக்கி வீசிவிட்டு நமது இயக்கத் தோழர்கள் யாராக இருந்தாலும் சரி... அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். கூட்டம் நடைபெறும்போது, கொடி, தோரணம் எல்லாம் பிரமாதமாகக் கட்டி, கூட்டம் கூட்டி ஒரு ஆயிரம், ஐந்நூறு பேருக்குச் சாப்பாடு போட்டு நடத்தினால், அது இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு பெரிய பலமாக அமையும் என்ற உணர்வோடு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்" என்று பேசினார்.

திமுக-வுக்கு எதிரான அதிமுக-வின் ஆர்ப்பாட்டம்: வெற்றியா... தோல்வியா? |The Imperfect Show

இந்தச் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக விளக்கம் கேட்க அமைச்சரைத் தொடர்புகொண்டோம். அமைச்சர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் தரப்பில் விளக்கம் கொடுத்தால் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு