அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி கிராமத்திலுள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கியபடி பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார். அந்த மாணவி திடீரென விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். அதையடுத்து, அந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த மாணவி 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு விடுதி வார்டன் கட்டாயப்படுத்தியதாக மாணவி பேசிய வீடியோ, கடந்த 20-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது. இது தொடர்பாக திருக்காட்டுள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன், விடுதி வார்டனான சகாயமேரி என்பவரையும் கைதுசெய்தனர். இதற்கிடையில் மாணவியின் தந்தை, தன் மகளை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறியும், சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், மாணவி மத மாற்றம் தொடர்பாகப் பேசும் வீடியோவை எடுத்த அரியலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத்தின் செயலாளரான முத்துவேல் என்பவர் வல்லம் டி.எஸ்.பி அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி பிருந்தாவிடம் மாணவி பேசும் வீடியோவைப் பதிவுசெய்த தனது செல்போனை ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

`வார்டன் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் என்னை செய்யச் சொன்னார்கள். வேலை அதிகமாக வாங்கியதால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் விஷம் குடித்துவிட்டேன்' என அந்த வீடியோவில் மாணவி பேசியிருக்கிறார். இந்த நிலையில், மாணவி தற்கொலை குறித்து ஆய்வுசெய்து விசாரணை மேற்கொள்ள நான்கு பேர்கொண்ட குழுவை அமைத்து, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா உத்தரவிட்டிருந்த நிலையில், மைக்கேல்பட்டி கிராமத்தினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரைச் சந்தித்து பா.ஜ.க-வினருக்கு எதிராக மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மைக்கேல்பட்டி கிராமத்தினர், ``எங்கள் ஊரில் மத வேறுபாடு இல்லை. அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறோம். இங்கு கிறிஸ்தவர்களே அதிகமாக வசிக்கின்றனர். தூய இருதய மேல் நிலைப்பள்ளி 163 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அங்கு 60 சதவிகிதத்துக்கு மேல் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் படிக்கின்றனர். அந்தப் பள்ளியால் எங்கள் மாவட்டத்துக்கே பெருமை. எங்கள் பிள்ளைகளும் அந்தப் பள்ளியில்தான் படிக்கின்றனர். இது நாள் வரை பள்ளியில் மத மாற்றம் நடந்ததாக எந்தவிதமான பிரச்னையும் எழுந்ததே இல்லை.

மாணவி தற்கொலையைவைத்து மதரீதியான கட்சிகளும், அமைப்புகளும் எங்கள் ஊரின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றன. பள்ளியில் மத மாற்றம் என்பது நடக்கவில்லை. சிலர் மறைமுகமாக வந்து எங்கள் ஊர் மக்களிடம் குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாகப் பேசுங்கள் என நிர்பந்தம் செய்கின்றனர். மாணவி இறப்புக்கு மதமாற்றம் காரணம் எனக் கூறுவது சரியல்ல. விசாரணையில் உண்மை தெரியவரும். பா.ஜ.க குழு உள்ளிட்ட எந்தக் குழுவும் எங்கள் ஊருக்கு விசாரணைக்கு வரக் கூடாது. பா.ஜ.க-வினரை விசாரிக்க அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது. எங்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடாது. மேலும், எங்கள் ஊருக்குப் பாதுகாப்பு வேண்டும்" என்றனர்.