Published:Updated:

`மதச்சார்பின்மையினால் நமது கலாசாரத்துக்கு சவாலா?'- யுபிஎஸ்சி தேர்விலும் சர்ச்சைக்குரிய கேள்வி!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணித் தேர்வு வினாத்தாளில் ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.

UPSC
UPSC

கேந்திரிய வித்யாலாவின் பாடப்புத்தகத்தில் இருந்த குறிப்பிட்ட ஒரு பக்கம் சமீபத்தில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில், தலித் என்றால் என்ன என்ற கேள்வியும் அதற்கான சாய்ஸ்களாக, வெளிநாட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர மக்கள், உயர்தர மக்கள் என்று வழங்கப்பட்டு இருந்தது. மற்றொரு கேள்வியானது, டாக்டர் அம்பேத்கர் எந்தச் சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்னும் கேள்வியும் அதற்கான சாய்ஸ்களாக, வசதிபடைத்தவர், ஏழை, எகானமி வகுப்பைச் சேர்ந்தவர் எனவும் மூன்று சாய்ஸ்கள் இருந்தன. பொருளாதார ரீதியாகவும் தலித் என்னும் ஒரு சாய்ஸ் மட்டும் சாதிரீதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருந்தது.

UPSC
UPSC

இந்நிலையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணித் தேர்வு வினாத்தாளில் இதேபோன்று ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாதம் 20ஆம் தேதி முதல் முதன்மை (Mains) தேர்வு நடைபெற்று வருகிறது. 20ஆம் தேதி தொடங்கிய கட்டுரை தாள் (Essay) தேர்வின் தொடர்ச்சியாக நேற்று பொதுப்பகுதி தாள் 1 மற்றும் 2 தேர்வு நடைபெற்றது. இதில் மதச்சார்பின்மை தொடர்பாக ஒரு கேட்ட கேள்விதான் தற்போது சர்ச்சையாக உருமாறியிருக்கிறது. ``மதச்சார்பின்மையினால் நமது கலாச்சார நடைமுறைகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்னென்ன?'' என்பது அந்தக் கேள்வி.

`மாணவர்கள் இதைத்தான் படிக்கிறார்களா?!'-6ம் வகுப்பு கேள்வி சர்ச்சையும் கேந்திரிய வித்யாலயா விளக்கமும்

``இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையின் நேர்மறையான கருத்தையும், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் முறையையும் பின்பற்றி வருகிறது. அப்படி இருக்கையில் இந்தக் கேள்வி மதச்சார்பின்மையின் எதிர்மறை கருத்தை குறிக்கும் விதகமாக இருக்கிறது என்றும், பல்வேறு மதங்களை கொண்டு மதச்சார்பற்ற நாடாக இந்திய நாடு இருக்கும்நிலையில், அது எப்படி ஒரு கலாசாரத்துக்கு சவாலாக இருக்கும்'' எனப் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Question paper
Question paper

இதற்கிடையே, ``இந்திய மதச்சார்பின்மை என்பது ஒரு நேர்மறையான கருத்தாகும். இது மூடநம்பிக்கைகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளுக்கு எதிராக ஒரு விஞ்ஞான மனநிலையைத் தூண்டும்... அதே வேளையில், அனைத்து கலாச்சார நடைமுறைகளையும் உள்ளடக்கி ஊக்குவிக்கும்.'' இதுவே எனது பதிலின் முதல் வாக்கியமாக இருந்திருக்கும் என்று சமீபத்தில் ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்த கண்ணன் கோபாலனும் காட்டமாக பதிலளித்திருக்கிறார். தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சைகளை சந்தித்து வரும்நிலையில் குடிமை பணித் தேர்வு வாரியம் தரப்பில் இதுதொடர்பாக எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

இந்தி வளர்க்கும் கேந்திரிய வித்யாலயா இருக்கும்போது,
தமிழ் வளர்க்கும் நவோதயா பள்ளிகளை மறுப்பது ஏன்?