Published:Updated:

வாட்ஸ்அப் ஆடியோ; டெண்டர் கமிஷன் பிரிப்பதில் பிரச்னை? - தகிக்கும் தோவாளை அ.தி.மு.க!

கிருஷ்ணகுமார்
கிருஷ்ணகுமார்

`எல்லோரும் நான் சம்பாதிக்கறதா என்னைத் தப்பா நினைக்கிறாங்க. ஒன்றியச் செயலாளர் பணத்தை அடிச்சி மாத்திட்டுப்போனதா தளவாய் சுந்தரமும் நம்புறார். அதை சேர்மனிடம் விசாரிக்க வேண்டும்’ என அ.தி.மு.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார் ஆடியோ வெளியிட்டிருந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக இருந்தவர் கிருஷ்ணகுமார். இவர் உடல்நிலை சரியில்லை எனக் கூறி கடந்த வாரம், தன் ஒன்றியச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் வெளியிட்ட வாட்ஸ்அப் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அந்த ஆடியோவில், ``தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த ஒப்பந்தப் பணிகளில் நான் தலையிட்டதாகவும், ஒப்பந்தப் புள்ளிகளிலெல்லாம் நான் தலையிட்டு அதற்குரிய பணத்தை பெற்றுக்கொண்டதாகவும், தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவியும், துணைத் தலைவரும் நிறைய இடங்களில் பேசியிருக்கிறார்கள். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அதை நம்பி, வேறு சில நிர்வாகிகளிடம் கூறியதாகக் கேள்விப்பட்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்வேன். செய்யாத தவறுக்கு பழிச்சொல்லை தாங்கிக்கொள்ள மாட்டேன். எனவே, அதற்கான விளக்கத்தை கழக நிர்வாகிகளிடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தோவாளை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள்
தோவாளை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள்

தோவாளை ஒன்றியப் பெருந்தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டது. 10 ஒன்றிய கவுன்சிலர்களில் இந்த ஒன்றியத் தலைவரை நான்தான் தேர்வு செய்தேன். நான் கேட்கும்போது அவருடைய சொந்த மாமாவே மறுப்பு தெரிவித்தார். நான்தான் அவரிடம் பேசி வேட்பாளராகத் தேர்வு செய்தேன். தேர்தலில் என்ன செய்தார் என்பது கடவுளுக்கும், எனக்கும் தெரியும். அவர் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ஒன்றியப் பொதுநிதியிலிருந்து டெண்டர் நடக்கும்போது எனக்கு போன் செய்து, `ஹெல்ப் பண்ணுங்க’ன்னு சொல்லுவாங்க. நான் அங்கு போய் இருந்து, ஒப்பந்ததாரர் அசோசியேஷனிடம் ஒப்படைக்கும்படி கூறினேன்.

நான் இருக்கும்போது ஐந்து டெண்டர்கள் விடப்பட்டன. அதுக்கு எல்லாமே சேர்மன்தான் பணம் வாங்கினாங்க. ஒரு முறை மட்டும் கவுன்சிலர்களுக்குப் பிரிச்சுக் கொடுத்தாங்க. அதன் பிறகு கொடுக்கலை. அவங்க கையிலதான் பணம் இருக்கு. ஒன்றியத்தில் எந்த ஒப்பந்ததாரரிடமும் நான் பணம் வாங்கினதாகச் சொன்னால், நீங்க என் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். தோவாளை ஒன்றியத்தில் என்னென்ன பணிகள் நடந்திருக்கு, யாருக்கு பணி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் என்னென்ன அமவுண்ட் வாங்கியிருக்காங்க, அதை யார் யாருக்குக் கொடுத்தாங்க, மீதியுள்ளதை என்ன செய்தாங்கன்னு கேளுங்க. தளவாய் சுந்தரம் இதை சேர்மனிடமும், கவுன்சிலர்களிடமும் கேளுங்க.

அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்த கிருஷ்ணகுமார்
அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்த கிருஷ்ணகுமார்

மாதவலாயம் முதல் தோவாளை வரையிலான ரோடு மூணு கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. செண்பகராமன் புதூர் ஸ்கூல் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. பூதப்பண்டி கோர்ட் பணிகள் நாலு கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. செண்பகராமன் புதூர் மார்க்கெட்டுக்கு 10 கோடி ரூபாய் டெண்டர் நடந்தது. இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

எல்லோரும் நான் சம்பாதிக்கறதா என்னை தப்பா நினைக்கிறாங்க. ஒன்றியச் செயலாளர் பணத்தை அடிச்சு மாத்திட்டுப்போனதா தளவாய் சுந்தரமும் நம்புறார். அதை சேர்மனிடம் விசாரிக்க வேண்டும்" என அந்த ஆடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

தலைமைக்குப் புகார்! - குமரி அ.தி.மு.க-வில் புகைச்சலை ஏற்படுத்திய அந்தரங்க வீடியோ

இந்தநிலையில் ஆடியோவுக்கு விளக்கம் அளித்த தோவாளை ஒன்றிய சேர்மன் சாந்தினி பகவதியப்பன் கூறுகையில், ``நாங்கள் ஊராட்சி ஒன்றிய டெண்டர் அல்லது வேறு டெண்டரில் தலையிடுவது கிடையாது. உடல்நிலை சரியில்லை என்றுதான் கிருஷ்ணகுமார் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார். இப்போது உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புகிறார். இது தொடர்ந்தால், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு