Published:Updated:

முடியாத ‘முரசொலி’ போர்! பா.ம.க - தி.மு.க பகை ஏன்?

மு.க.ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மு.க.ஸ்டாலின்

முரசொலி அலுவலகத்தை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

முடியாத ‘முரசொலி’ போர்! பா.ம.க - தி.மு.க பகை ஏன்?

முரசொலி அலுவலகத்தை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

Published:Updated:
மு.க.ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மு.க.ஸ்டாலின்

‘கழகத்தின் கதை’ - ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் நடந்த பதவிச்சண்டைகளை மையமாக வைத்து டாக்டர் ராமதாஸ் எழுதிய புத்தகத்தின் பெயர் இது. இப்போது தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இடையே நடக்கும் முரசொலி மோதல்கூட ‘கலகத்தின் கதை’தான்!

‘முரசொலி’ போர்
‘முரசொலி’ போர்

‘அசுரன்’ படத்தைப் பார்க்கப் போன ஸ்டாலினுக்கு ஆரம்பித்தது பிரச்னை. படத்தைப் பார்த்துவிட்டு, பஞ்சமி நிலம் பற்றிக் கருத்து சொல்ல... பஞ்சமி நில விவகாரம் முரசொலி ஆபீஸ் படியேறியது. “முரசொலி நிலமே பஞ்சமி நிலம்தான்’’ என அதிரடி கிளப்பினார் ராமதாஸ். “முரசொலி அலுவலகத்துக்குப் பட்டா இருக்கு” எனச் சொல்லி, அதற்கான ஆவணங்களை அள்ளிப் போட்டார் ஸ்டாலின். “மூலப்பத்திரம் எங்கே? அதை முதலில் காட்டுங்கள்” எனப் பதிலடி கொடுத்தார் ராமதாஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் போய் நின்றது. “முரசொலி அலுவலகத்தை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ எனச் சொல்லி அங்கே படியேறியது பி.ஜே.பி. அதன்பிறகு கிடைத்த சந்தர்ப்பங்களி லெல்லாம், ‘மூலப்பத்திரம் எங்கே’ என்று கேட்டு தி.மு.க-வை ரவுண்டு கட்டிக் கொண்டே இருந்தது பா.ம.க. ஆனால், கடைசி வரையில் அந்த மூலப்பத்திரத்தைக் காட்டாமல், பா.ம.க-வை சவாலுக்கு இழுத்தது தி.மு.க. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “அந்த இடம் அஞ்சுகம் பதிப்பகத்துக்குச் சொந்தமானது. முரசொலி அறக்கட்டளை வாடகைக்குத்தான் இயங்கிவருகிறது. அந்த நிலத்தை முறையாக நில உரிமையாளர்களிடம் இருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியுள்ளது” என்று விளக்கம் சொன்னது தி.மு.க. இந்தச் சந்தர்ப்பத்தைச் சும்மா விடுமா பா.ம.க?

ராமதாஸ் வரிந்துகட்டிக்கொண்டு கோதாவில் குதித்தார். “அகில இந்தியாவில் மட்டுமல்ல... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டடத்தில் இருந்துகொண்டு, உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்கு தொடர்ந்த ஒரே கம்பெனி நம்ம முரசொலி கம்பெனிதான். வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறதாமே... அப்படியானால், ‘அரசியலிலிருந்து விலகத் தயாரா?’ என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம்போல் வெற்றுச் சவடால்தானா?’’ என ட்வீட்கள் தட்டினார் ராமதாஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முரசொலி விவகாரத்தை வைத்துச் சுழன்று கொண்டிருக்கும் சூறாவளியின் ஆணிவேர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதைந்து கிடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு நிகராக அந்தக் கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க-வைக் குறி வைத்துத் தாக்கிப் பேச ஆரம்பித்தார் ஸ்டாலின். “மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி என்ற முழக்கம், மாற்றம்... ஏமாற்றம்... சூட்கேஸ்மணியாகிவிட்டது’’ எனக் காட்டமாக விமர்சித்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

கடைசி நிமிடம் வரையில் எடப்பாடி ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த அன்புமணி, தினம் தினம் ஆட்சியின் அவலம் பற்றிக் கண்டிப்புடன் அறிக்கை கொடுத்துக்கொண்டிருந்த ராமதாஸ், நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தார்கள். கருணாநிதியால் தீவிரப் பிரசாரம் செய்ய முடியாத சூழலில், ஸ்டாலின் மேற்பார்வையில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலும் 2016 சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தல்களிலும் அடுத்தடுத்து தி.மு.க-வுக்குப் படுதோல்வி. அடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டால் அது தனக்கு ஹாட்ரிக் தோல்வியாக அமைந்துவிடும் என அஞ்சினார் ஸ்டாலின். அதற்காக வலுவான கூட்டணியை அமைத்தார். இப்படியான நிலையில் பா.ம.க அ.தி.மு.க அணியில் சேர்ந்ததை ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. அது தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது.

தொடர்ச்சியாக பா.ம.க-வைப் பிரசாரத்தில் சீண்டிய ஸ்டாலின், அரக்கோணம் தொகுதித் தேர்தல் பிரசாரத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்தைக் கையில் எடுத்தார். ‘`வன்னியர் கல்வி அறக்கட்டளைச் சொத்துகளை எல்லாம் ராமதாஸ் அவரின் மனைவி பெயருக்கு மாற்றி வைத்திருக்கிறார். தமிழக அரசு சொத்துகளைக் கைப்பற்றிவிட முடியும் என்பதால், அ.தி.மு.க அணியில் பா.ம.க இணைந்துள்ளது’’ எனத் திரி கொளுத்திப் போட்டார் ஸ்டாலின். இந்தப் பேச்சுதான் முரசொலி மூலப்பத்திர விவகாரத்துக்கு மூல காரணம்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்துக்கு அப்போதே ஸ்டாலினுக்குப் பதில் சொன்ன ராமதாஸ், ‘`வன்னியர் அறக்கட்டளை பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியை ஏற்படுத்தித் தர உருவாக்கப்பட்ட அமைப்பு. அது தி.மு.க அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை போன்று பினாமி சொத்துகளைப் பதுக்கி வைக்க உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. அந்த அறக்கட்டளையில் நிறுவனராக மட்டுமே உள்ளேன். எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை. என் மனைவிக்கு வன்னியர் அறக்கட்டளையுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஸ்டாலின் விரும்பினால் வன்னியர் அறக்கட்டளையின் ஆவணங்களை ஆய்வு செய்யட்டும். அறக்கட்டளைச் சொத்துகளை என் மனைவி பெயருக்கு மாற்றி எழுதியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லையென்றால், அரசியலிலிருந்து ஸ்டாலின் விலகத் தயாரா?’’ எனக் கேட்டார் ராமதாஸ்.

இந்த வன்னியர் அறக்கட்டளை வார்த்தைப் போர் நடந்து, சரியாக ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது. கடந்த மாதம் வன்னியர் கல்வி அறக்கட்டளையில் சில மாற்றங்கள் நடைபெற்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் செயல்பட்டுவந்த வன்னியர் கல்வி அறக்கட்டளை, ‘மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. ‘`வன்னியர் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியதில் பங்காற்றியதற்காக ராமதாஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது’’ என விளக்கம் சொல்கிறது பா.ம.க. ஆனால், ‘`அதற்காக வன்னியர் என்கிற அடையாளப் பெயரை நீக்கிவிட்டது சரியா?’’ என முணுமுணுக்கிறார்கள் வன்னியர் சமூகத்தின் ஒரு சாராரே.

`` ‘மனைவி பெயருக்கு அறக்கட்டளைச் சொத்தை ராமதாஸ் மாற்றிக்கொண்டார்’ என அன்றைக்கு ஸ்டாலின் சொன்னார். இன்று அந்த அறக்கட்டளையின் பெயரே ராமதாஸ் எனத் தாங்கி நிற்கிறது. அதைச் சரிசெய்துவிட்டு முரசொலி பற்றி ராமதாஸ் பேசட்டும்’’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.

தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இடையே நடக்கும் பகை அரசியலுக்குப் பின்னால் பத்தாண்டுக்கால வரலாறு உண்டு. ஒரு கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தை இன்னொரு கட்சியின் அலுவலகத்தில் களங்கப்படுத்திய வரலாறு ஒருமுறை அல்ல... இரண்டு முறை நடந்திருக்கிறது. 2009 எம்.பி தேர்தலில் அறிவாலயத்தில் பா.ம.க-வின் சின்னமான மாம்பழம் நசுக்கப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே காட்சிகள் அதே அறிவாலயத்தில் அரங்கேறின.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க, போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது. அ.தி.மு.க மட்டும் ஒரேயொரு தொகுதியில் வென்றது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது அறிவாலயத்தில் திரண்டிருந்த தி.மு.க-வினர் அ.தி.மு.க-வின் தோல்வியைக் கொண்டாடியதைவிட பா.ம.க தோற்றதைத்தான் அதிகம் கொண்டாடினார்கள். பா.ம.க-வின் சின்னமான மாம்பழத்தைக் காலில் போட்டு மிதித்தார்கள். இதுபோன்ற காட்சிகள் பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோதும் அரங்கேறியது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் கடைசி நேரத்தில் அதிரடியாக இணைந்த பா.ம.க- 7 தொகுதிகளை வாங்கியது. அதோடு, கூடுதலாக ஒரு ராஜ்யசபா இடத்துக்கும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. `தி.மு.க அணிக்குப் பா.ம.க வரும்’ என்கிற நம்பிக்கையில் மண் விழுந்ததால், பா.ம.க மீது கோபத்தைக் காட்டியது தி.மு.க. ஏழு தொகுதிகளிலும் பா.ம.க தோற்றது.

அப்போது அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் வென்றது. இடதுசாரிகள் தலா மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு, தலா ஓர் இடத்தில் ஜெயித்தன. ஆனால், பா.ம.க ஓர் இடத்தில்கூட வெல்ல முடியவில்லை. காரணம் பா.ம.க-வைத் தோற்கடிக்க தி.மு.க கடுமையாகக் களமாடியதுதான். அந்தத் தேர்தலில் பா.ம.க படுதோல்வியடைந்ததும் அறிவாலயத்தில் பா.ம.க-வின் சின்னமான மாம்பழத்தைக் காலால் மிதித்து, வெறியைக் காட்டினார்கள் உடன்பிறப்புகள். 2009 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, தமிழகத்தில் தி.மு.க ஆளும்கட்சியாக இருந்தது.

தேர்தலில் படுதோல்வியடைந்த ராமதாஸ், ``இந்தத் தேர்தலில் பணநாயகம் வென்றிருக்கிறது. ‘வேறு யார் வெற்றிபெற்றாலும் பரவாயில்லை. பா.ம.க வேட்பாளர்களை மட்டும் தோற்கடிக்க வேண்டும் என தி.மு.க அமைச்சர்களும், முக்கியப் பிரமுகர்களும் பணமூட்டைகளுடன் களமிறக்கப்பட்டனர். பா.ம.க போட்டியிட்ட தொகுதிகளில் பணம் கொடுத்தார்கள் என்று சொல்வது மிகச் சாதாரணம். பணத்தை அள்ளி வீசி விதைத்திருக்கிறார்கள். விதைத்த அளவுக்கு அறுவடை செய்திருக்கிறார்கள். அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட இந்த வெற்றி நிலையானது அல்ல. மிகப்பெரிய சதிசெய்து பா.ம.க-வைத் தோற்கடித்தனர். சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பா.ம.க சின்னமான மாம்பழத்தை ஒரு லாரி நிறைய கொண்டுவந்து, காலால் மிதித்துக் கொண்டாடியுள்ளனர். அறிவாலயத்திலும் அதேபோலச் செய்துள்ளனர்’’ எனக் காட்டமாக அறிக்கை விட்டார்.

அதன்பிறகு நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் மட்டுமே பா.ம.க வெற்றிபெற்றது. அதன்பின் 2016 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப் படுதோல்வியைச் சந்தித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் படுதோல்வி. இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுநிற்கிறது பா.ம.க. இப்படியான சூழலில்தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்தது. விக்கிரவாண்டி வன்னியர்கள் நிரம்பிய பகுதி. தி.மு.க ஜெயித்துவிடக் கூடாது என பா.ம.க கடுமையாகப் போராடியது. அதில் வெற்றியும் பெற்றது. இதன்பிறகுதான் முரசொலி விவகாரம் கிளம்பியது. இவையெல்லாமே நிகழ்காலத்தின் அரசியல். தேர்தல் அரசியல் வரும்போது இந்தக் காயங்கள் எல்லாம் ஆறிப்போகும்.

‘`நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என அறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார்’’ என்பார் ஸ்டாலின். ‘`கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை’’ என்பார் ராமதாஸ்.

இரண்டு பேரும் இப்படிப் பொழிப்புரை எழுதிவிட்டு, நாளைக்குக் கூட்டணி போடலாம். அதையும் நாம் பார்க்கத்தானே போகிறோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism