Published:Updated:

அன்று சந்திரபாபு நாயுடு என்.டி.ஆருக்குச் செய்ததை இன்று சரத்பவாருக்கு செய்த அஜித்பவார்!

சரத் பவார் மற்றும் அஜித் பவார்
சரத் பவார் மற்றும் அஜித் பவார்

துரோகத்தின் மூலம் செப்டம்பர் 1995-ல் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகப் பதவியேற்றார், கட்சியும் அவர் வசம் சென்றது. நாயுடுகாருவின் துரோகம் என்.டி.ஆரை வாட்டியது. அந்த நினைவிலேயே ஜனவரி 1996-ல் மரணமடைந்தார்.

அண்ணன் மகன் அஜித்பவார் செய்த துரோகத்தால் சரத்பவார் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபடும் சூழலை சந்தித்திருக்கிறது. உறவினர்களால் கட்சிகள் பிளவுபடும் சூழல் 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. அன்று ஆந்திராவில் என்.டி.ஆரின் தெலுங்கு தேசத்தை உடைத்து சந்திரபாபு நாயுடு முதல்வரானார். இன்று மகாராஷ்ட்ராவில் பவாரின் தேசியவாத காங்கிரஸை உடைத்த அஜித்பவார் துணை முதல்வராகியுள்ளார்.

அஜித் பவார்
அஜித் பவார்

தெலுங்கு தேசம் கட்சியைப் பொறுத்தவரை எல்லாமே என்.டி.ஆர் தான். மக்களைப் பொறுத்தவரை அவர் கடவுள், ``தேவுடுகாரு”. 1982-ல் ஆந்திராவில் கட்சியைத் தொடங்கினார். கொள்கைகள், சின்னம் எல்லாமே அவர் ஒருவரின் சிந்தனைக் குழந்தைகள். கட்சி தொடங்கப்பட்டவிதம், வளர்ச்சி, ஆட்சியைப் பிடித்த வரலாறு ஆகியவற்றை உலகத்தின் எந்தப் பகுதியிலும் பார்க்க முடியாது. எந்த ஒரு தனி மனிதரையும் அவர் முன்னோடியாக வைத்துக்கொள்ளவில்லை. அவரின் வெற்றிக்கு உதவியவை இரண்டு. ஒன்று, அவரது வசீகரம். இரண்டாவது, `காங்கிரஸ் எதிர்ப்பு'. அத்தகைய சாதனைக்கு சோதனையாக வந்தவர் மருமகன் சந்திரபாபு நாயுடு. 1970-களில் மாணவ காங்கிரஸில் துடிப்போடு இருந்தவர். காங்கிரஸ் (ஐ) சார்பில் போட்டியிட்டு 1978-ல் எம்.எல்.ஏ ஆனார். பிறகு, என்.டி.ஆரின் மகளைத் திருமணம் செய்துகொண்டதுடன் தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது அல்லுடுகாருவான நாயுடுகாருவை முழுமையாக நம்பினார் என்.டி.ஆர். ஆனால், தன்னை நம்பிய தேவுடுகாருவை துரோகத்தால் சாய்த்தவர் சந்திரபாபு நாயுடு.

தமிழகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்த கூவத்தூர் பார்முலாவை தென்னிந்தியாவுக்கு முதன்முதலில் 1984-ம் ஆண்டே அறிமுகப்படுத்தியவர் இவர்தான். என்.டி.ஆர் ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் பகீரத பிரயத்தனத்தை மேற்கொண்டது. அதைத் தடுக்க 160 எம்.எல்.ஏ-க்களை கோல்கொண்டாவில் உள்ள தன்னுடைய ராமகிருஷ்ணா ஸ்டூடியோவில் தங்க வைத்தவர் நாயுடு. அதன் மூலம் காப்பாற்றப்பட்ட தன் மாமனார் என்.டி.ஆரின் ஆட்சியை அடுத்த சில ஆண்டுகளிலேயே துரோகத்தால் அபகரித்துக் கொண்டார் மருமகன் சந்திரபாபு நாயுடு.

என்.டி.ஆர்
என்.டி.ஆர்
Photo: Vikatan

தன் சொந்தக் கட்சியின் தலைவரும், தன் மாமனாருமான என்.டி.ஆருக்கு எதிராகத் தீட்டிய மரத்தில் கூர் பார்த்தார் நாயுடு. 1995-ம் ஆண்டு என்.டி.ஆருக்கு எதிராக 150 எம்.எல்.ஏ-க்களை ஹைதராபாத்தில் உள்ள வைசிராய் ஹோட்டலில் தங்க வைத்தார். ஹோட்டலின் அலுவலகத்தில் தானே அமர்ந்து நடப்பவற்றை மேற்பார்வை செய்தார். இந்நிலையில் தன் பிடி நழுவுவதை உணர்ந்த என்.டி.ஆர் ஹோட்டல் வாசலுக்கு வந்தார். உரத்த குரலில் தன் எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்தார். யாரும் பதிலளிக்கவில்லை. அப்போது அவருக்கு அருகில் ஒற்றை செருப்பு ஒன்று பறந்து வந்து விழுந்தது. மற்றொரு எம்.எல்.ஏ, என்.டி.ஆர் அருகில் இருந்த அவரின் மனைவிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். என்.டி.ஆர் இதை எதிர்பார்க்கவில்லை.

சில நிமிடங்கள் அமைதியாக நின்றார். பிறகு, சோகமாக அங்கிருந்து நகர்ந்தார். அந்த நிகழ்விவுக்குப் பிறகு, வெளியே செல்வதை தவிர்த்தார். துரோகத்தின் மூலம் செப்டம்பர் 1995-ல் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகப் பதவியேற்றார், கட்சியும் அவர் வசம் சென்றது. நாயுடுகாருவின் துரோகம் என்.டி.ஆரை வாட்டியது. அந்த நினைவிலேயே ஜனவரி 1996-ல் மரணமடைந்தார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

அதே போன்ற நிலைமைக்குத்தான் இன்று தள்ளப்பட்டிருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவார். 1999-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவி அதன் தலைவரானார். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர். இந்திய தேசிய அரசியலில் இவருக்கு ஒரு முக்கியமான இடம் உள்ளது.

சரத் பவார்
சரத் பவார்

அதேபோல் மகாராஷ்ட்ராவின் பிராந்திய அரசியலிலும் ஒரு முக்கிய இடம் உள்ளது. அத்தகைய வலுவான சரத்பவாருக்கு தெரியாமலேயே மகாராஷ்ட்ராவின் முதல்வராக பா.ஜ.க-வின் பட்னாவிஸ் பதவியேற்க ஆதரவு கொடுத்துள்ளார் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். இந்த நம்பிக்கைத் துரோகத்தின் பலனாக மகராஷ்ட்ராவின் துணை முதல்வர் பதவியை அடைந்திருக்கும் அஜித் பவார், சித்தப்பா சரத் பவார் தொடங்கிய கட்சியையும் உடைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். 80-வயதை நெருங்கும் சரத்பவார் இந்த துரோகத்தை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது வரும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு