Published:Updated:

துக்ளக் விழாவில் சர்ச்சைப் பேச்சு; ஆடிட்டர் குருமூர்த்திமீது நீதிமன்ற நடவடிக்கை பாயுமா?

குருமூர்த்தி
குருமூர்த்தி

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததன் காரணமாக சட்டச் சிக்கலில் மாட்டியிருக்கிறார் துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சி, சென்னையில் ஜனவரி 14-ம் தேதி நடைபெற்றது. அதில், சர்ச்சைக்குரிய பல கருத்துகளைப் பேசினார் குரூமூர்த்தி. `வீடு தீப்பிடித்து எரியும்போது கங்கை நீருக்காகக் காத்திருக்க முடியாது’ என்றும், `சாக்கடை நீரைக் கொண்டும் தீயை அணைக்க வேண்டி வரும்’ என்றும் சசிகலாவைக் குறிப்பிட்டு அவர் பேசியது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

சசிகலா
சசிகலா

சசிகலாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்தார். `ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன். கங்கை நீர் எது, சாக்கடை நீர் எது, மாஃபியா யார் என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலைகொண்டவர்கள் அல்ல’ என்று டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார்.

அதே நிகழ்ச்சியில், நீதிபதிகள் நியமனம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை குருமூர்த்தி தெரிவித்தார். அதாவது, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியில் இருப்பவர்களின் கால்களைப் பிடித்துக்கொண்டு அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று அவர் விமர்சித்தார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நீதித்துறையை அவமதித்ததற்காக ஆடிட்டர் குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி காவல்நிலையத்தில் ராஜகோபால் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகாருக்கு காவல்துறை சி.எஸ்.ஆர் வழங்கியிருக்கிறது.

குருமூர்த்தி
குருமூர்த்தி

இது குறித்து வழக்கறிஞர் ராஜகோபாலிடம் பேசினோம். ``நீதித்துறையை அவமதிக்கும் வகையில் குருமூர்த்தி பேசியிருக்கிறார். அரசியல் கட்சியினரின் கால்களில் விழுந்து நீதிபதிகள் பதவியைப் பெறுவதாக அவர் சொல்லியிருக்கிறார். எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்திருக்கிறோம். எங்கள் புகாருக்கு சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டிருக்கிறது. எந்த நீதிபதி அவ்வாறு பதவி பெற்றார் என்பதை குருமூர்த்தி சொல்லட்டும். அதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்திருக்கிறோம். அவர் சொல்லவில்லையென்றால், குருமூர்த்திமீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை அணுகுவோம்” என்றார்.

இத்தகைய சூழலில், `நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல’ என்றும், `நீதித்துறையை விமர்சிப்பதற்கான கருத்து சுதந்திரம் இருக்கிறது’ என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். அதேநேரத்தில், `கருத்து சுதந்திரத்துக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எனவே, குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையையும் சிலர் முன்வைக்கிறார்கள்.

இந்தக் கோரிக்கையை முன்வைக்கும் தரப்பினர், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமதித்த குருமூர்த்திமீது நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைககளை இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், தமிழ்நாடு பார் அசோசியேஷன் ஆகியவை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புகிறார்கள்.

குருமூர்த்தி
குருமூர்த்தி

இது தொடர்பாக தி.மு.க சட்டத்துறைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில், ஆடிட்டர் குருமூர்த்தி வசைமாரிப் பேச்சை வாரி வழங்கியிருக்கிறார். சட்டத் துறையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத அவர், சாஸ்த்ரா சட்டப் பள்ளியின் ஆய்விருக்கைப் பேராசிரியராக நியமனம் பெற்றிருக்கிறார். 2017-ல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் புதிய வழக்குரைஞர்கள் உறுதியேற்பு விழாவிலும்கூட அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அவர், பார் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. வழக்கறிஞர்களால் அது உரிய முறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் போய்விட்டது. இப்போது, நீதிபதிகள் நியமனத்தையே அவர் கேலிக்குரிய ஒன்றாகச் சித்திரித்திருக்கிறார். தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று குருமூர்த்தி பேசியிருக்கிறார்.

இது, இந்திய நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்துக்குரிய பேச்சு. நீதிபதிகளின் நியமனத்தில் மத்திய - மாநில அரசுகளின் கருத்துகள் பெறப்பட்டாலும், மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பே இறுதி முடிவு எடுக்கிறது என்பதை அனைவரும் அறிவர். சட்டமியற்றும் அமைப்பு, நிர்வாக அமைப்பு, நீதித்துறை என்று அரசின் ஒவ்வோர் அங்கத்துக்கும் இடையிலான அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு இதற்கு அடிப்படையாக இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் அரசமைப்புச் சட்டமே தகுதியை நிர்ணயித்திருக்கிறது. அதன்படிதான் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுவருகிறார்கள். குருமூர்த்தி, அரசமைப்புச் சட்டத்தையும் தாண்டி, தகுதி என்று எதைச் சொல்ல வருகிறார்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சண்முகசுந்தரம்.

பரந்தாமன்
பரந்தாமன்

இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் பரந்தாமனிடம் பேசினோம். ``கருத்துச் சுதந்திரம் என்பதற்கு ஓர் எல்லை இருக்கிறது. ஒருவரைக் காயப்படுத்துவதும், துன்புறுத்துவதும், அவமானப்படுத்துவதும் கருத்துச் சுதந்திரம் கிடையாது. தன் பேச்சுக்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்திருக்கிறார். `நீதிபதிகள் குறித்து அந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை’ என்றும், `நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பற்றித்தான் அப்படிச் சொன்னேன்’ என்றும் குருமூர்த்தி விளக்கம் சொல்லியிருக்கிறார். அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டரீதியிலும் அதை அங்கீகரிக்க முடியாது.

`தகுதி இல்லாதவர்கள்தான் நீதிபதிகளாக வருகிறார்கள்’ என்று அவர் சொல்லும் கருத்து, இட ஒதுக்கீட்டை மனதில் வைத்துச் சொல்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. தற்போது பதவியிலிருக்கும் நீதிபதிகள், தன்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துவிடுவார்களோ என்கிற பயத்தில்தான் குருமூர்த்தி தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். நீதித்துறையை விமர்சித்ததற்காக முன்னாள் நீதிபதி கர்ணன் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். குருமூர்த்தியிடமும் அதே அணுகுமுறையைத்தான் காண்பிக்க வேண்டும்.

`தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி’... ஸ்டாலினின் எதிர்வினைகள் அவசியமா, அநாவசியமா?

`நீதிபதி பதவிக்கு விண்ணப்பம் செய்கிறவர்கள்’ என்று சொன்னதன் மூலம் குருமூர்த்தி இதை மேலும் சிக்கலாக்கியிருக்கிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டால், அவரைச் சிறைக்கு அனுப்ப முடியும். அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க முடியும். இந்த வழக்கில் குருமூர்த்தியைச் சிறைக்கு அனுப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

ஓராண்டுக்கு முன்பாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். அதற்காக டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து குருமூர்த்திமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவுசெய்தது. உடனே, தான் வெளியிட்ட கருத்துக்காக குருமூர்த்தி ட்விட்டரில் வருத்தம் தெரிவித்தார்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

தற்போது நீதித்துறையை அவமதிக்கும் வகையில் குருமூர்த்தி பேசிய அந்த மேடையில், பா.ஜ.க-வின் தலைவர் ஜெ.பி.நட்டாவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, பா.ஜ.க-வின் தேசியச் செயலாளராக இருந்த ஹெச்.ராஜா, உயர் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். அதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தன் பேச்சுக்காக நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா மன்னிப்பும் கோரினார். அதையடுத்து, தண்டனையிலிருந்து அவர் தப்பினார்.

குருமூர்த்தி மீது சேரன்மாதேவி காவல் நிலையத்தில் புகார் பதிவுசெய்யப்பட்டதுடன், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் முறையிட்டிருக்கிறார். மனுவாகத் தாக்கல் செய்யுங்கள் என்று அந்த வழக்கறிஞரை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு