Published:Updated:

பி.ஜே.பியின் பின்னால் நிற்கப்போகிறாரா... என்னவாயிருக்கும் ரஜினியின் புதிய தர்பார்?

மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள் என்று சிலாகித்த ரஜினிகாந்தின் உவமானத்தை அங்கிருந்த கூட்டம் ரசித்தாலும் ‘ரஜினியா இப்படிப் பேசுகிறார்’ என்றே அனைவரின் புருவங்களும் உயர்ந்தன.

அமித் ஷா, ரஜினி
அமித் ஷா, ரஜினி

காஷ்மீர் மீதான பி.ஜே.பி அரசின் நடவடிக்கையைப் பாராட்டியிருக்கிறார், ரஜினி. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய 'கவனித்தல் கற்றல் வழிநடத்துதல்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், அமித் ஷாவை பகிரங்கமாகப் பாராட்டிப் பேசிய ரஜினிகாந்த், ‘‘உங்களின் மிஷன் காஷ்மீர் ஆபரேஷன் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறேன். இதுகுறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகச்சிறப்பு. அமித் ஷா யார் என்பதை மக்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். அதுகுறித்து நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்’’ என்றார்.

மோடி, அமித்ஷா
மோடி, அமித்ஷா

ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு, தமிழக மக்கள் யாரும் எதிர்பாராதது. வெங்கையா நாயுடுவுடன் தனக்கு இருக்கும் நட்பை, அவரது அரசியல் அனுபவத்தை மட்டும் பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, இந்தப் பேச்சு மிகப்பெரிய ஆச்சர்யத்தைக்கொடுத்தது. அ.தி.மு.க தவிர்த்து, தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கியதைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

புத்தக வெளியீட்டுக்கு முதல் நாள், தி.மு.க தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், மத்திய அரசின் முடிவை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த நாளே இப்படி அதிரடியாகப் பேசியிருக்கிறார் ரஜினி. அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தனது அரசியலின் அடிநாதம் ஆன்மிக அரசியல்தான் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். அதை முதன்முறையாக தற்போது வெளிக்காட்டியுள்ளார்.

காஷ்மீர் நடவடிக்கையைப் பாராட்டுவதாகத் தெரிவித்த ரஜினிகாந்த், அதை எதற்காக எந்தக் கோணத்தில் பாராட்டினார், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியதை வரவேற்கிறாரா, 370-வது பிரிவை ரத்துசெய்ததைப் பாராட்டினாரா, அவசர அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு அதிரடியாக வெளியிட்டதற்குத் தன்னுடைய வாழ்த்தை தெரிவிக்கிறாரா என்று தெளிவுபடுத்தவில்லை.

ரஜினி மோடி
ரஜினி மோடி

மோடியும் அமித் ஷா-வும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள் என்று சிலாகித்த ரஜினிகாந்தின் உவமானத்தை அங்கிருந்த கூட்டம் ரசித்தாலும், ‘ரஜினியா இப்படிப் பேசுகிறார்’ என்றே அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. ஆனால், ரஜினியின் ரசிகர்கள் பலரும் இந்தப் பேச்சை கொண்டாடினர். ரஜினி, தன் மனதில் உள்ளதை பேசக்கூடியவர், அரசியல் வாழ்வில் நடிக்கத் தெரியாதவர் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் சந்தோஷமாய்ப் பகிர்கிறார்கள்.

தலைவர், எவ்வித அழுத்தமும் இல்லாமல் தனது மனதில்பட்டதைத் தைரியமாகப் பேசியுள்ளார். இந்த நேர்மை அரசியலுக்குத்தேவை. தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் எங்கள் தலைவர்தான் என்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள் ரஜினி ரசிகர்கள். அதேநேரத்தில், ‘தலைவர் பி.ஜே.பி-யின் வலைக்குள் சிக்காமல் இருக்க வேண்டும்’ என்றும் பல ரசிகர்கள் தங்கள் ஆசையை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆன்மிக அரசியல் என்று ஏற்கெனவே தனது அரசியல் பயணத்தின் நோக்கத்தை தெரியப்படுத்தியுள்ள ரஜினி, அது இந்து மதம் சார்ந்த ஆன்மிகமா அல்லது அனைத்து மதம் சார்ந்த ஆன்மிக அரசியலா என்பதை இதுவரை தெளிவுபடுத்தாமல் இருந்தார். இப்போது, அவரது பாதை பி.ஜே.பி-யின் அரசியலை ஒட்டியது என்பது தெளிவாகியுள்ளது. காஷ்மீர் விஷயத்தில் அமித் ஷா-வை அவர் வியந்து புகழ்ந்திருப்பது, அவர் பி.ஜே.பி-யுடன் இணைந்து கைகோக்கத் தயாராகிவிட்டார் என்பதையே கோடிட்டுக்காட்டியுள்ளது.

ரஜினி
ரஜினி

ரஜினி மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்... ‘‘தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க இரண்டு திராவிடக் கட்சிகளுமே சிறுபான்மையினரை பகைத்துக்கொள்ளாமல் தேர்தல் அரசியல் செய்துவருகின்றன. பி.ஜே.பி, வடமாநிலங்களில் இந்து வாக்குவங்கியை ஒருங்கிணைத்து எப்படி வெற்றிபெற்று வருகிறதோ, அதேபோல தமிழகத்தில் இந்து வாக்குவங்கியை ஒருங்கிணைக்க ஒருமுகம் தேவைப்படுகிறது. அதற்கு, ரஜினியை பி.ஜே.பி தேர்ந்தெடுத்திருக்கிறது.

இதனால், ரஜினி பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவராகிவிடுவாரோ என்று அர்த்தமில்லை. அவர், ஒரு தனித்துவமான இயக்கத்தையோ கட்சியையோ ஆரம்பிப்பார். அந்த இயக்கம், பிரச்னைகளின் அடிப்படையில் பி.ஜே.பி-யை ஆதரிக்கும். ரஜினியின் அரசியல் ஆலோசகராக குருமூர்த்தி இருந்து வருகிறார். தற்போதைய ரஜினியின் பேச்சுக்கு அவரும் ஒரு காரணமாக இருக்கலாம். அதற்காக, அவரது வழிகாட்டுதலின்படியே அவர் முழுமையாக நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது’’ என்றனர்.

ரஜினி இந்தக் கருத்தைத் தெரிவித்ததன் பின்னணியில் இன்னொரு விஷயத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாகத் தன் கருத்தைப் பதிவுசெய்திருந்தார். ‘‘மத்திய அரசு, ஜனநாயகப் படுகொலையைச் செய்துள்ளது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்துள்ளனர். இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். சர்வாதிகாரப் போக்குடன் இந்த அரசு நடந்துகொண்டுள்ளது’’ என்று கமல் பொங்கியிருந்தார். அதற்கு நேரெதிராக ரஜினிகாந்த் காஷ்மீர் பிரச்னையில் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

கமல், ரஜினி
கமல், ரஜினி

‘‘ஜெயலலிதாவும் தன் மனத்தில் பட்டதைச் செய்வார். பெரும்பாலும் அது அவருக்கு சாதகமாக இருந்தது. தலைவரும், சரியாக இருந்தால் அது சரியென்றும் தவறாக இருந்தால் அது தவறு என்றும் உறுதியாகக் கூறுவார். அரசியலில் அந்த தைரியம் முக்கியம். அதை இப்போது ரஜினி மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார். பணமதிப்பிழப்பு விவகாரத்திலும் அதை வரவேற்றார் ரஜினிகாந்த்.

அதேநேரத்தில், புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரித்திருந்தார். அதனால், ரஜினி தன்னுடைய தனித்துவத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்’’ என்றும் ரஜினியின் கருத்துகளுக்கு பல்வேறு விளக்கங்களையும் அளிக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

பி.ஜே.பிகாரர்களிடம் பேசினால், இந்தப் பேச்சுக்கு வேறு அர்த்தம் கிடைக்கிறது. ‘‘சமீபத்தில் நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி இடம் பெற்றுள்ள அ.தி.மு.க கூட்டணிக்கு நான்கு லட்சத்துக்கு மேல் வாக்குகள் கிடைத்துள்ளன. தி.மு.க-வுக்கு கிடைத்த வாக்குகளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவை சிறுபான்மையினரின் வாக்குகள். தங்கள் கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள், இந்து வாக்குகள்தானா என்பதை ஆய்வுசெய்யுமாறு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அது உறுதியானால், தமிழகத்தில் தங்கள் அரசியலுக்கு ஒரு சிறு பொறி கிடைத்துள்ளதாக பி.ஜே.பி கணக்குப்போடுகிறது. சில நாள்களுக்கு முன்பு, கன்னியாகுமரியில் பி.ஜே.பி உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தவந்த மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘எப்படி திரிபுரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பி.ஜே.பி வெற்றிபெற்றதோ அதுபோல தமிழகத்திலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம். அதற்கான வேலைகளில் தங்கள் கட்சி முழுமூச்சுடன் செயல்படும்’ என்று பேசியுள்ளார்.

அந்த வேளை ரஜினி மூலமாகத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில், பி.ஜே.பி-யின் தொலைதுார இலக்கை அடைவதற்கு ரஜினியைப் பயன்படுத்த அமித் ஷா நினைக்கிறார். அந்த முயற்சி வெற்றியடைந்தால், வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலிலேயே தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை எல்லோரும் பார்க்கலாம்’’ என்றனர், பி.ஜே.பி நிர்வாகிகள்.

ஜெயலலிதா, ரஜினி
ஜெயலலிதா, ரஜினி

ஆனால், காஷ்மீர் பற்றிய ரஜினியின் கருத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்வினைகளும் இருப்பதை மறுக்க முடியாது. . நடிகர் விஜய் சேதுபதி, ‘‘பெரியார் அன்னைக்கே சொல்லிட்டாரு. அவங்கவங்க பிரச்னைகளுக்கு அவங்கவங்கதான் தீர்வு காண முடியும். உங்கள் வீட்டின்மீது நான் அக்கறை செலுத்தலாம், ஆனால் ஆளுமை செலுத்த முடியாது, கூடாது. காஷ்மீர் விவகாரத்தில், மத்தியஅரசின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை’ என்று பேசியிருக்கிறார்.

திருமாவளவன் தொடங்கி, விஜய் சேதுபதி வரை திரும்பிய பக்கமெல்லாம் பி.ஜே.பி-யின் நடவடிக்கைகுறித்து கடும் விமர்சனங்கள் வலம்வரும் நிலையில், ரஜினி இப்படிச் சொன்னது, தன்னுடைய அரசியல் சார்பு நிலையை அம்பலப்படுத்தும் முயற்சியா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. அமித் ஷா-வையும் மோடியையும் கிருஷ்ணரும் அர்ஜுனனும் போல என்று சொன்ன ரஜினி, அதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்கள் மட்டுமே அறிந்தது என்றும் சொல்லியிருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் ரஜினி யார்... அது, அவருக்கு மட்டுமே அறிந்த ரகசியமோ?