Published:Updated:

`மதுக்கடை அங்கேயே இருக்கட்டும்; பள்ளிக்கூடத்தை மாத்திடுங்க!’ - கலெக்டரிடம் கோரிக்கை வைத்த பெண்

கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனு
கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனு

`இந்த இடத்துல மதுக்கடையைத் திறக்காதீங்க’ன்னு பள்ளிக் குழந்தைகள் கூட ஒரு தடவை கலெக்டரிடம் மனு கொடுத்திருக்காங்க.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா மைலம்பாடி கிராமத்தில், விவசாய நிலத்தில் மதுக்கடையைத் திறக்கக்கூடாது (மதுக்கடை எண்- 3571) என்பது கடந்த ஒரு வருட காலமாக தகிக்கும் பிரச்னையாக இருந்துவருகிறது. அதிகாரிகளிடம் மனு அளிப்பதில் தொடங்கி, பல கட்டப் போராட்டங்களையும் நடத்திய மைலம்பாடி கிராம மக்கள, இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.`விவசாய நிலங்களில் மதுக்கடைகளைத் திறக்கலாமா’ என சென்னை உயர் நீதிமன்றமும் சமீபத்தில் அரசிடம் கேள்வி எழுப்பியது. இப்படி பலகட்ட எதிர்ப்புகள் இருந்தும், போலீஸார் துணையுடன் அந்த டாஸ்மாக் திறக்கப்பட்டிருக்கிறது. இது, அந்தக் கிராம மக்களிடம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புகார் மனுவுடன் தமிழரசி
புகார் மனுவுடன் தமிழரசி

இதையடுத்து, 'ஈரோடு மக்கள் பாதை' அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் `மதுக்கடை அங்கேயே இருக்கட்டும். பள்ளிக்கூடத்தை அங்கிருந்து மாற்றிடுங்க ஐயா’ எனப் பரபரப்பான புகார் மனுவைக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து தமிழரசியிடம் பேசினோம். ``இந்த மதுக்கடைக்கு அருகே வெறும் 300 மீட்டர் தூரத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றும், பால் சொஸைட்டி ஒன்றும் இருக்கின்றன. பெண்களுக்கும், பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளுக்கும் இந்த டாஸ்மாக் கடையால் பாதுகாப்பு இருக்காது எனக் கடந்த ஒரு வருடமாகக் கடுமையாகப் போராடினோம். மதுபோதையில் இருப்பவர்களால்தான் சிறுமிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அப்படியிருந்தும் போலீஸார் பாதுகாப்போடு இன்றைக்கு அந்த டாஸ்மாக் கடையைத் திறந்திருக்கின்றனர்’' என்றார் ஆவேசமாக.

Vikatan

தொடர்ந்து பேசியவர்,``விவசாய நிலத்தில் மதுக்கடையைத் திறக்க அனுமதிக்கக்கூடாது என நாங்கள் போராடுகிறோம். ஆனால், பவானி தாசில்தார் உதவியோடு அந்த விவசாய நிலத்தை தரிசு நிலம் என வகைப்பாட்டை மாற்றியிருக்கின்றனர். அரசாங்கத்துக்குப் பள்ளிகளோ மக்களோ தேவையில்லை. யாரோ எப்படியோ போங்க, எங்களுக்கு மதுக்கடைதான் வேணும்னு நினைக்கிறாங்க. மக்கள் பக்கம் நிக்க யாரும் இல்லை. மதுக்கடைகள்மீது காட்டும் அக்கறையை மக்கள்மீது இந்த அரசு காட்டுவதேயில்லை.

டாஸ்மாக் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு
டாஸ்மாக் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு

எல்லா இடத்துலயும் படிப்படியாக மதுக்கடைகளை மூடுறோம்னு சொல்லிட்டு திறந்துக்கிட்டு வர்றாங்க. அதேநேரத்துல, பள்ளிக்கூடத்தை மூடிக்கிட்டு வர்றாங்க. `இந்த இடத்துல மதுக்கடையைத் திறக்காதீங்க’ன்னு பள்ளிக் குழந்தைகள்கூட ஒரு தடவை கலெக்டரிடம் மனு கொடுத்திருக்காங்க. ஆனா, எதையுமே அரசு பொருட்படுத்தலை. அரசு, அந்த மதுக்கடையை மூடாவிட்டாலும் பரவாயில்லை. அங்குள்ள பள்ளிக்கூடத்தை இடம் மாற்ற உத்தரவிட்டு, அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளையாவது, குறிப்பாகப் பெண் குழந்தைகளையாவது குடிகாரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுகிறேன்” என்றார்.

பின் செல்ல