Published:Updated:

`எங்கள் பெயரால் அதைச் செய்யாதீர்கள்!’ - தெலங்கானா என்கவுன்டரைக் கண்டிக்கும் பெண் வழக்கறிஞர்கள்

பெண் வழக்கறிஞர்கள் சிலர் இந்த என்கவுன்டருக்கு எதிராகத் தங்களது சமூக வலைதளங்களில் கொதித்துள்ளனர்.

தெலங்கானா போலீஸார்
தெலங்கானா போலீஸார்

தெலங்கானா கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக் கொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரையும் அந்த மருத்துவர் இறந்து கிடந்த இடத்திலேயே வைத்து தெலங்கானா காவல்துறை என்கவுன்டர் செய்தது. இதுகுறித்து இந்திய அளவில் தெலங்கானா காவல்துறைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதேசமயம், `விசாரணையில்லாமல் சுட்டுக்கொல்வது நீதியல்ல' என்று மற்றொருபுறம் தெலங்கானா போலீசுக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சுடப்பட்டது குறித்து விசாரணை நடத்த கமிஷன் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் பெண் வழக்கறிஞர்கள் சிலர் இந்த என்கவுன்டருக்கு எதிராகத் தங்களது சமூக வலைதளங்களில் கொதித்துள்ளனர்.

தெலங்கானா என்கவுன்டர்
தெலங்கானா என்கவுன்டர்

தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பேசியுள்ள மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர், "தூண்டப்பட்ட என்கவுன்டர்களை என்றுமே ஏற்கமுடியாது. இது மக்களை திசைதிருப்புவதற்கான முயற்சி. பெண்களுக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில் மாநில அரசே வன்முறையில் இறங்கியுள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு வழக்கறிஞரான ரெபெக்கா மேமன், ``கூட்டு மனசாட்சி என்கிற பெயரில் போலீஸ் சுட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும். சுடப்பட்டவர்கள்தான் அந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் அல்லது சி.சி.டி.வி தடயங்கள் எதையும் காவல்துறை பார்த்ததா? எவ்வித விசாரணையும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்றிருந்த நான்கு பேரை போலீஸ் சுட்டுக்கொன்றிருக்கிறது. பெண்களின் பெயரால் இதைச் செய்ய வேண்டாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பெண் வழக்கறிஞர்கள்
பெண் வழக்கறிஞர்கள்

மற்றொரு வழக்கறிஞரான கருணா நந்தி, ``கொல்லப்பட்ட நான்குபேரும் அப்பாவியா என்பது இனி நமக்குத் தெரியப்போவதில்லை. ஒருவேளை உண்மையாகப் பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் மேலும் பல பெண்களைத் தாக்கிக் கொல்வதற்குச் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தெலங்கானா என்கவுன்டர்
தெலங்கானா என்கவுன்டர்

இந்த என்கவுன்டர் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் செயற்பாட்டாளர்கள் பலர், தங்களது பதிவுகளில், "தாமதப்படுத்தப்படும் நீதியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அதனால்தான் இதுபோன்ற போலீஸ் வன்முறைகளை ஆதரிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.