Published:Updated:

மாவட்டம் தோறும் மக்கள் வருத்தம்... தமிழ்நாட்டுக்குத் தேவை நிர்வாக சீர்திருத்தம்!

மாவட்டங்கள் பிரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
மாவட்டங்கள் பிரிப்பு

ஒரே நேரத்தில் நிகழ வேண்டும் மாவட்டங்கள் பிரிப்பு

மாவட்டம் தோறும் மக்கள் வருத்தம்... தமிழ்நாட்டுக்குத் தேவை நிர்வாக சீர்திருத்தம்!

ஒரே நேரத்தில் நிகழ வேண்டும் மாவட்டங்கள் பிரிப்பு

Published:Updated:
மாவட்டங்கள் பிரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
மாவட்டங்கள் பிரிப்பு

செங்கல்பட்டு, தென்காசி ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து, மாநிலம் தழுவிய அளவில் புதிய மாவட்டங்கள் பிரிப்பது குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் எங்கள் பகுதியையும் பிரித்துப் புதிய மாவட்டத்தை அறிவிவிக்க வேண்டும் என்று கோரிக்கைக் குரல் எழுப்புகிறார்கள். மயிலாடுதுறை உள்ளிட்ட சில பகுதிகளில் போராட்டம் வரையிலும் சென்றனர். சரி... மாவட்டங்கள் பிரிப்பு சரிதானா, அப்படி எனில் அவை எப்படி நிகழ வேண்டும் என்று பார்ப்போம்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல்வேறு பிரிவினைகள், இணைப்புகளைச் சந்தித்த வண்ணம்தான் இருக்கிறது. பல புதிய மாநிலங்களும் புதிய மாவட்டங்களும் உருவாகி வருகின்றன. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், சென்னை மாகாணத்தில் மெட்ராஸ், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்கள் இருந்தன.

1969-ம் ஆண்டு சென்னை மாநிலமானது, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது. அதற்கு முன்னரே 66-ல் சேலத்தைப் பிரித்து தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 74-ல் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, 79-ல் கோவையில் இருந்து ஈரோடு, 85-ல் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதே ஆண்டில் மீண்டும் மதுரை பிரிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் உதயமானது.

மாவட்டம் தோறும்  மக்கள் வருத்தம்... தமிழ்நாட்டுக்குத் தேவை நிர்வாக சீர்திருத்தம்!

86-ல் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் உருவானது. 89-ல் வட ஆற்காடு மாவட்டமானது, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 91-ல் தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் உதயமானது. 93-ல் தென் ஆற்காடு மாவட்டமானது கடலூர், விழுப்புரம் மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

95-ல் திருச்சியிலிருந்து கரூர், பெரம்பலூர் மாவட்டங்களும், 96-ல் மதுரையிலிருந்து தேனி மாவட்டமும், 97-ல் சேலத்தி லிருந்து நாமக்கல் மாவட்டமும் உருவாக்கப்பட்டன. அதே ஆண்டில் அப்போதைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேலும், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் மாவட்டம் உதயமானது.

2001-ல் பெரம்பலூரிலிருந்து அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு, 2002-ல் பழையபடி இணைக்கப்பட்டு, 2007-ல் மீண்டும் பிரிக்கப்பட்டது.

2004-ல் தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி உருவானது. 2009-ல் கோவை, ஈரோடு மாவட்டங் களிலிருந்து திருப்பூர் மாவட்டம் உருவானது. இதையடுத்து தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 32 ஆக இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மற்றும் தற்போது அறிவிக்கப் பட்டுள்ள செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்தால், இந்த எண்ணிக்கை 35 ஆக உயரும்.

‘‘காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைப் பிரிக்கும் தமிழக அரசின் முடிவு மிகவும் சரியான நடவடிக்கை. நிலப் பரப்பின் அடிப்படையில் தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம்தான். மொத்தம் 6,810 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தில் மிக அதிகமாக 16 வட்டங்கள் உள்ளன. 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரப்பட்டு வந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் நிலப்பரப்பில் சற்று சிறியதாக இருந்தாலும், மக்கள் தொகையில் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாவட்டம்’’ என்று அரசின் முடிவைப் பலரும் வரவேற்கின்றனர்.

புதிய மாவட்ட அறிவிப்பின்போது, “வேறு சில புதிய மாவட்ட கோரிக்கைகள் பற்றி அரசு ஆய்வு செய்து முடிவெடுக்கும்” என்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கூறியிருந்தார். இதையடுத்து தமிழகம் முழுக்கப் பல்வேறு புதிய மாவட்ட கோரிக்கைகள் வரிசைகட்டுகின்றன.

தமிழகத்தில் மிக நீண்ட எல்லைகளைக் கொண்டது, வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்ல 220 கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மாவட்டத்தின் எந்த எல்லையிலிருந்து வேலூருக்குச் செல்வதாக இருந்தாலும் குறைந்தது 100 கி.மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும். அதனால், வேலூர் மாவட்டத்தையும் மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக எழுப்பப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தைப் பிரித்து வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என மூன்று புதிய மாவட்டங்களை அமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பல ஆண்டுகளாக பா.ம.க-வினரும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ‘‘மாவட்ட தலைநகரத்தை அடைவதற்கு மக்கள் நீண்ட தூரம் பயணப்படுவது நிர்வாக வசதிக்கு ஏற்றதல்ல. எனவே, உடனடியாக வேலூரை மூன்றாகப் பிரிக்க வேண்டும்’’ என்று சற்றே கடுமையானக் குரலில் கோரிக்கை வைக்கின்றனர் அவர்கள். ‘‘திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகியவையும் ஐந்தாயிரம் சதுர கி.மீ-க்கு அதிகமான பரப்பளவு கொண்ட பெரிய மாவட்டங்கள். ஒரு மாவட்டம் இந்த அளவுக்கு பரந்து விரிந்துகிடப்பது அதன் வளர்ச்சிக்கு வழி வகுக்காது. பெரிய மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை அதிகம் உருவாக்க வேண்டும்’’ என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

நாடாளுமன்ற தொகுதியை அடிப்படையாகக் கொண்டு மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்களும் இன்னொரு பக்கம் கேட்கிறது. ‘‘ஒரே மாவட்ட எல்லைக்குள் ஒரு நாடாளுமன்ற தொகுதி அமைந்துவிடுவதில்லை. நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகள் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கின்றன. இதனால் நாடாளுமன்ற தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்துதான் திட்டங்களை செயல்படுத்தியாக வேண்டும். அப்போது வெவ்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் ஒரு எம்.பி செயல்பட வேண்டியிருக்கிறது. ஒரு மாவட்டத்துக்குள் இரண்டு அல்லது மூன்று நாடாளுமன்ற தொகுதியின் பகுதிகள் வருவதால், மாவட்ட ஆட்சியரும், இரண்டு அல்லது மூன்று எம்.பி-க்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது. இது மேலும் நிர்வாகச் சிக்கலை அதிகரிக்கிறது. இந்தச் சிக்கல்களைப் போக்க நாடாளுமன்ற தொகுதிவாரியாக மாவட்டங்களை அமைப்பதுதான் தீர்வு’’ என்பது அவர்களின் குரலாக இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில், ஆரம்பத்தில் 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அவை தற்போது 31 மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன. ஆந்திரத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, அந்த மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாகப் பிரிக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கரூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்துமே பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரியவையாகவே உள்ளன. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து உடுமலை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைப் பிரித்து பசுமை மாவட்ட மாகப் பொள்ளாச்சியை அறிவிக்க வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. கும்பகோணம், மயிலாடுதுறை மக்களும் தங்கள் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

எனவே, ஒவ்வொரு மாவட்டமாகப் பிரிப்பதைவிட, அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, புதிய மாவட்டங் களை ஒரே நேரத்தில் உருவாக்குவதுதான் சரியான நடவடிக்கை... மிகச் சிறந்த நிர்வாக சீர்திருத்தம். இதைத்தான் ஆந்திரத்திலும் தெலங்கானாவிலும் செய்திருக்கிறார்கள். புதிய மாவட்டங்களை உருவாக்கவும் மாவட்டங்களை மறுவரையறை செய்யவும் தமிழக அரசு உடனடியாக வல்லுநர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்.

மயிலாடுதுறை மல்லுக்கட்டு!

செங்கல்பட்டு, தென்காசி மாவட்ட அறிவிப்புகளை அடுத்து, கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மக்களும் தனி மாவட்டம் கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். வர்த்தக சங்கத்தினரின் கடையடைப்பு, வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு, வீட்டுக்கு வீடு கறுப்புக்கொடி என்று போராட்டங்கள் தொடர்கின்றன. முப்பது ஆண்டுகளாகத் தனி மாவட்டம் கேட்டுப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாததுதான் அதற்குக் காரணம்.

‘‘நாகை மாவட்டம் மிக நீளமான மாவட்டம். அதன் வட எல்லையான கொள்ளிடக்கரையில் இருந்து இருந்து தென் எல்லையான கோடியக்கரைக்கு ஒருவர் செல்ல வேண்டும் என்றால், பகல் முழுவதும் பயணப்பட வேண்டும். சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட தலைநகரான நாகைக்குச் செல்ல வேண்டும் என்றால், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியைக் கடந்துதான் சென்றாக வேண்டும். இப்படி சிக்கலான பூகோள அமைப்புடன் நாகை மாவட்டம் அமைந்துள்ளது. எனவே மயிலாடுதுறையைப் பிரித்து, அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைத்து புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கின்றனர்.