Published:Updated:

`இந்தியாவின் தலைசிறந்த குழந்தை மருத்துவர் கஃபில், அவருக்கே இந்த நிலையா?'- கொதிக்கும் சகோதரர் சமர் கான்

கஃபில் கான்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கஃபில் கான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

`இந்தியாவின் தலைசிறந்த குழந்தை மருத்துவர் கஃபில், அவருக்கே இந்த நிலையா?'- கொதிக்கும் சகோதரர் சமர் கான்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கஃபில் கான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

Published:Updated:
கஃபில் கான்

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரழக்க நேர்ந்தது. இந்த விபத்துக்கு அங்கு மருத்துவராக இருந்த கஃபில் கான்தான் காரணம் எனக் கூறி அவரைக் கைது செய்து பணியிடை நீக்கம் செய்தது உ.பி அரசு. இதை எதிர்த்து சட்டரீதியாக அவருடைய குடும்பம் போராடியது. இறுதியில் உ.பி அரசு நடத்திய துறை ரீதியான விசாரணையில் கஃபில் கான் மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவரை விடுதலை செய்தது. ஆனால், அதற்குப் பிறகு புதிய விசாரணைக்கு உத்தரவிட்டது. கஃபில் கானை உ.பி அரசு தொடர்ந்து பழிவாங்கி வருவதாக அவருடைய குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

கஃபில் கான் குடும்பம்
கஃபில் கான் குடும்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், கஃபில் கானின் பணியிடை நீக்கமும் திரும்பப் பெறப்படவில்லை. உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கினார் கஃபில் கான். இடைப்பட்ட காலங்களில் உ.பி, பீகார் போன்ற மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து அதற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுப்பெற்றன. அதில் உத்தரப்பிரதேசமும் முன்னணியில் இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் அவர்களுடைய நிகழ்வில் பேச கஃபில் கானை அழைத்திருந்தனர். அதில் கலந்துகொண்டு சி.ஏ.ஏ தொடர்பாகப் பேசினார் கஃபில் கான். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அலிகரில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாக கஃபில் கான் செயல்பட்டார் போன்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தன. உ.பி அரசு பழிவாங்கும் எண்ணத்திலே அவரைக் கைது செய்துள்ளதாக அவருடைய குடும்பத்தினர் கண்டித்தனர். இதையடுத்து, நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. இதையடுத்து, அவர் மீது புதிதாக தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஃபில் கான்
கஃபில் கான்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் விசாரணையே இல்லாமல் ஒருவரை 12 மாதங்கள் வரை சிறையில் வைக்க முடியும். அவர் எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதற்கான காரணத்தை 10 நாள்கள் வரை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஒருவர் அச்சுறுத்தலாக இருக்கிறார் என அரசு கருதினாலே அவரை சிறை வைத்திட இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது. இந்தச் சட்டம் அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தியாவின் கறுப்புச் சட்டங்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், கஃபில் கான் விடுதலைக்காகப் போராடி வரும் அவருடைய சகோதரர் சமர் கானிடன் பேசினோம். அவர் நம்மிடம் கூறுகையில், "ஜாமீன் வழங்கப்பட்டு 3 நாள்களாகியும் கஃபில் கான் விடுதலை செய்யப்படவில்லை. அவரின் விடுதலைக்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டபோதுதான் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் புதிதாகப் போடப்பட்டிருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. உ.பி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்கிறோம். இப்போது மட்டுமல்ல 2017-ம் ஆண்டிலிருந்து உ.பி அரசு கஃபில் கானை குறிவைத்து வருகிறது. கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் அரசாங்கத்தாலே குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்ட பிறகும் கஃபில் கானை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே புதிய விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அழைப்பை ஏற்றுத்தான் கஃபில் கான் அங்கு சென்று சி.ஏ.ஏ பற்றி பேசினார். நாடு முழுவதும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவரோடு யோகேந்திர யாதவ் போன்ற பலரும் அந்த நிகழ்வில் பேசினர். ஆனால், கஃபில் கான் மீதுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கஃபில் கான்
கஃபில் கான்

அலிகரில் அமைதியைக் குலைக்கின்ற அளவுக்கு கஃபிலுக்கு அங்கு செல்வாக்கு கிடையாது. அதையும் சட்டரீதியாக எதிர்கொண்டு வென்றுவிட்டோம். தற்போது உ.பி அரசு மீண்டும் அவர் மீது புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறை வைத்திருக்கிறது. இதையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம். எங்களுடைய போராட்டம் முடியாது. எங்கள் குடும்பம் உளவியல் மற்றும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. அவர் பணிநீக்கத்தில் உள்ளதால் ஊதியமும் முழுமையாகக் கிடைப்பதில்லை. இத்தனைக்கும் மத்தியில்தான் கஃபில் குழந்தைகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த குழந்தைகள் மருத்துவர்களில் கஃபிலும் ஒருவர். நாட்டுக்கு சேவை செய்ததற்கான பலனை நாங்கள் பெற்றுவிட்டோம். மனசாட்சி உள்ள அரசென்றால் கஃபிலை பழிவாங்கும்போது அவர் செய்த சேவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியும் கஃபில் கானுக்காக குரல் கொடுக்கவில்லை. எங்கள் போராட்டம் தொடரும். நீதித்துறையின் மீதுதான் நாங்கள் முழு நம்பிக்கையும் வைத்துள்ளோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism