
கொதிக்கும் நஞ்சப்பா சத்திரம் மக்கள்!
முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியாக பதவி வகித்துவந்த பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா மற்றும் 12 ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்தில் சிக்கிய சம்பவம் நிகழ்ந்து ஓராண்டைக் கடந்துவிட்டது. விபத்தில் சிக்கித் தவித்தவர்களைக் காப்பாற்ற குடங்களிலும், வாளிகளிலும் தண்ணீரைத் தூக்கிச் சுமந்து உதவிய நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களின் சேவையை அப்போது நாடே கொண்டாடியது. இதையடுத்து அந்த கிராம மக்களின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காக, 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், “ஓராண்டு கடந்தும் தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை” எனக் கொதிக்கிறார்கள் கிராம மக்கள்!

இது குறித்துப் பேசிய நஞ்சப்பா சத்திரம் கிராமத்தினர், “ஹெலிகாப்டர் விபத்து நடக்கும் வரை இப்படி ஒரு கிராமம் இருப்பதே அதிகாரிகள் பலருக்கும் தெரியாது. அடிப்படை வசதி கேட்டு அரசின் கதவுகளைத் தட்டித் தட்டி ஓய்ந்துபோயிருந்தோம். ஹெலிகாப்டர் விழுந்தபோது எங்கள் சக்திக்கு முடிந்த உதவிகளைச் செய்தோம். அதன் பிறகே எங்கள் குரல் வெளியுலகுக்குக் கேட்டது. அப்போது எங்கள் ஊரின் மேம்பாட்டுக்காக அரசு சார்பில் 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக ஊராட்சி அதிகாரிகள் உறுதியளித்தார்கள். ஓராண்டு முடிந்துவிட்டது... விபத்தால் சேதமடைந்த அதே வீடுகளில்தான் இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கிய அந்த 2.5 கோடி எங்கேதான் போச்சு... யாரிடம் கேட்பது?” என ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.
இது குறித்து வண்டிசோலை (அ.தி.மு.க) ஊராட்சித் தலைவர் மஞ்சுளா, “இதுவரை எங்கள் ஊராட்சிக்கு அந்த நிதி வரவில்லை. அதற்கான அறிவிப்புகூட வந்ததாகத் தெரியவில்லை” என முடித்துக்கொண்டார்.
குன்னூர் (தி.மு.க) ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுனிதா பேசும்போது, “நஞ்சப்பா சத்திரம் கிராம வளர்ச்சிக்கு 2.5 கோடி ரூபாயை ஹெலிகாப்டர் விபத்து சமயத்தில் அரசு அறிவித்தது உண்மைதான். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஓராண்டாகப் பெரிய அளவில் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இது குறித்து நேரில் ஆய்வுசெய்துவிட்டுப் பேசுகிறேன்” என்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திடம் பேசினோம். “ஊராட்சி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 78 பயனாளிகளைத் தேர்வுசெய்திருக்கிறோம். கூரைகளை மாற்ற மக்களிடம் விண்ணப்பங்களைக் கேட்டிருக்கிறோம். அனைத்துக் கோரிக்கைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்” என்றார்.
செய்த உதவிக்குக் கைம்மாறு கேட்கவில்லை. பாவம்... அந்த மக்கள் கேட்பது அவர்களுக்கான அடிப்படை உரிமை... கண்டுகொள்ளுமா அரசு?