
சிறப்புப் பரிசு தவா
ஊர்ப்பெருமை பேசுவதில் நமக்கு ஒரு தனி சுகம் உண்டு. உங்கள் ஊரைப் பற்றிய ‘அட’ போட வைக்கும் சிறப்பு விஷயங்களை சுவாரஸ்யமாக போட்டோ மற்றும் வீடியோக்களுடன் தொகுத்து எழுதி அனுப்பலாம். உங்கள் ஊர்ப்பெருமை தேர்வு பெற்றால் ரொக்கப் பரிசு ரூ.300. சிறப்பான ஊர்ப்பெருமைக்கு தவா பரிசு என்று அறிவித்திருந்தோம். அவற்றில் சிறப்புப் பரிசு தவா பெறும் ஊர்ப்பெருமை இதோ...
சென்னையின் பழைமையான, தனித்துவமான அடையாளம் பாரிஸ் கார்னர். இப்போது பாரி முனை. சென்னைவாசிகள் அத் தனை பேருக்கும் பாரிஸ் கார்னர் அத்துப்படி. சிறு வயதில் என் பாட்டனாருடன் அங்கே சென்றி ருக்கிறேன். ‘வெள்ளைக்காரன் காலத்துல இங்கேயிருந்துதான் டிராம் புறப்படும். அதோ தெரியுது பாரு... ஹைகோர்ட் மேல பெருசா ஒரு கோபுரம்... அதுதான் லைட் ஹவுஸ்’. இப்போதும் அந்தப் பகுதிக்குப் போகும்போதெல்லாம் அவர் குரல் என் காதில் ஒலிப்பது போன்ற பிரமை.
கிழக்கே வங்காள விரிகுடாக் கரையில், கப்பல்கள் எழுப்பும் பூம்... பூம்... சத்தம் அந்தப் பகுதிக்கே உண்டான பிரத்யேக அடையாளம். பாரிஸ் கார்னரின் என்றென்றும் நிலைத்திருக்கும் அடையாளமாக இருப்பது பூக்கடை. அப்போதெல் லாம் வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்து நிலையம் அங்கேதான் இருந்தது. மூட்டை முடிச்சுகளோடு ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், பேருந்திலும் நடந்தும் வெளியூருக்குச் செல்ல விரையும் பயணிகளைப் பார்ப்பதுகூட ரசனைக்குரியதாக இருக்கும்.
கொத்தவால் சாவடியைப் பார்க்காத அன்றைய சென்னைவாசி யாரும் இருக்க முடியாது. காய்கறி, பழங்கள் விற்கும் இந்த இடத்தைப் பார்த்தாலே மலைப் பாக இருக்கும். பூண்டிலிருந்து பூசணிக்காய் வரை அத்தனையும் கிடைக்கும். இங்கு பலசரக்குக் கடைகளும் உண்டு. எள்ளு முதல் எண்ணெய் வரை மொத்தமாக, சில்லறையாக விற்பனை யாகும். கட்சிக்கொடிகள், அழைப்பிதழ்கள், எழுது பொருள்கள், பைகள், பட்டாசுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தெருக்கள். மையமாக கொத்தவால் சாவடி.
அன்றைக்கு ‘லோன்ஸ் ஸ்கொயர்’ என்ற இடத்தில்தான் வாடகை குதிரை வண்டிகள், மூன்று சக்கர டெம்போக்கள் நின்றிருக்கும். பக்கத்திலேயே மினர்வா தியேட்டர். எல்லா கட்டடங்களின் முன் பகுதியையும், போவதற்கு வழியை மட்டும் விட்டுவிட்டு, பல குடும்பங்கள் ஆக்கிரமித்திருக்கும். அதை எந்த வியாபாரியும் தொல்லையாகக் கருதியது கிடையாது என்பதுதான் சென்னையின் சிறப்பு.

ஈவினிங் பஜார் எனப்படும் ‘பாய் கடை’ பகுதியில் டிரங்க் பெட்டி, படுக்கை, போர்வை, ஸ்வெட்டர், குடை, வெள்ளிப் பொருள்கள், பித்தளைச் சாமான்கள், அலுமினிய, பீங்கான் பாத்திரங்கள் எல்லாம் கிடைக்கும். ஒரு கல்யாணத்துக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் இந்த ஒரே இடத்தில் வாங்கிவிடலாம். அந்தப் பகுதியில்தான் புகழ் பெற்ற சைனா பல் மருத்துவக்கூடங்கள் இருந்தன.
அன்றைய மின்ட் ஸ்டீரிட், இன்றைய தங்கச்சாலை. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பின்பக்கம் தொடங்கி இன்றைய வள்ளலார் நகர் வரை விரியும் சாலை. மற்றொரு முக்கிய மான சாலை பிராட்வே. இந்தச் சாலை சைக்கிள், மூக்குக் கண்ணாடி விற்பனைக்கு பெயர்பெற்றது. இன்றைக்கும் அந்த விற்பனை நிற்கவில்லை. அப்போது இரண்டு, மூன்று சினிமா தியேட்டர்களும் இருந்தன. ஹைகோர்ட்டில் தொடங்கி ஸ்டான்லி மருத்துவமனை அருகே முடிகிறது பிராட்வே சாலை. பிராட்வேயைச் சுற்றியிருக்கும் சில முக்கியமான இடங்கள் செளகார் பேட்டை, யானை கவுனி, பர்மா பஜார். சௌகார் பேட்டையில் ராஜஸ் தான், குஜராத் ஆகியவற்றிலிருந்து இடம்பெயர்ந்து குடியேறிய வட மாநிலத்தவர்கள் அதிகம். உள்ளே நுழைந்தாலே தமிழ்நாட்டைத் தாண்டி வேறு மாநிலத்துக்குப் போனது போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும். யானை கவுனியில் சரக்கு களை ஏற்றி, இறக்கும் ரயில் முனையம். இங்கு கூலித் தொழிலாளிகளும் ரோட்டோரக் கடைகளும் ஏராளம். பர்மா பஜாரில் சென்ட் பாட்டிலிலிருந்து பென் டிரைவ் வரைக்கும் பல வெளிநாட்டுப் பொருள்கள் சல்லிசான விலைக்குக் கிடைக்கும் என்பதால் இன்றைக் கும் பர்மா பஜாருக்கென தனி வாடிக்கை யாளர்கள் உண்டு. அத்துடன் இந்தப் பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயிலும், கந்த கோட்டமும், அரண்மனைக்காரன் சாலையில் உள்ள சர்ச்சும் பிரசித்தம்.
இப்படிச் சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்புண்டு. அதேபோல் அவரவருக்கு அவரவர் ஊர் சொர்க்கம். சென்னைவாசியான என்னைப் பொறுத்த வரை பாரிஸ் கார்னரும், கொத்தவால் சாவடியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இன்றைக்கும் சொர்க்கம்தான்.
- மாலதி நாகராஜ், சென்னை-91
வாசகர்களே.... நீங்களும் எழுதி அனுப்பலாம்...
அனுப்ப வேண்டிய முகவரி:
சொர்க்கமே என்றாலும்...
அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com