தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

உயிரைப் பணயம் வைத்து உதவும் உள்ளங்கள்!

வாவ் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வாவ் பெண்கள்

வாவ் பெண்கள்

கொரோனா காலத்திலும் பிறர் நலனைக் கருத்தில்கொண்டு வீதியில் இறங்கி ஆதரவற்றவர்களுக்காக சேவை செய்து வருகிறார்கள் ஆயிரக்கணக்கான மக்கள். அப்படிப்பட்டவர்களுள் சிலர்தான் நாம் சந்தித்த பெண்கள்.

சென்னை

இல்லாமை இல்லை என மாற வேண்டும்!

புரசைவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாடும் 200-க்கும் மேற்பட்டோருக்குத் தினமும் மதிய உணவு கொடுத்து உதவுகிறார் பெரில் லோகன்.

பெரில் லோகன்
பெரில் லோகன்

“ஊரடங்கு காலத்தில் பசியில் வாடிய வயதான பாட்டி ஒருவர், உட்கார்ந்த நிலையில் இறந்துகிடப்பதைப் பார்த்து கலங்கினேன். அதனால் மார்ச் 1 முதல் தினமும் தொடர்ந்து 200-250 பேருக்கு உணவு கொடுக்கிறேன். ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் என் அலுவலகப் பணி பாதிக்காதவாறு, நானே வீட்டில் சைவம்/அசைவம் சமைத்து பார்சல் செய்து மதியம் மக்களைத் தேடிச் சென்று வழங்குகிறேன்.

அபிராமி மால் முன்புறமுள்ள பகுதியில் தினமும் நான் உணவு கொடுப்பேன். அதைப் பெற்றுக்கொண்டதும் அவர்கள் முகம் மலரும்'' என்கிற பெரில், 90 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 700 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளைக் கொடுத்தும் உதவியிருக்கிறார்.

சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம், வர்தா புயல், கஜா புயல் உட்பட தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றக் காலகட்டங்களில் மக்களுக்கு உதவி வருபவர் வி.ஆர்.ஜெயந்தி.

ஜெயந்தி
ஜெயந்தி
ஜெயந்தி
ஜெயந்தி

“நண்பர்கள், உறவினர்கள் கொண்ட குழு அமைத்து ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து அரசு அனுமதியுடன், ஆதரவற்ற 250 மக்களுக்குத் தினமும் முட்டையுடன்கூடிய மதிய உணவு கொடுக்க ஆரம்பித்தோம். பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகியவையே எங்கள் ஸ்பாட். இதைப்போல ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சிலருக் காகவது உதவி செய்தால், ‘இல்லாமை இல்லை’ என்ற நிலையை ஏற்படுத்த முடியும்!” - வேண்டுகோள் விடுக்கிறார் ஜெயந்தி.

பெரம்பலூர்

மகிழ்ச்சியின் சுவர்!

“கொரோனா நேரத்தில் அரசாங்க உதவி கிடைக்காமல் அல்லல்படும் குடும்பங்களுக்கு உதவுவது என முடிவெடுத்தோம்'' என்று தொடங்குகிறார் கிறிஸ்டியன் கல்லூரி இயக்குநரான டாக்டர் மித்ரா.

மித்ரா
மித்ரா

``என் நண்பர் சந்திரசேகர், சமூக சேவகி முத்துலட்சுமி ஆகியோர் இந்தப் பணியில் இணைந்தார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்பாளையம், எசனை, செட்டிக் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தினக்கூலிகள் ஏராளம். அவர்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கினோம்.

பெரம்பலூரில் நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் `மகிழ்ச்சியின் சுவர்' மூலமாகக் கிடைக்கும் துணிகளையும் அந்த மக்களுக்கு வழங்கினோம். தொடர்ந்து எங்களால் ஆன உதவிகளைச் செய்துவருகிறோம்” என்கிறார் மித்ரா.

திருவள்ளூர்

மனதுக்கு நிம்மதி!

சென்னையை ஒட்டி இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகள் பின்தங்கியநிலையில்தான் உள்ளன. இவர்களுக்குத் திருவள்ளூர் மாவட்டக் காவல் துறையுடன் இணைந்து சமூக ஆர்வலர் `வெளிச்சம்' ஷெரின் மற்றும் நண்பர்கள் குழு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

 `வெளிச்சம்' ஷெரின் மற்றும் நண்பர்கள் குழு
`வெளிச்சம்' ஷெரின் மற்றும் நண்பர்கள் குழு

“எங்களுடன் பூமிகா நிறுவனமும் சில தனிநபர்களும் இணைந்து காவல்துறை, ஊராட்சி மன்றத் தலைவர்களின் ஒப்புதலுடன் உதவி தேவைப்படும் குடும்பங்களைக் கண்டுபிடித்தோம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆம்மூர், எளியம்பேடு, ஆலாடு பகுதியில் உள்ள குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்கி வருகிறோம்.

ஊரடங்கு ஆரம்பித்த இரண்டாவது நாளில் இருந்து இரவு பகலாக பயணிக்கிறோம். மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது” என்கிறார் ஷெரின்.

திருச்சி

நம்மைப் போல போலீஸாரும் கஷ்டப்படுவாங்கல்ல...

ணவர் இறப்புக்குப் பிறகு உழைத்தால்தான் சாப்பாடு என்கிற நிலை சுதாவுக்கு. ஆனாலும், காவல்துறையினர் 250 பேருக்குத் தினமும் தேநீர், சுக்கு காபி, கம்பங்கூழ் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்.

 சுதா
சுதா

“குடும்பச் செலவுக்கு அப்பாவும் தம்பியும் மாதம் 8,000 ரூபாய் கொடுப்பார்கள். கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்து சம்பாதிக்கிறேன். ஊரடங்கு நேரத்தில் சிரமப்படும் காவலர்களுக்கு டீ, காபி, கம்பங்கூழ், சுக்கு காபி உள்ளிட்ட உணவுகளைக் கொடுக்கிறேன். மலைக்கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, ஜங்ஷன், காவிரி மேம்பாலம் உட்பட திருச்சியின் முக்கிய பகுதிகளில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு இவற்றைக் கொடுப்பேன். என் மனதை புரிந்துகொண்ட அக்கா, தம்பி உள்ளிட்ட சிலர் பொருளாதார ரீதியாக உதவி செய்ய முன்வரவே, இந்தப் பணியைத் தொடர்ந்து செய்ய முடிகிறது” என்கிறவர், டீ கேனுடன் கிளம்புகிறார்.

மதுரை

அறியாமை விலகினால் அச்சமும் விலகும்!

சிலம்பட்டி கல்லூரி மாணவி சந்திரலேகா, அதிகாரிகள் உதவியோடு கொரோனா விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

 சந்திரலேகா
சந்திரலேகா

``எங்கள் எழுமலை பேரூராட்சி மக்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருந்தது. காவல்துறையினர் கேட்டுக்கொண்டதால் ஒலிபெருக்கி மூலமும் வீடுவீடாகச் சென்றும் பொதுமக்களிடம் விழிப்ப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன். 1,000 மாஸ்க்குகளை நானே தைத்து மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளேன். வீட்டில் கபசுரக் குடிநீர் தயாரித்து சமூக இடைவெளியுடன் காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி வருகிறேன். அறியாமை விலகினால் அச்சமும் விலகும். மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வார்கள்!” என்கிறார் சந்திரலேகா.

தேனி

மக்களின் வயிறும் எங்கள் மனமும் நிறைகிறது!

``ஊரடங்குக்கு முன்புதான் சொந்த ஊரான தேனிக்கு வந்தேன். ஊரடங்கு அமலானதும், நகரில் பாதுகாப்புப் பணியிலுள்ள காவலர்களுக்கு மாலை நேரத்தில் டீ, காபி கொடுக்கலாம் எனத் திட்டமிட்டேன்'' என்கிற கல்பனா தினமும் ஒரு கேனில் டீயுடன் பயணித்தவர், பசியால் வாடிய ஆதரவற்றவர்களைக் கண்டதும் அவர்களுக்கும் உணவளிக்க ஆரம்பித்துவிட்டார்.

கல்பனா
கல்பனா

``தினமும் ஒரு கலவை சாதம், சுக்கு பால், காபி, டீ, பாதாம் பால் ஆகியவற்றை காவல்துறையினர் 40 – 50 பேருக்கும், ஆதரவற்றவர்களில் 90 – 100 பேருக்கும் கொடுக்கிறேன். உணவோடு 300 மி.லி தண்ணீர் பாட்டிலையும் தருகிறேன். மார்ச் 26-ம் தேதி இந்தப் பணிகளைத் தொடங்கினேன். ஒருநாளைக்கு 3,000 ரூபாய்வரை செலவாகிறது.

கல்பனா
கல்பனா

என் கணவர், பிள்ளைகள் பணம் கொடுப்பதைத் தவிர, உறவினர் சிலரும் முன்வந்து உதவுகிறார்கள். அதனால் எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. எங்களின் சிறு சேவையால் மக்களின் வயிறு நிறைகிறது. அதனால், எங்கள் மனமும் நிறைகிறது” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

ராமேஸ்வரம்

அவர்களே மூலக்காரணம்!

ராமேஸ்வரம் ஶ்ரீபர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் கோபிலட்சுமி. சுற்றுவட்டாரத் தீவுப் பகுதிகளில் பணியாற்றி வரும் சுகாதாரப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், ராமேஸ்வரத்தில் தங்கியுள்ள வடமாநில யாத்திரைவாசிகள், விளிம்பு நிலை மக்கள் என சுமார் 2,000 பேருக்கு முகக்கவசங்களை சொந்தமாகத் தயாரித்து வழங்கியிருக்கிறார்.

கோபிலட்சுமி
கோபிலட்சுமி
கோபிலட்சுமி
கோபிலட்சுமி

``என் எண்ணத்துக்கு கணவர் சண்முகநாதன் துணையாக நின்றார். அவர் உதவியுடன் இதுவரை 2,000 பேருக்கு நானே முகக்கவசங்களைத் தைத்து வழங்கியுள்ளேன். எங்கள் சொந்த பணத்தின் மூலம் இவற்றைத் தயாரித்து வழங்கினோம். இதை அறிந்த `பசுமை ராமேஸ்வரம்' உள்ளிட்ட சில அமைப்புகள் முகக்கவசம் தயாரிப்பதற்கான துணிகளைத் தந்து உதவுகின்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்து பலர் களத்தில் நிற்க, என்னால் அந்த அளவுக்கு செய்ய முடியவில்லை என்ற ஏக்கமே, இந்தளவுக்கான சேவையைச் செய்ய வைத்தது'' என்கிறார் கோபி லட்சுமி.

கோவை

மனதை அழுத்தும் சம்பவங்கள்!

``ஊரடங்கு உத்தரவுக்கு முன்பிருந்தே, மதர் டிரஸ்ட் அறக்கட்டளை மூலம் எளிய மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். ஊரடங்கு வந்தவுடன் எனக்கு முதலில் தோன்றியது மாற்றுத் திறனாளிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் நிலை. முகநூலில், `உதவி தேவைப்படுபவர்கள் என்னை அழையுங்கள்' எனப் பதிவிட்டேன். கோவை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி சந்திரசேகர் மூலம் விவரங்கள் பெற்று, என் மொபைலுக்கு தினமும் 500 போன்கால்கள் வந்தன.

கெளசல்யா
கெளசல்யா

காந்தி மாநகரில் ஆட்டிசம் பாதித்த பெண் ஒருவர் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் அவரிடம் மளிகைப் பொருள்களைக் கொடுத்ததும் அழுதேவிட்டார். எங்களுக்கும் அழுகை வந்துவிட்டது. இப்படி ஏராளமான மனதை அழுத்தும் சம்பவங்களை எதிர்கொள்கிறோம்.

ஆர்.எஸ்.புரத்தில் உள்ள என் அலுவலகம்தான் ஸ்பாட். அங்கிருந்து தயாரித்த உணவு மற்றும் மளிகைப் பொருள்களை எடுத்துச் சென்று பல்வேறு பகுதிகளில் கொடுத்து வருகிறோம். இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கியுள்ளோம். தினசரி ஆதரவற்ற மக்களுக்கு உணவும் வழங்கி வருகிறோம். கொரோனா பாதிப்பு முழுமையாக குணமடைந்து, விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும். அதுவரை எங்கள் பணி தொடரும்” என்கிறார் கெளசல்யா, உறுதியான குரலில்.

மனம் மலரட்டும்... சேவைகள் தொடரட்டும்!