Published:Updated:

கொரோனா வலையில் எடப்பாடி?

எடப்பாடி பழனிசாமி - தங்கமணி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி - தங்கமணி

- டாக்டர்கள் அட்வைஸ்... பதறும் கோட்டை

“ஐயா, சொன்னா கேளுங்க... நீங்க உடனே தனிமைப்படுத்திக்கோங்க...” - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உடல்நிலையைப் பராமரிக்கும் மருத்துவர் குழுவினர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட முதல்வருக்கு நெருக்கமானவர்கள் கடந்த சில நாள்களாக முதல்வருக்குச் சொல்லிவரும் அறிவுரை இது. அவர்களின் கவலைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. சமீப நாள்களில் முதல்வர் கொரோனா தொற்றுள்ளவர்களுடன் நடத்திய சந்திப்புகளே இவர்களின் எச்சரிக்கைக்குக் காரணம்!

இது குறித்து, முதல்வர் அலுவலக வட்டாரத்தில் முக்கிய நபர்கள் சிலரிடம் பேசினோம். “முதல்வர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிவந்த பெண்மணி ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். அடுத்து, முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தினமும் அலுவலகம் வந்துகொண்டிருந்தார். அவர் அமர்ந்திருக்கும் அறையில்தான் முதல்வரின் செயலாளர்கள் அமர்ந்திருப்பார்கள். திடீரென அவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். மொத்த அலுவலகமே அதிர்ச்சியில் உறைந்தது.

உடனடியாக நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனம் வரவழைக்கப்பட்டு, முதல்வர் அலுவலகத்திலிருந்த அனைத்துப் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அனைவருக்கும் `நெகட்டிவ்’ ரிசல்ட் வந்தது. முதல்வர் அலுவலக வளாகம் முழுவதையும் கிருமிநாசினி தெளித்து, சுத்தப்படுத்தினார்கள்.

முதல்வரைச் சந்திக்க வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், பார்வையாளர்கள் அனைவருக்கும் கொரோனா சார்ந்த சில பரிசோதனைகளைச் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்” என்றவர்கள் முதல்வரின் ரியாக்‌ஷன் பற்றியும் விவரித்தார்கள்.

“ஆனால், முதல்வர் இதைப் பெரிய அளவில் பொருட்படுத்துவதில்லை. அதிகாரிகள் அவரிடம், ‘ஐயா, நீங்க உங்க வீட்டைவிட்டு வெளியே வராமலேயே ரெகுலர் வேலைகளை கவனிங்க. தமிழக மக்களுக்கு நீங்க செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு’ என்று அறிவுறுத்தினார்கள். அதற்கு அவரோ, ‘எனக்கு சுகர், பி.பி எதுவும் இல்லை. அதனால கவலைப்படத் தேவையில்லை. பொது வாழ்க்கைக்கு வந்தாச்சு. யாரையும் பார்க்காம இருக்க முடியுமா? முடிஞ்சவரைக்கும் பரிசோதனை செஞ்ச பிறகுதான் மத்தவங்களை உள்ளே வர அனுமதிக்கிறோம். அதையும் தாண்டி அவங்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் நாம என்ன செய்ய முடியும்? அதனாலதான் ஏற்கெனவே, `இனிமே கடவுள்தான் பார்த்துக்கணும்’னு சொன்னேன். ஆனா, எதிர்க்கட்சிக்காரங்க அதையும் அரசியலாக்கிட்டாங்க...” என்று சிரித்தபடியே சொல்லி அதிகாரிகளைச் சமாதானப்படுத்தி விட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் முதல்வர் திருச்சிக்கு `விசிட்’ சென்றிருந்தார். அப்போது விவசாயச் சங்க பிரதிநிதியும், த.மா.க பிரமுகருமான புலியூர் நாகராஜன் முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அதற்கு அடுத்த சில நாள்களில் நாகராஜன் கொரோனா காரணமாக இறந்துபோனார். இதற்கிடையே, `முதல்வரைச் சந்திக்க நாகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் சென்றபோது அவர்களுக்குச் சரிவர பரிசோதனை செய்யப்படவில்லை’ என்ற சர்ச்சையும் எழுந்தது. இந்தத் தகவலும் கோட்டை வட்டாரத்தைப் பதற்றமடையச் செய்தது.

இவை எல்லாவற்றையும்விட அதிர்ச்சியடையவைக்கும் விஷயம் இதுதான். ஜூலை 8-ம் தேதி அன்று மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ராஜ்குமார் சிங், தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன்பாக, ‘அமைச்சர் தங்கமணி வந்திருக்கிறாரா?’ என்று அதிகாரிகளிடம் கேட்டார் முதல்வர். அதிகாரிகளோ தயங்கி நிற்க... ‘என்னங்க... என்ன பிரச்னை?’ என்று முதல்வரின் குரல் உயர்ந்தது. அதற்கு அவர்கள் மெதுவாக, ‘ஐயா... அவருக்கு கொரோனா பாசிட்டிவ். இன்னைக்கு காலை 9 மணிக்குத்தான் அவரைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க’ என்று சொல்ல... அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார் முதல்வர்.

ஏனெனில், அதற்கு முந்தைய நாளான ஜூலை 7-ம் தேதிதான் தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காகத் தனது துறை சார்பில் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியிருந்தார் தங்கமணி. தவிர, முதல்வருடன் அவர் சுமார் 20 நிமிடங்கள்வரை கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

முதல்வரின் நெருக்கமான அமைச்சர்கள் இருவர். ஒருவர் வேலுமணி. மற்றொருவர் தங்கமணி. கொங்கு மண்டலத்தில் முதல்வரின் செல்வாக்கைச் சரியாமல் பார்த்துக்கொள்வதில் இவர்களே முக்கியமானவர்கள். குறிப்பாக, முதல்வர் எந்தவொரு முக்கிய முடிவை எடுக்கும் முன்னரும் அமைச்சர் தங்கமணியிடம் ஆலோசனை கேட்பார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்தித்து அரசியல் பேச வேண்டுமென்றாலும், தங்கமணியைத்தான் அனுப்புவார். அதனால்தான் `தங்கமணிக்கு கொரோனா பாசிட்டிவ்’ என்றதும், மிகவும் அப்செட் அடைந்தார் முதல்வர்” என்று விரிவாகச் சொல்லி முடித்தார்கள்.

தங்கமணி
தங்கமணி

முதல்வரின் மருத்துவக்குழுவுடன் தொடர்புடைய சிலரிடம் பேசினோம். “முதல்வரின் உடல்நிலை தினமும் பரிசோதிக்கப்படுகிறது. வாரம் ஒரு முறை அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்கிறார்கள். கடைசியாக அவருக்குச் செய்யப்பட்ட பரிசோதனையிலும் நெகட்டிவ் ரிசல்ட்டே வந்துள்ளது. ஆனாலும், கொரோனா தொற்றுள்ளவர்களை முதல்வர் சந்தித்துள்ளதால், 14 நாள்கள் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத்தான் முதல்வருக்கு நெருக்கமான மருத்துவர்கள், சுகாதாரத்துறை உயரதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவருமே வலியுறுத்திவருகிறார்கள். அதற்கு அவர், ‘மக்களுக்காக உழைக்கிறேன். கடவுள் பார்த்துக் கொள்வார்’ என்றே சொல்லிவருகிறார். நாங்கள் அவருக்காகக் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம்” என்றார்கள் உருக்கமாக!

கொரோனா பாதித்த ஆளுங்கட்சியினர்

அ.தி.மு.க-வில் பலரும் கொரொனா தொற்றில் சிக்கியிருக்கிறார்கள். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சையில் இருக்கிறார். அமைச்சர் பெஞ்சமின் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இவர்களைத் தவிர, ஆளுங்கட்சியில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ-வான குமரகுரு, பெரும்புதூர் எம்.எல்.ஏ-வான பழனி, பரமக்குடி எம்.எல்.ஏ-வான சதன் ஆகியோரும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

தங்கமணிக்கு பாசிட்டிவ் ஏன்?

ஜூலை 3-ம் தேதி தங்கமணியின் மகன் தரணி உட்பட அவரின் குடும்பத்தினர் அனைவரும் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகிலுள்ள கோவிந்தம்பாளையம் கிராமத்திலிருந்து இரண்டு கார்களில் அமைச்சரின் சென்னை வீட்டுக்கு வந்துள்ளனர். அமைச்சர் தன் மகனுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தாராம். அடுத்த இரண்டு நாள்களில் தரணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், `பாசிட்டிவ்’ ரிசல்ட் வந்தது.

தொடர்ந்து ஜூலை 7-ம் தேதி அமைச்சர் தங்கமணிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்காக ‘சளி’ சாம்பிளைக் கொடுத்த பிறகே முதல்வரைச் சந்தித்து காசோலையை அளித்தாராம் தங்கமணி. அன்று இரவே தங்கமணிக்கும் `கொரோனா பாசிட்டிவ்’ என்று ரிசல்ட் வந்துள்ளது. உடனடியாக அந்த நிமிடமே மீண்டும் மறு பரிசோதனைக்கு சாம்பிள் அனுப்பினார் அமைச்சர். அதற்கான ரிசல்ட்டும் மறுநாள் ஜூலை 8-ம் தேதி வந்துவிட்டது. அதிலும் `கொரோனா பாசிட்டிவ்.’ உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அமைச்சர். இதையடுத்து, ஊரிலிருந்து வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் அமைச்சரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும், கார் டிரைவருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. அவர்களும் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டார்கள்.

கலக்கத்தில் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள்!

சில நாள்களுக்கு முன்னர் ஜெயலலிதா நினைவிடத்தை விரைவாகக் கட்டி முடிப்பது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் தங்கமணி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் சிலர் கலந்துகொண்டனர். ஜூன் 6-ம் தேதி அன்று இரவு, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் தங்கமணி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சிலரும் இருந்தனர். அவர்களும் தற்போது கலக்கத்தில் உள்ளார்கள்.