Published:Updated:

கொரோனாவால் சரியும் பொருளாதாரம்!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா

“சீனப் பொருளாதாரம் விழுந்தால், அது இந்தியச் சந்தைக்கு லாபம்” என்று சிலர் சொல்கிறார்கள்.

சீனாவின் வூஹான் நகரத்திலிருந்து பரவத்தொடங்கிய வைரஸ், தற்போது வரை உலகம் முழுவதிலும் 4,298 உயிர்களை (11.03.2020 நிலவரப்படி) காவு வாங்கியிருக்கிறது. 1,19,214 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உயிர்பலி வாங்கும் இந்த வைரஸ், உலகப் பொருளாதாரத்தையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, அதிக மக்கள் வளத்தைக்கொண்ட சீனப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.

கொரோனா
கொரோனா

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிகழ்ந்துவந்த வர்த்தகப் போரைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகச் சீனாவின் பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவிவருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஒட்டுமொத்த சீனப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதம். ஆனால் இது அந்நாட்டின் கடந்த 30 ஆண்டுக்கால வரலாற்றில் பதிவான குறைந்தபட்ச வளர்ச்சி ஆகும். இந்த வைரஸ் பாதிப்பால் ஜி20 நாடுகளுக்கான பொருளாதார வளர்ச்சி 2.1 சதவிகிதமாகவும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவிகிதமாகவும் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

‘பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா'
(People’s Bank of China)

இந்த பாதிப்பால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் சீனாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், குறுகிய கால வட்டி விகிதத்தைக் குறைப்பதாக சீனாவின் மத்திய வங்கியான ‘பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா (People’s Bank of China)’ அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி, வங்கித்துறையில் பணப்புழக்கத்தை உறுதிசெய்யும் வகையில், அண்மையில் கூடுதலாக 150 பில்லியன் யுவான்களைப் புழக்கத்தில் விட்டுள்ளது சீனா. இன்னும் அதிக அளவிலான பணத்தை வரும் வாரங்களில் புழக்கத்தில் விடவுள்ளதாகச் சீனாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொரோனாவால் சரியும் பொருளாதாரம்!

சீனாவின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா குழுமம், கொரோனா வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை மாற்றியிருப்பதாகவும், உணவுப்பொருள்கள் விற்பனை அதிகரித்து, துணிகள், மின்னணுப் பொருள்கள் விற்பனை சுணக்கம் கண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பதால், பெரும்பாலான சீனக் கடைகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.

“சீனப் பொருளாதாரம் விழுந்தால், அது இந்தியச் சந்தைக்கு லாபம்” என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையில், உலகமயமாக்கலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒன்று நடந்தால் அது இந்தியாவையும் பாதிக்கும்.

நமது நாட்டின் அரசு ஒரு கொள்கையை மாற்றும்போது, எங்கோ இருக்கும் ஒரு குட்டி நாடும் அதனால் பாதிப்படையும். சீனாவுக்குத் தற்போது ஏற்பட்டிருக்கும் பரிதாப நிலையால், இந்தியாவின் ஏற்றுமதிக்குச் சாதகம் என நினைத்தால், அது தவறு. நாம் பல பொருள்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்துவந்தாலும், அதற்கான மூலப்பொருள்களைச் சீனா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து பெற்றுவருகிறோம். நம் நாட்டிற்குத் தேவையான உலோகங்கள் மற்றும் மருத்துவத் துறைக்கான மூலப்பொருள்கள் சீனாவிலிருந்துதான் வந்தன. இதன் தேவை அதிகமாக இருந்தும், தற்போது இறக்குமதி அளவு குறைந்துவிட்டதால் பல பொருள்கள் விலையேறிவிட்டன. நமது நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில் (2018-ம் ஆண்டு நிலவரப்படி) சீனாவின் பங்களிப்பு 15 சதவிகிதம்; அமெரிக்காவின் பங்களிப்பு 6.5 சதவிகிதம்; சவுதி அரேபியா 5.7 சதவிகிதம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5.4 சதவிகிதம்; ஈராக் 4.6 சதவிகிதம். ஏற்றுமதியில் நாம் அமெரிக்காவுக்குத்தான் அதிகம் அனுப்புகிறோம்.

இந்தியாவின் பொருளாதார மந்தநிலைக்கு, பணமதிப்பிழப்பிலிருந்து ஆரம்பித்து, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, வேலைவாய்ப்பின்மை, மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலை எனப் பல காரணங்களைச் சொல்லலாம். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் உற்பத்தியில் மந்தம் ஏற்பட்டு, பொருளாதாரத்தில் பாதிக்கப்படும் 15 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என அண்மையில் வெளிவந்த ஐ.நா-வின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் சுமார் 348 மில்லியன் டாலர் மதிப்பிற்கு வர்த்தக பாதிப்பு இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதேபோல கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடீஸ், தனது ஆய்வில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் எனத் தெரிவித்துள்ளது. இதன் ஆய்வறிக் கையில், 2020-ம் ஆண்டில் இந்தியா 5.3 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் உலகின் பிற நாடுகளிலும் கொரோனாவால் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், சீனா மற்றும் தென்கொரியாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய மருத்துவச் சாதன சந்தை இந்தியாதான்.

கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் இதுவரை இந்தியா 11 லட்சம் முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளைச் சீனாவுக்கு அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவுவதால் நுகர்வோர் தேவை, அவசர மருத்துவச் சேவைகள், மருத்துவப் பொருள்கள் மற்றும் உணவு விநியோகங்களில் இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. கடந்த பிப்ரவரி 11-ம் தேதி இந்திய அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி அறுவை சிகிச்சை மற்றும் டிஸ்போஸபிள் முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. சீனாவில் நிலவிவரும் தொற்று நோய்க்கு மத்தியிலும், நிலவிவரும் பதற்றத்திற்கு மத்தியிலும் இந்தியா உதவ முன் வந்திருப்பது மிகப்பெரிய விஷயம்.

கொரோனாவால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிதி திரட்டும் முயற்சியும் சுணக்கம் காணலாம் என அஞ்சப்படுகிறது.

நிறுவனர்கள், பெரும்பாலும் நிதி திரட்டுவதற்காக சிங்கப்பூர் மற்றும் சீனா செல்வது வழக்கம். ஆனால், ஜனவரி முதல் அனைத்துப் பயணத் திட்டங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. “சீனா முதலீட்டாளர்கள் 2016-ம் ஆண்டு முதல் இந்தியாமீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய ஸ்டார்ட் அப்களில் சீன முதலீடு, 2016-ல் 668 மில்லியன் டாலராக இருந்தது. 2018-ல், 5.6 பில்லியன் டாலராக உயர்ந்தது. சில வாரங்களாகப் பயணங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பதால், ஒருசில நிறுவனங்கள் காத்திருக்கும் உத்தியைக் கடைப்பிடிக்கின்றன. ஜப்பான், கொரியா, அமெரிக்கா மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்கள் என, சந்தையில் வாய்ப்புகள் ஆழமாக உள்ளன. ஆனால், இது எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம்...” என்கிறார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்.

கொரோனாவால் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. “பொருளாதாரத் தேக்கம் மற்றும் வீழ்ச்சி போன்ற சமயங்களில் பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்துதான் காணப்படும். அதனால் அனைத்துப் பங்குகளும் அதன் உண்மையான விலையில் வர்த்தகமாகாது. எனவே, சரியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இல்லையெனில், நம் முதலீடு நமது கையைச் சுட்டுக்கொள்ளும்” என்கிறார் பங்குச்சந்தை ஆலோசகர் வ.நாகப்பன்.

கொரோனா உடல்நலத்தை மட்டும் பாதிக்கவில்லை; உலகப் பொருளாதாரத்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பியுள்ளது.