சினிமா
தொடர்கள்
Published:Updated:

சிங்கத்துக்கு எப்படி கொரோனா வந்தது?

சிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்கம்

வண்டலூர் விலங்குகளுக்குப் பொதுவாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுவதில்லை. விலங்குகள் நலத்திற்கான சர்வதேச OIE அமைப்பும் அதைப் பரிந்துரை செய்வதில்லை

கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதுதான் மனித சமூகத்தின் முன்னிருக்கும் பில்லியன் டாலர் கேள்வி. சீன வௌவால்களிலிருந்து பரவியது என அறிவியல் உலகம் விரல் சுட்டினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. விலங்குகளிடமிருந்து கோவிட் 19 பரவியதா என்பது தெரியாது, ஆனால் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவியிருக்கிறது கோவிட் 19. பல உலக நாடுகளில் அதற்கான சான்றுகள் நிறுவப்பட்டிருக்கின்றன.

மனிதர்களைப் போல லட்சங்களில் பாதிப்பு இல்லை என்றாலும் உலகளவில் சில நூறு விலங்குகள் கோவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 45 நாய்களும், 50 பூனைகளும் கோவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 94 விலங்குகளுக்கு மனிதத் தொடர்பினால் தொற்று பரவியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கத்துக்கு எப்படி கொரோனா வந்தது?

இந்தியாவில், பல சிங்கங்களுக்கு கோவிட் 19 தொற்று பரவியிருக்கிறது. ஹைதராபாத், ஜெய்ப்பூர் எனப் பல உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்படும் சிங்கங்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கடந்த மாதம் தமிழகத்தின் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு நோய்த் தொற்றின் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதைத் தொடர்ந்து வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவற்றில் நான்கு சிங்கங்களுக்கு கோவிட் 19 டெல்டா வேரியன்ட் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் 12 வயதான பத்மநாபன் எனப் பெயரிடப்பட்ட ஆண் சிங்கமும், 9 வயதான நீலா எனும் பெண் சிங்கமும் உயிரிழந்தன. நீலா மற்றும் ராகவ எனும் மற்றொரு சிங்கத்திற்கு சிடிவி (canine distemper virus) எனும் வைரஸ் தொற்று இருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு மூக்கிலும், வாயிலும் ஸ்வாப் டெஸ்ட் செய்து கோவிட் 19 பரிசோதனை செய்யப்படுகிறது. சிங்கத்தின் வாயைத் திறந்து எப்படி டெஸ்ட் எடுப்பார்கள் என்ற சந்தேகம் தொற்றிக்கொள்ள, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (தனுவாஸ்) கால்நடை நலக் கல்வி மைய இயக்குநர், டாக்டர் கோ. தினகர் ராஜிடம் நம் சந்தேகத்தை முன்வைத்தோம்.

சிங்கத்துக்கு எப்படி கொரோனா வந்தது?

“வண்டலூர் விலங்குகளுக்குப் பொதுவாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுவதில்லை. விலங்குகள் நலத்திற்கான சர்வதேச OIE அமைப்பும் அதைப் பரிந்துரை செய்வதில்லை. விலங்குகள் நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும்போதுதான் அவற்றிற்குப் பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுவாக விலங்குகளுக்கு வாய்வழியாகச் செய்யப்படும் oral டெஸ்ட், மூக்கில் செய்யப்படும் nasal டெஸ்ட், மலக்குடல் துளையில் செய்யப்படும் rectal டெஸ்ட், விலங்குக் கழிவுகளில் செய்யப்படும் fecal டெஸ்ட் மற்றும் விலங்கின் இருப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர்க் கால்வாயில் செய்யப்படும் sewage டெஸ்ட் ஆகிய ஐந்து வழிகளில் நோய்த்தொற்றுப் பரிசோதனைகளைச் செய்யலாம். வண்டலூரில் சிங்கங்களுக்கு வாய் மற்றும் மூக்கின் வழியாக மாதிரிகள் சேகரித்துத்தான் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக முதலில் squeeze cage அல்லது squeeze chute எனப்படும் கூண்டுகளில் விலங்குகள் அடைக்கப்படும். மிக இறுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கூண்டுகளில் விலங்குகள் உள் நுழைந்தால், அவை திரும்புவதற்கோ, அசைவதற்கோகூட இடம் இருக்காது. அவற்றின் இயக்கம் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்படும். அப்போது அதனை நெருங்கிச் சென்று அதன் வாய், மூக்கின் வழியே பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்க முடியும். அப்படித்தான் வண்டலூரில் பரிசோதனை செய்யப்பட்டது.’’

``எடுக்கப்பட்ட மாதிரிகளை எவ்வாறு பரிசோதனை செய்வார்கள் ?’’

“இந்தியாவில், நான்கு பரிசோதனை மையங்களில் விலங்குகளின் மாதிரிகள் நோய்த்தொற்றிற்காகப் பரிசோதனை செய்யப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தின் பரேலி நகரில் உள்ள பரிசோதனை மையத்திற்கும், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மையத்திற்கும் வண்டலூர் சிங்கங்களின் மூக்கு, மலக்குடல் மற்றும் உடற்கழிவு மாதிரிகள் அனுப்பப்பட்டன. கூடுதல் பரிசோதனைகளுக்காக ரத்த மாதிரிகள் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. கோவிட் 19 நோய்த் தொற்றைக் கண்டறிய மனிதர்களுக்குச் செய்யப்படும் அதே RT-PCR பரிசோதனைதான் விலங்கு மாதிரிகளுக்கும் செய்யப்படுகின்றன.’’

``சிங்கங்களுக்கு நோய்த்தொற்று எவ்வாறு பரவியிருக்கும்?’’

“எல்லா விலங்குகளுக்கும் அதன் பாதுகாவலர், கண்காணிப்பாளர், உணவு வழங்குபவர் என நெருக்கமாக இருக்கும் மனிதர்களிடமிருந்து நோய் பரவியிருப்பதை அறிய முடிகிறது. பரிசோதனைக் கூடங்களில் மட்டும் இந்த நோய் ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்கிற்குப் பரவியதைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் வெளியில் அப்படி விலங்கிடமிருந்து விலங்கிற்கு இந்த நோய் பரவியதற்கான எந்தச் சான்றும் இல்லை. கோவிட் 19 பொறுத்தவரை மனிதர்களிடமிருந்து விலங்கிற்குப் பரவும் ‘ரிவர்ஸ் ஜுநோசிஸ்’ தான் நிகழ்கிறது.”

``வண்டலூரில் சிங்கங்கள் இறந்ததற்கான காரணம்?’’

“இறந்த சிங்கங்கள் இரண்டிற்கும் கோவிட் 19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவற்றின் இறப்பிற்கும் வைரஸ் தொற்றுதான் நேரடிக் காரணமாக இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இறந்த பெண் சிங்கம் நீலாவிற்கு CDV எனும் மற்றொரு வைரஸ் தொற்றும் இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் இறப்பிற்கான காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல இயலாது. ஆனால், சிங்கங்கள் வெளிப்படுத்திய அறிகுறிகளின் அடிப்படையில், அவற்றிற்கு கோவிட் 19 நோய்த்தொற்று பாதிப்புதான் அதிக உபாதைகளை அளித்திருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. நோய்க்கிருமிகள் மேலும் பரவக் கூடாது என்பதற்காக இந்தச் சிங்கங்களுக்கு உடற்கூறாய்வும் செய்யப்படுவதில்லை.”

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து பேர் அடங்கிய நிபுணர் குழுவும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்குச் சிகிச்சை அளிக்க இணைந்துள்ளனர். சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றிப் பேசிய அக்குழுவின் தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன், ‘‘கோவிட் 19 நோய்த்தொற்றிற்கென பிரத்யேக சிகிச்சைகள் என எதுவும் கிடையாது, சிங்கங்கள் என்ன விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவோ அதைப் பொறுத்தே சிகிச்சைகள் தீர்மானிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட அறிகுறிக்கு வழக்கமாக விலங்குகளுக்குப் பரிந்துரைக்கப்படும் அதே மருந்துகள்தான் இப்போதும் பரிந்துரைக்கப்படுகின்றன” என்றார்.

தினகர் ராஜ்
தினகர் ராஜ்

வண்டலூரில் சிங்கங்களுக்கு கோவிட் 19 தொற்று பரவியதைத் தொடர்ந்து அவற்றின் பராமரிப்பு, விலங்குகளுக்கான சிகிச்சைகள் ஆகியவை குறித்துத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக மேற்பார்வையிட்டார். சமீபத்தில் விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பைக் கண்காணிக்கச் சிறப்புக் கண்காணிப்புக் குழுவை நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு சிறப்புச் செயற்குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. புலிகள் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், வனவிலங்குச் சரணாலயங்கள், ரிசர்வ் காடுகள் போன்ற எல்லா இடங்களிலும் வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பினை உறுதி செய்யவும், நோய்த் தடுப்பு மேலாண்மைக்காகவும் பணியாற்ற அங்கிருக்கும் அலுவலர்களுக்கு இந்தக் குழு வழிகாட்டும்.

ஒவ்வொரு நாளும் தன்னை உருமாற்றி உருமாற்றி இந்த உலகுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். நம்மைப் பாதுகாப்பதுடன் நோய்ப் பரவலைத் தடுக்கத் தேவையான அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றுவதுதான் நம் முன் இருக்கும் ஒரே தீர்வு. அதை முழுமையாகக் கடைப்பிடிப்போம்.