சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ட்ரம்ப்புக்கே பாடம் சொன்ன கொரோனா!

ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரம்ப்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ட்ரம்ப்.

“ஒரே ஒருவர்தான் சீனாவில் இருந்து வந்தார். அவருக்குத்தான் கொரோனா. அவரையும் முடக்கிவிட்டோம். எல்லாம் நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.”

“காய்ச்சலால் மட்டும் அமெரிக்காவில் ஆண்டுக்கு 50,000 பேர் இறக்கிறார்கள். இந்தக் கொரோனா வைரஸால் இறப்பு எண்ணிக்கை ஜீரோவாகத்தானிருக்கும்.”

-இப்படியெல்லாம் சொன்னவருக்கு இன்று கொரோனா. அவர், உலகின் சக்திவாய்ந்த மனிதர், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப். பல உலக நாடுகள் கொரோனாவை ஆரம்பத்திலிருந்தே மிகக் கவனமாக எதிர்கொண்டன. ஆனால், சில நாடுகள் அலட்சியமாக இருந்து பின்னர் சுதாரித்தன. ஆனால், அமெரிக்கா தனி ரகம். கொரோனாவிற்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமாக இருந்தது. கொரோனா விஷயத்தில் அதிபர் ட்ரம்ப்பின் அறிக்கைகள் உலகம் முழுவதும் சர்ச்சையைக் கிளப்பின.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ட்ரம்ப். “இந்தப் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நான் covid-19 பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். அதுவும், இது நிஜப் பள்ளிக்கூடம். வெறும் புத்தகங்களால் கற்றுக்கொள்ளும் பள்ளிக்கூடம் அல்ல. நான் கற்றது அனுபவப் பாடம். இப்போது எனக்கு எல்லாம் புரிகின்றன” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். ட்ரம்ப் என்ன கற்றுக்கொண்டார் என்பதை கடந்த ஆறு மாதங்களில் அவர் வெளியிட்ட கருத்துகளின் வழியே அறிந்துகொள்ள முடியும்.

ட்ரம்ப்புக்கே பாடம் சொன்ன கொரோனா!

ஜனவரி மாத இறுதியில் கொரோனா வைரஸ் குறித்த ஆரம்பக்கட்டச் செய்திகள் வெளியாயின. அப்போது ட்ரம்ப், “கொரோனா வைரஸை சீனா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. சீனாவின் வெளிப்படைத் தன்மை பாராட்டத்தக்கது. அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு நன்றி” என ட்வீட் செய்திருந்தார். பின்னர் அவரே, இந்த வைரஸ் சீன நாட்டின் சதி எனக் கூறி, ‘சீன வைரஸ்’ என்றே பெயரிட்டுக் குறிப்பிடத் தொடங்கினார்.

கொரோனா பற்றிய ட்ரம்ப் கருத்துகள் உள்நாட்டிலும் சர்ச்சையைக் கிளப்பின. அமெரிக்காவின் தேர்ந்த அரசு மருத்துவ நிபுணர்கள் கொரோனா குறித்து வெளியிடும் கருத்துகளுக்கு, நேரடியாக மறுப்பு தெரிவித்து வந்தார் ட்ரம்ப். அவர்கள் ‘ மாஸ்க் அணியுங்கள்’ எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினால், இவரோ ‘மாஸ்க் போட மாட்டேன் போடா’ என்று சொல்லாமல் சொல்லிச் சுற்றிக்கொண்டிருந்தார்.

கொரோனா உலகம் முழுக்க தீவிரம் அடைந்தபோதும், பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அமெரிக்காவில் பொது முடக்கத்தை அறிவிக்க மறுத்தார். இதே ட்ரம்ப்தான் அமெரிக்கா - மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் அமைக்கவேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவின் பல்வேறு அரசுத் துறைகளைச் செயல் பாடில்லாமல் முடக்கி வைத்து அமெரிக்க அரசாங்கத்தை ‘ஷட் டௌன்’ செய்தார். அப்போ தெல்லாம் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிப் படைவதைப் பற்றி அவர் வருந்த வில்லை என அவரை விமர்சித்தார்கள் அதிருப்தியாளர்கள்.

கொரோனா குறித்து ட்ரம்ப் பேசிய விஷயங்கள் அனைத்தும் தினம் புதுச் சர்ச்சைக்கு வித்திட்டன. “கிருமிநாசினியை ஊசிபோல உடம்பில் செலுத்திக்கொண்டால் என்ன?” எனக் கேள்விகேட்டு உலகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கினார். “ஜனநாயகக் கட்சி ஆளும் அமெரிக்க மாகாணங்களில்தான் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட வில்லை. அந்த மாகாணங்களைக் கணக்கில் எடுக்காவிட்டால் அமெரிக்காவின் நோய்த்தொற்று விகிதம் உலகிலேயே குறைவானதாக இருக்கும்” என்று அரசியல் செய்தார்.

அதேநேரம், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நிகழ்ந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார் ட்ரம்ப். நிகழ்ச்சியில் மாஸ்க் அணியாமல் பேசிய ட்ரம்ப், பாக்கெட்டில் வைத்திருந்த மாஸ்க்கை எடுத்துக் காட்டி “தேவையெனில் அணிந்துகொள்வேன்” என்றார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென், நோய்த்தொற்று பாதுகாப்பைப் பற்றி வலியுறுத்த, “ஜோ பிடென் மிகவும் பயப்படுகிறார். இந்தத் தேர்தல் பொதுக்கூட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் அவர் எப்போதும் மாஸ்க் அணிந்திருக்கிறார். மக்களிடமிருந்து 200 அடி தள்ளி நின்றுதான் பேசப்போகிறார். அப்படியிருந்தும் முகமே மறையும் அளவிற்குப் பெரிய மாஸ்க் போடுகிறார். இவர் அதிபரானால், பயந்தே அமெரிக்காவின் பொருளா தாரத்தை முடக்கிவிடுவார்” என அவரைக் கிண்டல் வேறு செய்தார் ட்ரம்ப்.

அடுத்த ஒரு வாரத்திலேயே ட்ரம்ப் மற்றும் அவர் மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

என்னதான் கொரோனா குறித்து ட்ரம்ப் எக்குத்தப்பாகக் கருத்துகளை உதிர்த்துவந்தாலும் இப்போது அதன் பாதிப்பை நேரடியாக உணர்ந்திருப்பார். அவரும் அவர் மனைவியும் இந்த பாதிப்பிலிருந்து நல்லபடியாக மீண்டுவர வேண்டும் என்பதே அவரின் எதிர்ப்பாளர்கள் உட்பட அனைவரின் விருப்பம்.