அலசல்
Published:Updated:

அன்று ரட்சகன்... இன்று சாத்தான்! - பிரேசிலை உலுக்கும் கொரோனாவும் போராட்டங்களும்

பிரேசில்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரேசில்

- தாக்‌ஷாயிணி

கொரோனா வைரஸால் தினமும் அதிகப்படியான மரணங்களைச் சந்திக்கும் தேசங்களில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. போதிய மருத்துவ வசதி, சரியான சிகிச்சை இல்லாமல் நாளொன்றுக்குச் சராசரியாக 2,500 பேர் கொரோனாவால் பிரேசிலில் உயிரிழக்கிறார்கள். கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறிய அந்த நாட்டின் அதிபர் ஜயிர் போல்சரனோவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் குதித்திருப்பதால், நாடே உச்சக்கட்டப் பதற்றத்திலிருக்கிறது.

தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஜயிர் போல்சரனோ, மதப்பற்றாளர்கள், அடிப்படைவாதச் சிந்தனையுடையவர்களின் துணையுடன்தான் பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். ‘எனக்கு, ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபடும் ஒரு மகன் இருப்பதைவிட, அவன் இறந்துபோனால் மகிழ்ச்சியடைவேன்’ என்று ஓரினச்சேர்க்கை உறவுக்கு எதிராகவும், பருவநிலை மாற்றத்துக்கு எதிராகவும் போல்சரனோ வெடித்த சரவெடிகளை மக்கள் கொண்டாடினார்கள். நாடே சுபிட்சமாகிவிடும் என்று அவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதைகள் எல்லாம் ஓரிரு மாதங்களிலேயே பொய்யாகின. பிரேசிலின் அடையாளமான அமேசான் காடுகளில், போல்சரனோ பதவியேற்ற 2019-ம் ஆண்டு மட்டுமே 90,000 தீ விபத்துச் சம்பவங்கள் நடந்தன. அவரின் தவறான சுற்றுச்சூழல் கொள்கைகளே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

அன்று ரட்சகன்... இன்று சாத்தான்! - பிரேசிலை உலுக்கும் கொரோனாவும் போராட்டங்களும்

கியூப மருத்துவர்களின் துணையுடன், பிரேசிலின் கிராமப்புறப் பகுதிகளுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கும், ‘மோர் டாக்டர்ஸ் புரோகிராம்’ என்ற திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தினார் போல்சரனோ. நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, அரசு மருந்தகங்களுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி பாதியாகக் குறைக்கப்பட்டதால், குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பது நின்றுபோனது. பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்படும் நிதியையும் குறைத்ததால், ஸ்காலர்ஷிப் மூலமாகக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. கடந்த 2019 ஆகஸ்ட்டில் புதிய சமூகப் பாதுகாப்புச் சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது போல்சரனோ அரசு. இதன்படி, ஓய்வூதியதாரர்களுக்கான வயது உச்சவரம்பை பெண்களுக்கு 62 வயதாகவும், ஆண்களுக்கு 65 வயதாகவும் நிர்ணயித்தனர். ‘பிரேசிலின் பல மாநிலங்களில் மக்களின் சராசரி ஆயுள் காலம் 70 வயதாக இருக்கும்போது, ஓய்வூதியப் பலனை அனுபவிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்ச வயதை 62 ஆக நிர்ணயித்தது எப்படி நியாயம்? வயது உச்சவரம்பைக் குறைக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. ஆனால், போல்சரனோ கண்டுகொள்ளவே இல்லை.

அன்று ரட்சகன்... இன்று சாத்தான்! - பிரேசிலை உலுக்கும் கொரோனாவும் போராட்டங்களும்

ஏப்ரல் 2020 வாக்கில், பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வேளையில், “இது சின்னக் காய்ச்சல்தான். இதற்காக ஏன் லாக்டெளன் போட வேண்டும்” என்றெல்லாம் பேசினார் போல்சரனோ. இதனால், கொரோனாத் தடுப்பூசிக் கொள்முதல், தடுப்பு நடவடிக்கைகள் எதிலும் அவர் ஆர்வம் காட்டவில்லை.

2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 21.1 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசிலில், ஜூன் 3-ம் தேதி நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.65 கோடியைத் தாண்டியிருக்கிறது. 4.65 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். இவ்வள வுக்கும் காரணம் போல்சரனோவின் தவறான கொரோனாத் தடுப்பு அணுகுமுறைகள்தான் என்று குற்றஞ்சாட்டிப் போராட்டத்தில் குதித்துள்ளனர் மக்கள்.

கடந்த மே 29-ம் தேதி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, சாய் பாலோ உள்ளிட்ட 16 நகரங்களில் மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தை ஆரம்பித்தனர். கொரோனாத் தடுப்பூசி கேட்டும், ஜயிர் போல்சரனோவைப் பதவிநீக்கம் செய்யக்கோரியும் இந்தப் போராட்டங்கள் வேகமெடுத்திருக்கின்றன. ‘29-எம்’ என்ற அடையாளத்துடன் தொடங்கியிருக்கும் இந்தப் போராட்டத்தில், ‘தடுப்பூசி போட்டிருந்தால் என் தந்தை என்னுடன் இருந்திருப்பார்’, ‘முறையான சிகிச்சை கிடைத்திருந்தால் என் மனைவியை நான் இழந்திருக்க மாட்டேன்’ என்று கையில் பதாகைகளுடன் போராட்டக்காரர்கள் பங்கேற்றிருப்பது, மக்களின் மனதில் பெரும் உணர்ச்சிக்கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போல்சரனோவின் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரேசில் நாடாளுமன்ற கமிட்டி விசாரித்துவருகிறது. விசாரணையின் முடிவில், போல்சரனோவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், அவர் பதவி விலக நேரிடும். “இரண்டாண்டுகளுக்கு முன்புவரை ரட்சகனாகப் பார்க்கப்பட்ட ஜயிர் போல்சரனோ, இன்று சாத்தானாகப் பார்க்கப்படுவதற்குக் காரணம் அவரது எதேச்சதிகாரக் கொள்கைகளும், நிர்வாகச் சீர்கேடுகளும்தான்” என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

அன்று ரட்சகன்... இன்று சாத்தான்! - பிரேசிலை உலுக்கும் கொரோனாவும் போராட்டங்களும்

பத்தாண்டுகளுக்கு முன்பு, உலகெங்கும் வலதுசாரிச் சிந்தனையுள்ள தலைவர்கள் மேலே எழத் தொடங்கினார்கள். அமெரிக்காவில் ட்ரம்ப், பிரேசிலில் ஜயிர் போல்சரனோ, இந்தியாவில் மோடி, இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு என இந்தப் பட்டியல் நீளமானது. இன்று, அந்தத் தலைவர்கள் ஒவ்வொருவராக மக்களால் விமர்சிக்கப்பட்டும் வெறுக்கப்பட்டும் வருகிறார்கள். கடந்த 2020 ஜனவரி குடியரசு தின விழாவில், ஜயிர் போல்சரனோவைச் சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு அழைத்து வந்தார் பிரதமர் மோடி. அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரியில், ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்கிற பெயரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியாவில் வரவேற்பு விழா எடுத்தார் மோடி. ட்ரம்ப் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜயிர் போல்சரனோவின் பதவி ஊசலாடுகிறது. உலகெங்கும் நிலவிய வலதுசாரி ஆதரவு அலை, குறைந்துகொண்டு வருவதையே பிரேசில் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.