சமூகம்
Published:Updated:

“ஊதியத்தைத் தியாகம் செய்ய தயாராக இருங்கள்!”

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
News
புதுச்சேரி

வேண்டுகோள் வைத்த முதல்வர் நாராயணசாமி... கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!

‘‘கொரோனா நிவாரணத்துக்காக அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தைத் தியாகம் செய்ய வேண்டும்’’ என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியதையடுத்து, அந்த மாநில அரசு ஊழியர்கள் பலரும் கொந்தளிக்கின்றனர்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியா முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் திணறிக்கொண்டிருந்த புதுச்சேரியை, இந்த ஊரடங்கு பேச்சு மூச்சின்றி படுக்கையில் கிடத்திவிட்டது. கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்குக்கூட போதுமான நிதி இல்லாத நிலையில், மத்திய அரசிடம் `கொரோனா நிவாரண நிதியாக 995 கோடி ரூபாயும், உடனடியாக 300 கோடி ரூபாயும் வேண்டும்’ என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை என்பதால், ‘‘கொரோனா நெருக்கடியால், பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தும், 30 சதவிகிதம் பிடித்தம் செய்தும் வழங்குகிறார்கள். நம் மாநிலத்திலும் அப்படியான தியாகங்களைச் செய்ய அரசு ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும். ஒரு சாரார் சம்பாதிக்கும் நிலையில், மற்றொரு சாரார் பட்டினியால் வாடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது’’ என்று கூறியிருந்தார்.

புதுச்சேரி
புதுச்சேரி

அவ்வளவுதான்... ‘உங்கள் சம்பளத்தைக் குறைப்பீர்களா... சொகுசு காரைத் தவிர்ப்பீர்களா?’ என்றெல்லாம் ஆட்சியாளர்களை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள் அரசு ஊழியர்கள்.

இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கௌரவத் தலைவர் சி.ஹெச்.பாலமோகனிடம் பேசினோம். ‘‘புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்பதில், எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. அரசு ஊழியர்களிடம் இருந்து சம்பளத்தைப் பிடித்தம் செய்வதாக அரசு முடிவெடுத்தால், ஊழியர்களின் மத்திய அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். எத்தனை சதவிகிதம், எந்த அடிப்படையில், எவ்வளவு காலத்துக்குப் பிடிக்கப்படும் என்பதை எங்களுடன் அமர்ந்து தெளிவான முடிவை எடுத்த பிறகுதான் அதைச் செயல்படுத்த வேண்டும்.

அதேசமயம், நிதி நெருக்கடி எனத் தொடர்ந்து கூறிவரும் அரசு, அதை சரிசெய்வதற்கான எந்த முயற்சியையும் எடுப்பதாகத் தெரியவில்லை. புதுச்சேரி மாநிலத்தின் வருவாய் என்பது, மது விற்பனை மூலமே கிடைக்கிறது. அதனால், தமிழக அரசு செய்ததைப்போல் மதுவுக்கென ஒரு பிரிவை ஏற்படுத்தி, அனைத்து மதுக்கடைகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். அப்படிச் செய்தால், மாநில அரசுக்குத் தேவையான நிதி கிடைக்கும்.

நாராயணசாமி
நாராயணசாமி

அனைத்து அரசு அலுவலகங்களிலும் `அரசுப் பணி’ என்ற போர்டுகளுடன் குறைந்தது ஐந்து வாகனங்கள் தேவையே இல்லாமல் வெறுமனே நின்றுகொண்டிருக்கும். அதற்காக அந்தத் தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக 35,000 ரூபாய் வழங்குகிறார்கள். அந்த டிராவல்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் யார் எனப் பார்த்தால், அவர்கள் அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களுடைய ஆதரவாளர்களாகத்தான் இருப்பார்கள். இப்படி தேவையில்லாத செலவுகளை முதலில் குறைத்துவிட்டு, அதன் பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம் பற்றிப் பேசட்டும்’’ என்றார்.

அதேசமயம் இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு ஊழியர் ஒருவர், ‘‘எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், 100 சட்டப்பேரவை ஊழியர்கள் மற்றும் 200 அமைச்சக ஊழியர்களின் சம்பளம், சட்டப்பேரவைப் பாரமரிப்பு என அனைத்தையும் சேர்த்து மாதம் 25.5 கோடி ரூபாய்தான் செலவாகிறது. ஆனால், அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் அவர்களின் ஓய்வூதியத் தொகைக்காக மட்டுமே மாதம் 200 கோடி ரூபாய் செலவாகிறது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மாதம் 25 சதவிகிதம் பிடித்தம் செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையைக்கொண்டு 1.5 லட்சம் மக்களுக்கு முதியோர் உதவித்தொகையை அளிக்கலாம். நிதி நெருக்கடி ஓரளவு சரியான பிறகு, பிடித்த தொகையை அரியர்ஸ் அல்லது ஜி.பி.எஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி மூலம் திருப்பித் தரலாம்.

மத்திய அரசு வழங்கும் ஜி.எஸ்.டி, விற்பனை வரி, பத்திரப்பதிவு, கலால் என அனைத்தையும் சேர்த்து மாநில அரசின் வருட வருவாய் 3,600 கோடி ரூபாய்தான். அதில் பெரும்பகுதி அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக மட்டுமே சென்றுவிடுகிறது. வெறும் 28,000 அரசு ஊழியர்கள் வசதியாக வாழ்வதற்கும், அவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்குவதற்காக மட்டும்தான், மாநிலத்தில் உள்ள 10 லட்சம் மக்களும் வரிகட்டுகிறார்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

பாலமோகன்
பாலமோகன்

முதல்வர் நாராயணசாமியைத் தொடர்புகொண்டு இதுகுறித்து பேசியபோது, ‘‘பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இங்கும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து விட்டுத்தான் அதுகுறித்து முடிவெடுப்போம்’’ என்றார்.

‘‘பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அரசு ஊழியர்களும் அரசாங்கமும் பேசி நல்லதொரு முடிவுக்கு வரவேண்டும்’’ என்பதே புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.