ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

2K kids: வீழ்வோம் என்று நினைத்தாயோ?!

வீழ்வோம் என்று நினைத்தாயோ?!
பிரீமியம் ஸ்டோரி
News
வீழ்வோம் என்று நினைத்தாயோ?!

செ.மௌலீஸ்வரன்

குட்டியூண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வேரோடு பறிச்சு வாழ்க் கைப் பாதையையே மாற்றிப் போட்ட கதைகள் நமக்குத் தெரியும். அதுல ஒரு குடும்பத்தோட நேரடி வாக்குமூலம்தான், இந்தக் கட்டுரை. அந்தக் குடும்பம், எங்க குடும்பம்தான்.

கொங்கு நாட்டுல இருக்குற திருச்செங்கோடுதான் எங்க சொந்த ஊரு. அங்க பரம்பரை நெசவாளர் குடும்பம் எங்களுடையது. என் பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பானு எல்லாரும் ஒரே இடத்துல நெசவு வேலை பார்த்தாங்க. தாத்தா காலத்துல கைத்தறியா இருந்தது, அப்பா காலத்துல விசைத்தறி ஆச்சு.

2K kids: வீழ்வோம் என்று நினைத்தாயோ?!

காலப்போக்குல நெசவுத் தொழில் நலிவடைய காரணம், உற்பத்தியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில தரகர்கள் வந்ததும், மக்களுக்கு அந்நிய ஆடைகள் மேல மோகம் வந்ததும்தான்னு தோணும். இந்ந நிலையிலதான், அந்தப் பெரிய இடி எங்களைத் தாக்கிச்சு. கொரோனா பொதுமுடக்கத்தால, என் கல்லூரிக் கட்டணம் என் தங்கையின் பள்ளிப்படிப்பு, வீட்டு வாடகை, பட்டறை வாடகை, மின்சாரக் கட்டணம், வீட்டுச் செலவுனு எல்லாமே ஸ்தம்பிச்சு நின்னது. நிறைய கடன்பட்டோம்.

கொரோனா இரண்டாவது அலையப்போ, இனியும் தாங்க முடியாதுனு எங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, தங்கச்சினு எல்லாரும் சென்னைக்கு வந்துட்டாங்க. ஒரு சின்ன வீடு எடுத்துத் தங்கினோம். ரொம்ப போராட்டத்துக்கு அப்புறமா, தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் செக்யூரிட்டி வேலை கிடைச்சது. ‘பட்டு நெய்த கையால இப்போ கார் கதவையும், கேட் டையும் திறந்து விட்டுட்டு இருக் கோம்’னு ரெண்டு பேரும் நொந்துக் குவாங்க. துணிக் கடையில வேலைக் குப் போற அம்மா வுக்கு, நாள் முழுக்கக் கேட்டிட்டு இருந்த தறி சத்தமும், அந்த சந்தோஷமும் தொலைஞ்சு போன ஏக்கம் மனசெல்லாம். சமையல் வேலைக் குப் போற பாட்டி, எந்தக் கஷ்டத்தையும் வெளிய சொல்லிக்கிறதில்ல. காலையில 8 மணிக்குப் போனா, நைட்டு 8 மணிக்குத்தான் எல்லாரும் வீடு திரும்புவாங்க. வீட்டுல எல்லாரும் சிரிச்சுப் பேசியே ரொம்ப நாள் ஆகுது.

2K kids: வீழ்வோம் என்று நினைத்தாயோ?!

இந்த மாதிரிதான், கொரோனாவால பல குடும்பங்கள் பார்த்துட்டு இருந்த பொழப்பை விட்டுட்டு, பாதை மாறிக் கிடக்கோம். ஆனாலும், எப்படியும் மீண்டு வந்துடலாம்ங்கிற ஒற்றை நம்பிக்கையிலதான் எல்லாரும் ஓடிட்டு இருக்கோம். கொரோனாவுக்கு இந்த உலகம் டாட்டா சொல்ற அந்த நாள்ல நாம எல்லாரும் சேர்ந்து சொல்வோம்... வீழ்வோம் என்று நினைத்தாயோ?!