Published:Updated:

ஒரு லட்ச ரூபாய் இருந்தால் வாகனம் இல்லாமலேயே தகுதிச் சான்றிதழ் வாங்கலாம்! #EndCorruption

இடைத்தரகர்கள் மூலம் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகப் பெற்றுக்கொள்ளும் போக்குவரத்து மேலாளர்கள், இவை எதையுமே ஆய்வுசெய்யாமல் அதிகமான வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

எழிலகம்
எழிலகம்

ஒவ்வோர் ஆண்டும் இந்தியர்களின் இறப்பு விகிதத்தில் சாலை விபத்துகள் அதிகப் பங்கு வகிக்கின்றன. அதிலும் கடந்த சில ஆண்டுகளாகப் பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் விபத்துகளைச் செய்திகளில் அதிகமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த விபத்துகளின் பின்னணியிலும் ஊழல்தான் இருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா!

நம்ப முடியவில்லைதான். ஆனால், அதுதான் உண்மை.

"தனியார் பேருந்துகள், சுற்றுலா செல்லும் வேன்கள், பெரிய மகிழுந்துகள் போன்றவற்றுக்கு கொடுக்கப்படும் தகுதிச் சான்றிதழ் (FC), வாகனங்களில் கட்டாயமாகப் பொருத்தவேண்டிய வேகக்கட்டுப்பாட்டுக் கருவி போன்றவற்றில் தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பெரிய அளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்" என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
வாகனங்கள்
வாகனங்கள்

"போக்குவரத்துத்துறை மேலாளர் ஒருவர் நாள் ஒன்றுக்கு, அதிகபட்சம் 10 வாகனங்களின் ஓடுதிறனைப் பரிசோதித்து தகுதிச் சான்றிதழ் வழங்கலாம். தகுதிச் சான்றிதழ் வழங்கும் முன் வாகனங்களில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று தனி வரைபடமே உள்ளது. சக்கரம், இன்ஜின், அடிப்பகுதி, கியர்களின் இயக்கம், பிரேக் என்று பல பாகங்களையும் வாகனத்தை ஓரளவுக்கு நகர்த்தியும், பார்த்தும் ஆய்வுசெய்ய வேண்டும். அதன்படி ஆய்வுசெய்தால், அதிகபட்சம் 10 முதல் 20 வாகனங்களுக்குத்தான் சான்றிதழ் வழங்க முடியும். ஆனால், நடைமுறையில் பெரும்பாலானவர்கள் நாளொன்றுக்கு சுமார் 100 வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவை நடப்பது அனைத்துமே இடைத்தரகர்கள் மூலமாகத்தான். அந்த இடைத்தரகர்கள் மூலமாக குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகப் பெற்றுக்கொள்ளும் போக்குவரத்து மேலாளர்கள், இவை எதையுமே ஆய்வுசெய்யாமல், அதிகமான வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்" என்கின்றனர் அவர்கள்.

"ஓட்டுநர் பயிற்சி உரிமம் (LLR), ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை பொதுமக்களால் அவ்வளவு எளிதில் வாங்கிவிட முடிவதில்லை. அதற்காக அவர்கள், டிரைவிங் ஸ்கூல்களை நாட வேண்டியிருக்கிறது. அவர்கள் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெறுவதென்பது இப்போது மிகவும் கடினமாகிவிட்டது. அவர்களும் அதிக பணத்தை வாங்கிக்கொண்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வாகனம் ஓட்டத் தெரியாதவர்களுக்கும் உரிமம் வழங்குகிறார்கள். இதனால்தான், சாலை விதிகள் சரியாகத் தெரியாமலும் முறையாக ஓட்டத் தெரியாமலும் பலர் விபத்துகளுக்கு ஆளாகின்றனர். அத்தகைய டிரைவிங் ஸ்கூல்களே இங்கு இடைத்தரகர்களாகச் செயல்பட்டு, தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுக்கிறார்கள்" என்கின்றனர், சமூக ஆரவலர்கள்.

சாலை விபத்து
சாலை விபத்து

"தகுதிச் சான்றிதழுக்கு வரும் வாகனங்களில் இருக்கைகள் சரியில்லையென்றால், லஞ்சம். அவற்றுக்கு பெயின்ட் அடிக்கவில்லை என்றால், அதற்கும் லஞ்சம். 3,500 ரூபாய் கொடுப்பதாக இருந்தால் பெயின்ட் அடிக்காமலேயே ஆய்வுக்குக் கொண்டுவரலாம். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு அனுமதி கொடுக்கப்படும். அதற்கு, 'டபுள் செலான்' என்று பெயர். ஆய்வுக்கு வந்தால்தான் இந்தச் சலுகையெல்லாம். தமிழக போக்குவரத்துத்துறை அதைவிட ஒருபடி மேலேயே சென்றுவிட்டது. ஆய்வுக்கு வாகனங்களைக் கொண்டுவராமல் இடைத்தரகர்கள் மூலமாகவே தகுதிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு 1,00,000 ரூபாய் கொடுக்க வேண்டும்" என்கிற அதிர்ச்சித் தகவலையும் அவர்கள் சொல்கின்றனர்.

"டூரிஸ்ட் வாகனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், பேருந்துகள் என்று பொதுமக்கள் பயணிக்கக்கூடிய வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டுக்கருவி பொருத்த வேண்டுமென்பது போக்குவரத்துச் சட்ட விதிமுறைகளின்படி கட்டாயம். அப்படிப் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் 90 சதவிகித கருவிகள் வேலை செய்வதில்லை. அதற்குக் காரணம், பல குளறுபடிகள் வாயிலாகப் போலி கருவிகளுக்குக்கூட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளன. அப்படி வாங்கிப் பயன்படுத்தப்படும் கருவிகள் பெரிதும் வேலை செய்வதில்லை.

சாலைப் பாதுகாப்பு
சாலைப் பாதுகாப்பு

டாடா, ஆட்டோகிரேட், பிரிகால் போன்ற தரமான வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளின் ஆரம்ப விலை 13,000 ரூபாய். அதுவே மின்டா (Minda) போன்ற போலிக் கருவிகளின் விலை 3,000 முதலே தொடங்குகின்றன. இவை, சரியாக வேலை செய்வதுமில்லை. பெயருக்கு பொருத்திக்கொள்கிறார்கள். எப்போதாவது சிக்கிக்கொண்டால், அதற்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் போதும். இந்தக் கருவிகள் வேகத்தைக் கட்டுப்படுத்தாததால், பல வாகன விபத்துகள் நிகழ்கின்றன.

தரமான கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களைத் தவிர்த்து, இவற்றையே பரிந்துரைப்பதன்மூலம் அதிகாரிகளும் அந்தந்த நிறுவனங்களிடமிருந்து லாபம் பார்க்கிறார்கள்" என்கின்றனர், அதிகாரமட்டத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள்.

இந்த போலி நிறுவனங்களைப் பரிந்துரைத்து, அவற்றையே வாங்கவைப்பதோடு, அவற்றை அதிகமாக சந்தையில் புழங்கவிடுவதிலும் போக்குவரத்துத்துறை ஆணையர், தனியாக லாபம் பார்க்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்துப் பேசுவதற்கு, போக்குவரத்துத் துறை ஆணையாளரைப் பலமுறை சந்திக்க முயன்றோம். ஆனால், முடியவில்லை. இதுகுறித்து அவர் விளக்கமளித்தால் அதையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.

போக்குவரத்துத் துறை
போக்குவரத்துத் துறை

அரசு கொண்டுவரும் நலத்திட்டங்களை முறையாக அமல்படுத்தாமல் இப்படி முறைகேடாக நடந்துகொள்ளும் அதிகாரிகளால், அதன் பயன் மக்களைச் சென்றடையாமலே போகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கான பேருந்துகளில் பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளை நம்பி அனுப்புவதற்கு, அதில் பொருத்தப்பட்டிருக்கும் வேகக்கட்டுப்பாட்டுக் கருவியும் ஒரு காரணம். அதிலும் ஊழல்செய்து அவர்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் இதுபோன்ற போலி நிறுவனங்கள் ஊடுருவ அதிகாரிகள் உதவுகிறார்கள். தமிழக அரசு இதை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.