Published:Updated:

'விர்' வீரமணி

எந்தத் தமிழன் இதையெல்லாம் கேட்டான்?

##~##
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவுக்கு ஆதரவாகத் 'தமிழ் ஊடகப் பேரவை’ என்ற அமைப்பு களம் இறங்கி உள்ளது. இதன் துவக்கமாக(?) 'ஆ.ராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்?’ என்ற தலைப்பில் கடந்த 24-ம் தேதி  சென்னை தியாகராயர் அரங்கில் ஒரு கூட்டம் நடந்தது. திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

 பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது பத்திரிகைகளைக் கடுமையாகப் பிடித்தார். ''மக்களுக்கு நன்மை தரக்கூடிய, பயன் தரக்கூடிய எந்த விஷயத்திலும் நட்டக் கணக்கைப் பார்க்கக் கூடாது. கடும் இழப்புகளுக்கு இடையிலும் பேருந்துகளுக்கு பெட்ரோல், டீசல், ஒரு ரூபாய் அரிசி இதெல்லாம் அரசாங்கம் எதற்காகச் செய்கிறது? அதேபோலத்தான் தகவல் தொடர்பும் மக்களுக்குப் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், சில குறிப்பிட்ட முதலைகளின் கைகளுக்கு ஸ்பெக்ட்ரம் போகாமல் ஆ.ராசா தடுத்து, பரவலாகப் பலரின் கைகளுக்குக் கொடுத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'விர்' வீரமணி
'விர்' வீரமணி

1.76 லட்சம் கோடியை ஆ.ராசா எந்தப் பெட்டியில் எடுத்துக்கொண்டு போனார்... காட்டுங்கள் பார்க்கலாம்!

'தி.மு.க-வுக்கு அழியாத கறுப்பு அடையாளத்தை ஆ.ராசா தேடித் தந்துவிட்டார்’ என்று ஒரு பத்திரிகையில் எழுதினார்கள். அவர்களுக்கு கறுப்பு என்றாலே பிடிக் காது. ராசாவும் கறுப்பாகத்தானே இருக்கிறார். 'போ ராசா’ என்று ஒரு பத்திரிகை எழுதுகிறது. ஆனால், மக்கள் 'வா ராசா!' என்று அவரை அள்ளி அணைத்துக் கொண்டார்கள். 'ஆ.ராசாவை கொல்ல சதி நடக்கிறது’ என்று ஒரு பத்திரிகையில் சு.சுவாமி பேட்டி தந்துள்ளார். அது எப்படி அவருக்குத் தெரியும்? ஆக, அந்தக் கொலை திட்டக்காரர்களோடு அவருக்கு என்ன தொடர்பு என்பதை விசாரித்துக் கைது செய்ய வேண்டும்...'' என்று காட்டமாகப் பேசினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ''இரண்டாம் அசோகரான மானமிகு தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்துகொண்டு இருக்கும் நல்லாட்சியை வீழ்த்துவதற்கு சில சக்திகள் சதிவலை செய்கின்றன. அதற்கான முன்னோட்டம்தான் ஆ.ராசா விவகாரம். திடீரென எங்கிருந்தோ கிடைத்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு, ஊதி ஊதி முடியைச் சுட்டுக் கரியாக்க முயல்கிறார்கள். அனுமானத்தில் கணக்குப் போட்டுக் கொடுக்கப்பட்ட கற்பனை ஆராய்ச்சி அறிக்கைதான் அது!'' என்று எல்லாம் பேசியவர், கடந்த ஜூ.வி. இதழைக் கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் காரசாரமானார்.

''இந்த இதழ் ஜூ.வி-யில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த இரண்டு சிங்கங்களைப்பற்றி தமிழர்கள் அறிந்தாக வேண்டும் என்று டெல்லி நிருபர் எழுதி இருக்கிறார். எந்தத் தமிழன் கேட்டான்? செய்தியின் இறுதியில் 'பொதுமக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதால்தான் ஸ்பெக்ட்ரம் விசாரணையைத் தொடங்கினோம்’ என ஆடிட்டர் ஜெனரல் ஆர்.பி. சிங் பேட்டி கொடுத்து இருக்கிறார். யார் அந்த பொதுமக்கள்னு எனக்குக் காட்டுங்க?'' என்று சூடாகக் கேட்டார் கி.வீரமணி.

 படம்: என்.விவேக்