Published:Updated:

அந்த ஜெராக்ஸ் இயந்திரமும்.. 12 ரப்பர் ஸ்டாம்புகளும்! குன்ஹா தீர்ப்பு வெளியான தினம்

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய தினம் இன்று!

அந்த ஜெராக்ஸ் இயந்திரமும்.. 12 ரப்பர் ஸ்டாம்புகளும்! குன்ஹா தீர்ப்பு வெளியான தினம்
அந்த ஜெராக்ஸ் இயந்திரமும்.. 12 ரப்பர் ஸ்டாம்புகளும்! குன்ஹா தீர்ப்பு வெளியான தினம்

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய தினம் இன்று. ஜெயலலிதாவுக்குத் தண்டனை உறுதி என்பதை, தீர்ப்புக்கு முன்பே மோப்பம் பிடித்துவிட்டது மத்திய உளவுப் பிரிவான ஐ.பி (Intelligence bureau). அதன் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. அதற்குள் நுழைவதற்கு முன்பு முன் கதையைப் பார்ப்போம்.

2014 செப்டம்பர் மாதம் தொடங்கியதுமே பெங்களூருவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை எல்லாம் முடிந்து, `செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும்' என நீதிபதி குன்ஹா அறிவித்திருந்தார். அந்த தினத்திலிருந்து  அ.தி.மு.க தரப்பின் பல்ஸ் எகிற ஆரம்பித்தது. தீர்ப்பு என்ன? என்பதைக் கண்டறிய மத்திய மாநில அரசுகளின் உளவு போலீஸார் களமிறங்கினார்கள். இன்னொரு பக்கம் பத்திரிகையாளர்கள். தீர்ப்பு தேதிக்கு நாள்கள் குறைவாக இருந்தால், `தீர்ப்பு என்னவாக இருக்கும்?' என்பதைக் கண்டறிய மூன்று தரப்பும் பதற்றப்பட்டது.

இப்படியான சூழலில் ஜெயலலிதாவே அந்தப் பதற்றத்தைத் தணித்தார். `செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். அன்று குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், திடீரெனச் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைப் போட்டார் ஜெயலலிதா. `முல்லைப் பெரியாறு, விடுதலைப் புலிகள் விவகாரம் ஆகியவற்றால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. சிறப்பு நீதிமன்றம் இயங்கும் இடத்தைப் பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்ற வேண்டும்' என அதில் சொல்லியிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் மைக்கல் குன்ஹா, `பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும். அதற்கு வசதியாகத் தீர்ப்பு தேதி செப்டம்பர் 27-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது' என அறிவித்தார். 

தீர்ப்பை ஐ.பி. முன்கூட்டியே எப்படிக் கண்டறிந்தது எனப் பார்ப்போம். ஐ.பி. அதிகாரிகள் கர்நாடகாவில் உள்ள நீதித் துறை வட்டாரத்தில் புகுந்து புறப்பட்டார்கள். ஆனால், அவர்களுக்கு உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இப்படியான சூழலில்தான், நீதிபதி குன்ஹாவின் அலுவலகத்திலிருந்து கர்நாடகா சட்டத் துறைக்குக் கடிதம் ஒன்று எழுதப்படுகிறது. `அதிகத் திறன் கொண்ட ஜெராக்ஸ் இயந்திரம் இரண்டும், 12 ரப்பர் ஸ்டாம்புகளும், ஸ்டேஷனரி பொருள்களும் தேவை' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல் ஐ.பி. காதுகளுக்குப் போகிறது. நீதிபதி அலுவலகத்துக்குக் கேட்கப்பட்ட பொருள்கள் உடனே வழங்கப்படுகின்றன. புத்தம் புது ஜெராக்ஸ் இயந்திரங்கள் வந்து இறங்குவதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்தார்கள் மத்திய உளவுத் துறையினர். 

தீர்ப்பு விவரங்களை நீதிபதி சொல்லச் சொல்ல அவருக்குக் கீழே இருக்கும் கிளார்க் லெவல் அதிகாரிகள்தாம் டைப் செய்வார்கள். ஆனால், இறுதிப் பகுதியான தண்டனை விவரங்களை நீதிபதியே தன் கைப்பட எழுதுவார். அல்லது டைப் செய்வார். தண்டனை விவரம் யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காகச் செய்யப்படும் ஏற்பாடு இது. அந்தக் கடைசிப் பகுதியை `ஆப்ரட்டிவ் பார்ட் ஆஃப் தி ஜட்ஜ்மென்ட்' என்பார்கள். 

தீர்ப்பை விலாவாரியாக எழுதும்போது அதன் பக்கங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். நீதிபதி குன்ஹா தீர்ப்பை விலாவரியாக எழுதியதால் அதன் பக்கங்கள் அதிகமாயின. குற்றவாளிகள் 4 பேருக்கு இவ்வளவு பக்கங்களின் நகல்களையும் வழங்குவதாக இருந்தால் அதிகமாக ஜெராக்ஸ் போட வேண்டும். அதற்காகத்தான் அதிகத் திறன் கொண்ட புதிய ஜெராக்ஸ் எந்திரத்தைக் கேட்டு வாங்கியிருக்கிறார்கள். தீர்ப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் கோர்ட் சீல் வைக்கப்படும். இப்படி ஆயிரக்கணக்கான பக்கங்களில் சீல் வைப்பதற்காகத்தான் 12 ரப்பர் ஸ்டாம்புகளைக் கேட்டு வாங்கியிருக்கிறார்கள். 

இதை வைத்துத்தான், ஜெயலலிதாவுக்குத் தண்டனை உறுதி என்பதைத் தெரிந்துகொண்டது ஐ.பி. ஆயிரக்கணக்கில் ஜெராக்ஸ் போடுகிறார்கள் என்றாலே தீர்ப்பில் நீதிபதி பின்னி எடுத்திருக்கிறார் என முடிவுக்கு வந்து, அதை உறுதியும் செய்தார்கள். மத்திய அரசுக்கு ரிப்போர்ட் போய்ச் சேர்ந்தது.  

இதை அப்போது தமிழக உளவுத் துறையும் கிட்டத்தட்ட உறுதி செய்தது. அன்றைக்கு உளவுத் துறை ஐஜி-யான அம்ரேஷ் பூஜாரி, ஜெயலலிதாவுக்கு ரிப்போர்ட் அனுப்பினார். கொதித்துப் போன ஜெயலலிதா, அம்ரேஷ் பூஜாரியை செப்டம்பர் 23-ம் தேதி தூக்கியடித்தார். அதாவது குன்ஹா தீர்ப்புக்கு 4 நாள்கள் முன்பு நடந்த சம்பவம் இது. அதன்பிறகு `விடுதலை' என இன்னொரு ரிப்போர்ட்டை உளவுத் துறை வழங்க.. மகிழ்ச்சியடைந்த ஜெயலலிதா செப்டம்பர் 27-ம் தேதி காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காக பெங்களூரு புறப்பட்டார்.

அன்றைய தினம் சென்னையில் மழைத் தூறிக்கொண்டிருந்தது. காரில் ஏறி, அவர் புறப்பட்டபோது பாதுகாப்பு அதிகாரிகள் குடை பிடித்தார்கள். சிரித்த முகத்துடன் விமானத்தில் ஏறினார்கள் ஜெயலலிதாவும், சசிகலாவும். தீர்ப்பு சாதகமாக இருக்கும் என்பதால் `மதிய உணவு கொண்டு வர வேண்டாம்' எனச் சொல்லிவிட்டார் ஜெயலலிதா. ஆனால், குன்ஹா கோர்ட்டில் எல்லாம் தலைகீழாக மாறியது. ஜெயலலிதாவுக்கு 4 வருடச் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

செய்தியாளர்கள் யாரும் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாததால், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரம் உடனடியாகத் தெரியவில்லை. தி.மு.க. தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தாமரைச் செல்வன். தீர்ப்பு விவரம் தெரிவிக்கப்பட்டதுமே அதை முதலில் கருணாநிதிக்கு போனில் தெரிவித்தார். தமிழகத்தில் அந்தத் தீர்ப்பை முதலில் தெரிந்து கொண்டவர் கருணாநிதிதான். அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்துத்தான் தீர்ப்பு விவரம் இந்தியா முழுவதும் தெரிந்தது. 

குன்ஹா தீர்ப்பை வாசித்து முடித்ததும், ``உங்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. எனவே, இந்த நீதிமன்றத்தைவிட்டு எங்கேயும் செல்லக் கூடாது. அந்த பெஞ்சில் போய் உட்காருங்கள்'' எனச் சொல்லிவிட்டு குன்ஹா எழுந்து போனார். வெறுப்பின் உச்சத்துக்குப் போனார் ஜெயலலிதா. ஒரு முதல்வரை `இந்த இடத்தைவிட்டு எங்கேயும் நகரக் கூடாது' எனச் சொன்னதில் ஜெயலலிதாவின் ஆளுமை அங்கே சரிந்து விழுந்தது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்த முதல் முதலமைச்சர் என்கிற வரலாற்றைப் படைத்தார் ஜெயலலிதா.