Published:Updated:

கோல்மால் நடக்குது!

கோல்மால் நடக்குது!
பிரீமியம் ஸ்டோரி
News
கோல்மால் நடக்குது!

ரேஷன்கடை பணியாளர் நியமனத்தில் முறைகேடு

ள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடி(!) இது...

‘‘கவலைப்படாதீர்கள். இனிமேல், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்லும் ஆட்களுக்குத்தான் அரசு வேலை வழங்கப்படும்’’ என்று கோபிசெட்டிப் பாளையம் அருகே, கவுந்தபாடியில் ஒரு மாதம் முன்பாக நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் (பிப். 11) பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். அதுபற்றி செங்கோட்டையனிடம் விளக்கம் கேட்க முயற்சி செய்தபோது, அவர் கிடைக்க வில்லை. அவருடைய அலுவலகத்துக்கு ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி சார்பில் தொடர்புகொண்டு கேட்டபோது, செங்கோட்டையனின் ஆதரவாளர் ஒருவர், “கட்சி நிர்வாகி ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் போன்ற பணிநியமனங்கள் அ.தி.மு.க-வினர் கைகாட்டுபவர்களுக்கு வழங்கப்படும்’ என்று கூறினார்” எனச் சொல்லியிருக்கிறார்.

‘அமைச்சர் ஒன்றும் பொய் சொல்ல வில்லை. அவர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்’ என்பது இப்போது தெரியவந்துள்ளது. “கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில், அ.தி.மு.க-வினர் கைகாட்டுபவர்களுக்குத்தான் வேலை கிடைக்கிறது’’ என்ற தகவலை நம்மிடம் தெரிவித்தார் உள்விவரம் அறிந்த அதிகாரி ஒருவர்.

கோல்மால் நடக்குது!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 2,976 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2017 டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில் விதிமுறைகள் மீறப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில்தான் நியமனங்கள் நடக்கும். தவிர, 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கூடுதலான தகுதிகள் கொண்ட அனைத்துப் பதவிகளுக்கும் டி.என்.பி.எஸ்.இ சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அந்த  முடிவுகளின்படி ஆட்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர். நியாய விலைக் கடைகளில், 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புத் தகுதி கொண்டவர்கள் தேர்வு செய்யப்படுவதால், போட்டித்தேர்வு நடத்தி ஆட்கள் தேர்வுசெய்யப்பட வேண்டும். நேரடி நியமனம் செய்வது சரியான முறையல்ல. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது” என்றார். 

கோல்மால் நடக்குது!

தமிழக கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “கூட்டுறவுச் சட்ட விதிகளைமீறி, ஆளும் கட்சியின் ஆட்களுக்கு அல்லது ஆளும்கட்சி நிர்வாகிகள் கை காட்டும் ஆட்களுக்கு நேரடி நியமனங்கள் மூலம் ரேஷன் கடைகளில் வேலை கொடுக்கின்றனர்.இப்படி பணியமர்த்தப் பட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள், இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. காரணம், கூட்டுறவு சட்ட விதிகளின்படி அவர்கள் நியமனம் நடக்காததால், அவர்களை நிரந்தரம் செய்யமுடியவில்லை. 2011-ல் அ.தி.மு.க அரசு வந்த பிறகு, இதை முறைப்படுத்துவதாகக் கூறி கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மாநில ஆள் சேர்ப்பு நிலையம், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் ஆகியவற்றைத் தொடங்கினர். இவற்றின் மூலம் நேரடியாக விண்ணப்பங்கள் விற்பனை செய்கின்றனர். நேர்முகத்தேர்வு, எழுத்துத்தேர்வு ஆகியவற்றை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்கின்றனர். இது முற்றிலும் விதிமுறைகளுக்கு மாறானது.

கோல்மால் நடக்குது!

தமிழகம் முழுவதும், கூட்டுறவு பயிற்சி பெற்ற 46 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களைத்தான், ரேஷன் கடைகளில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஆனால், விதிமுறைகளை மீறி அரசு செயல்படுகிறது. ரேஷன் ஊழியர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை கடைப் பிடிக்கப்படவில்லை. இப்போது, கூட்டுறவு சங்கத்தேர்தல்கள் நடந்து, முடிவுகள் வெளியாகும் வரை பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று முடித்தார்.

நம்மிடம் பேசிய கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர், “அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் நேர்காணல் நடத்தி முடித்துவிட்டனர். ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வசூலித்துள்ளனர்” என்றார்.

கோல்மால் நடக்குது!

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இதுபற்றிக் கேட்டோம். “ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 2,976 பேரை நியமிக்க உள்ளோம். ஆனால், இதற்கு மூன்றரை லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருக்கின்றனர். அதுதான் பிரச்னை. எனவே, எப்படிப் போட்டாலும் எங்களுக்குக் கெட்ட பெயர் வரும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், இதில் விதிமுறை மீறலோ முறைகேடோ  இல்லை. யாரிடமும் பணம் வாங்கவில்லை. அப்படி வாங்கும் நபர்களைப் பிடித்து நடவடிக்கை எடுப்போம். இப்போது கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளதால்,  நியமனம் செய்யும் பணிகளை நிறுத்தியிருக்கிறோம். ஏற்கெனவே ரேஷன் கடைகளில் 30 ஆயிரம் பேரை நிரந்தரம் செய்யவில்லை என்று சொல்லப்படுவது தவறு. அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விட்டனர். ஓர்  ஆண்டு மட்டுமே தொகுப்பூதியப் பணியில் நியமனம் செய்யப் படுகின்றனர். பின்னர், அவர்களது பணி நிரந்தரம் செய்யப்படுகிறது” என்றார்.  

- கே.பாலசுப்பிரமணி