Published:Updated:

₹100 கோடி மண் கொள்ளை... பின்னணியில் தோப்பு வெங்கடாசலம்?

₹100 கோடி மண் கொள்ளை... பின்னணியில் தோப்பு வெங்கடாசலம்?
பிரீமியம் ஸ்டோரி
News
₹100 கோடி மண் கொள்ளை... பின்னணியில் தோப்பு வெங்கடாசலம்?

₹100 கோடி மண் கொள்ளை... பின்னணியில் தோப்பு வெங்கடாசலம்?

ட்டுக் கோடி ரூபாய் அபராதம்... ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுத்ததாக அ.தி.மு.க பிரமுகர்கள் இருவருக்கு சமீபத்தில் இவ்வளவு அபராதம் விதித்து ஈரோடு ஆர்.டி.ஓ நர்மதா தேவி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைகளின் பின்னால் இருந்தவர் சி.கே.நந்தகுமார். ‘பெருந்துறை வட்டத்தைச் சேர்ந்த கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியில் உள்ள நிபந்தனை பட்டா நிலங்களில், அ.தி.மு.க பிரமுகர்களான கே.ஆர்.சேனாதிபதி மற்றும் டி.சி.சுப்ரமணியம் ஆகியோர் அரசின் அனுமதியின்றி பல கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண்ணை வெட்டி எடுத்திருக்கின்றனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஈரோடு கலெக்டரிடம் புகார் கொடுத்தவர் இவர்தான்.

₹100 கோடி மண் கொள்ளை... பின்னணியில் தோப்பு வெங்கடாசலம்?

விசாரணைகள் மற்றும் ஆய்வுகள் மந்தமான நிலையில் நடக்கவே, நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மண் கொள்ளை நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களில் மூன்று மாதங்களுக்குள் டிஜிட்டல் சர்வே மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என 30.10.2017-ல் ஈரோடு கலெக்டருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, ஆர்.டி.ஓ தலைமையில் டிஜிட்டல் சர்வே பணிகள் கடந்த மாதம் நடைபெற்றன. ஆய்வில் கருமாண்டிசெல்லிபாளையத்தில் 1,20,715 கனமீட்டர், கொங்கம்பாளையம் கிராமத்தில் 13,293 கனமீட்டர், சென்னிமலை கிராமத்தில் 1,01,208 கனமீட்டர் எனச் சுமார் 2.35 லட்சம் கனமீட்டர் கிராவல் மண் அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்டதை உறுதிசெய்தார் ஆர்.டி.ஓ. இதைத் தொடர்ந்து, இதற்குக் காரணமான கே.ஆர்.சேனாதிபதிக்கு ரூ.4,22,46,360, டி.சி.சுப்ரமணியத்துக்கு ரூ.3,77,26,740 என மொத்தம் ரூ.7,99,73,100 அபாரதம் விதித்து ஆர்.டி.ஓ நர்மதா தேவி அதிரடி உத்தரவுப் பிறப்பித்தார்.

இந்த விஷயம் குறித்து நந்தகுமாரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘கிராவல் மண் கொள்ளை குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகப் பல தகவல்களைத் திரட்டினேன். அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு நிபந்தனைப் பட்டா முறையில் வழங்கப்பட்ட நிலங்களில், 2008 முதல் 2012 வரை மண் கொள்ளை நடந்தது தெரியவந்தது. மேலும், இந்த நிபந்தனைப் பட்டா நிலங்களை, 2012-ல் பெருந்துறையைச் சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த நேரத்தில்தான், கே.ஆர்.சேனாதிபதி மற்றும் டி.சி.சுப்ரமணியம் ஆகியோர் அதிகாரிகளின் துணையோடு தங்களது பெயருக்குக் கிரயம் செய்திருக்கின்றனர். இந்தக் கொள்ளை குறித்து முழுவேகத்துடன் ஆர்.டி.ஓ மேனகா என்பவர் விசாரணை செய்து, மண் கொள்ளை யடிக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார். ஆனால், தீர்ப்பு வழங்கும் நேரத்தில் அவரை டிரான்ஸ்ஃபர் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர்.

₹100 கோடி மண் கொள்ளை... பின்னணியில் தோப்பு வெங்கடாசலம்?

தற்போது 2.35 லட்சம் கனமீட்டர் மண் கொள்ளையடிக்கப் பட்டதாகக் கிட்டத்தட்ட எட்டுக் கோடி ரூபாய் அபராதம் விதித்திருக் கின்றனர். ஆனால், ‘உண்மையிலேயே சுமார் 46.5 லட்சம் கனமீட்டர் அளவுக்கு அந்தப் பகுதிகளில் மண் கொள்ளை நடை பெற்றிருக்கிறது’ என நான் ஆர்.டி.ஓ விசாரணையிலேயே வலியுறுத்தியிருக்கிறேன். அதனை முறையாக ஆய்வு செய்தால், கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் மண் கொள்ளை நடந்திருப்பது தெரியவரும்.

‘இந்த எட்டுக் கோடி ரூபாய் அபராதத்தையும் நான் அமைச்சரிடம் பேசி ரத்து செய்துவிடுவேன்’ என்று தோப்பு வெங்கடாசலம், குற்றவாளிகளிடம் உறுதி கொடுத்துள்ளார். ‘நான் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. என்னைமீறி இந்தத் தொகுதிக்குள் எதுவும் செய்ய முடியாது’ எனச் சொல்லி வருகிறார் அவர். மண் கொள்ளை விவகாரத்தில் தலையிட்டு அபராதம் விதிக்கக் காரணமாக இருந்ததால், எனக்குப் பல வழிகளில் மிரட்டல்கள் வருகின்றன. என்மீது பொய் வழக்குகளைப் பதிந்திருக் கிறார்கள். எனக்கு ஏதாவது நேரிட்டால் அதற்கு தோப்பு வெங்கடாசலம்தான் காரணம்.

₹100 கோடி மண் கொள்ளை... பின்னணியில் தோப்பு வெங்கடாசலம்?

மண் கொள்ளையில் ஈடுபட்ட கே.ஆர்.சேனாதிபதி மற்றும் டி.சி.சுப்ரமணியம் ஆகிய இருவரும் தோப்பு வெங்கடாசலத்தின் பினாமிகள். 10 வருடங்களுக்குமுன் சாதாரணமாக இருந்தவர்கள், இன்றைக்கு தலா 100 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியானது எப்படி?’’ என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து தோப்பு வெங்கடாசலத்திடம் கேட்டபோது, “2008-ல் தி.மு.க ஆட்சியின்போதுதான் மண் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு அ.தி.மு.க ஆட்சி வந்தவுடனேயே அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னைப் பொறுத்த வரைக்கும் தமிழ்நாட்டுலயே மிஸ்டர் க்ளீன் எம்.எல்.ஏ நான்தானுங்க. என்கூட இருக்குறவங்களைத் தப்புப் பண்ண அனுமதிக்கிறது இல்லை. அப்படி யாராவது இருந்தா அவங்களை கிட்டயே வெச்சுக்க மாட்டேனுங்க. என்னைப் பிடிக்காதவங்க நந்தகுமாரைத் தூண்டிவிட்டு இப்படிச் செஞ்சிக்கிட்டு இருக்காங்க” என்றார்.

₹100 கோடி மண் கொள்ளை... பின்னணியில் தோப்பு வெங்கடாசலம்?

இந்த மண் கொள்ளை விவகாரம் குறித்து ஈரோடு கலெக்டர் பிரபாகரிடம் பேசினோம். “அளவீடுகள் சரியாக நடைபெறவில்லை எனில், தகுந்த ஆதாரத்தோடு ஆர்.டி.ஓ-வைச் சந்தித்து மனு கொடுக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு நான் அதிகாரிகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்றார்.

குழி தோண்டுற வேலைதான் மனுஷனுக்குப் பிடிச்ச வேலை!

- நவீன் இளங்கோவன்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி