
பரிதாபத்தில் சென்னைப் பள்ளிகள்

‘‘எங்க டீச்சர்ஸ் எல்லோருமே நல்லா சொல்லித் தருவாங்க. நாங்களும் அக்கறையா படிப்போம். அதனாலதான், ஒவ்வொரு வருஷமும் ரிசல்ட்ல எங்க ஸ்கூல் டாப்ல வருது. ஆனா, இங்கே கட்டடமும் சரியில்ல; பராமரிப்பும் சரியில்ல. பெஞ்ச் எல்லாம் உடைஞ்சிருக்கு. சில கிளாஸ்கள்ல பெஞ்ச் இல்ல. அதனால, தரையிலதான் உட்காரணும். தரையும் ஒரே அழுக்கா இருக்கு. எங்க பள்ளிக்கூடத்தை ஒட்டி ஒரு குப்பைமேடு இருக்கு. அங்கயிருந்து மோசமான நாத்தம் வரும். அதனால, எங்களால பாடத்தைக் கவனிக்கவே முடியாது.இதையெல்லாம் சரிசெஞ்சா, எந்த பிரைவேட் ஸ்கூலும் எங்களை அடிச்சுக்க முடியாது’’ என்கிறார்கள், சென்னை பெரம்பூரில் உள்ள ‘சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி’ மாணவிகள்.
சென்னைப் பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில், சென்னை மாநகரில் இதுபோல ஏராளமான பள்ளிகள் உள்ளன. ‘மாநகராட்சிப் பள்ளிகள்’ என இருந்த இவை, தி.மு.க ஆட்சிக்காலத்தில் ‘சென்னைப் பள்ளிகள்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இந்தப் பள்ளிகளில் படிக்கிற பலரும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வாழ்க்கையில் தாங்கள் உயர்வதற்குக் கல்வி ஒன்றே வழி என்ற நம்பிக்கையுடன் வருபவர்கள். ஆனால், போதிய நிதி ஒதுக்கப்படாமல், இந்தப் பள்ளிகளின் தரம் பாதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிக்கும்போது, 23 சதவிகிதம் கல்வி வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளுக்குச் செலவிட வேண்டும். ஆனால், கல்வித்துறையிலிருந்து சென்னைப் பள்ளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இந்த நிதியைத் திருப்பி அம்மா உணவகங்களுக்குச் செலவிட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம். “பள்ளிகளுக்காக எதைச் செய்யச்சொல்லிக் கேட்டாலும், ‘நிதி இல்லை’ என மாநகராட்சி மண்டலப் பொறியாளர்கள் சொல்கிறார்கள். அம்மா உணவகத்துக்கு நிதியைச் செலவழித்துவிட்டோம் என்கின்றனர். பல பள்ளிகளில் காம்பவுண்டு சுவர் கிடையாது. அதனால், இரவிலும் விடுமுறை நாள்களிலும் சமூகவிரோதிகள் நுழைந்து குடிநீர்க் குழாய்களையும் கழிவறைகளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து அவற்றைப் பழுதுபார்க்க வேண்டியுள்ளது.
மாநகராட்சி மண்டல இணைப் பொறியாளர், உதவிப் பொறியாளர்கள் ஒத்துழைப்பு இல்லாமல், பள்ளிகளில் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை. அவர்கள், எல்லா வற்றிலும் ‘கட்டிங்’ எதிர் பார்க்கின்றனர். வர்தா புயலில் விழுந்த மரங்களை அகற்று வதற்குக்கூட மூன்று மாதங்கள் ஆனது. சில தன்னார்வ அமைப்பு கள், பள்ளிகளுக்குக் கழிவறைகள் கட்டித் தருகின்றனர். ஆனால், அவற்றைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டவர்களுக்கு 300 ரூபாய்தான் மாதச் சம்பளம். சென்னைப் பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணி ஆகியவற்றை ஒப்பந்த அடிப்படையில் விட்டனர். ஒப்பந்ததாரர்கள் 15 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, பணியாளர்களுக்கு வெறும் 8,000 ரூபாயைத்தான் சம்பளமாகத் தருகின்றனர். பள்ளிகளில் அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்கப் போதுமான பணம் மாநகராட்சிக்கு வருகிறது. ஆனால், அந்தப் பணத்தில்தான் அம்மா உணவகங்களில் சாப்பாடு போடுகிறார்கள்” என்றார்.

கல்வி நிதியை முறையாகப் பள்ளிகளுக்குச் செலவிடுகிறார் களா என்பதை அறிவதற்காகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், ‘விகடன் ஆர்.டி.ஐ குழு’ மூலமாகச் சில தகவல்களைக் கோரினோம். அதற்கு அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், ‘மாநகராட்சி சொத்துவரி வசூலில், 23 சதவிகிதம் கல்வி வரி (Education Cess) ஆக வசூலிக்கப்படுகிறது. 2006 முதல் 2016 வரை ரூ.746 கோடியே 18 லட்சத்து 61 ஆயிரம் கல்வி வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.657 கோடியே 8 லட்சத்து 66 ஆயிரம் மட்டும்தான் செலவழிக்கப்பட்டுள்ளது. ரூ. 89 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரம் செலவழிக்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளனர். செலவழிக்கப்படாத தொகை எங்கே போனது என்பதற்கு நேரடியாக விளக்கம் தரவில்லை.
இந்தப் பிரச்னை குறித்துத் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் அருமைநாதனிடம் பேசினோம். ‘‘மாநகராட்சி நடத்தும் சென்னைப் பள்ளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் போதுமான பெஞ்ச் இல்லை, குடிநீர் வசதி இல்லை, மின்விசிறிகள் இல்லை, கழிவறை வசதிகள் இல்லை. சில மாநகராட்சிப் பள்ளிகளில் காம்பவுண்டு சுவர் இல்லை. காவலாளிகள் இல்லை. இதனால், அவை இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளன. சென்னைப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியர்கள் பலர் கேட்டுள்ளனர். ஆனால், எந்த வசதியும் செய்துதரப் படவில்லை. ‘மாநகராட்சி சொத்துவரியில் கல்விக்காக எவ்வளவு வசூலித்துள்ளனர், எவ்வளவு செலவழித்தனர்’ என்று நாங்களும் ஆர்.டி.ஐ மூலம் கேட்டோம். அதற்கு, 2005 முதல் 2008 வரை வசூலிக்கப்பட்ட தொகையில் ரூ. 66 கோடியைச் செலவழிக்கவில்லை என்று சொல்லியிருந்தனர். ‘கல்விக்காகச் செலவழிக்காமல் வேறு எதற்காகச் செலவழிக்கி றீர்கள்’ என்று கேட்டதற்கு, ‘கல்வி தவிர வேறு வகைகளில் செலவழிக்கிறோம்’ என்று மாநகராட்சி சார்பில் கூறினர். ‘வேறு வகைகளில் என்றால் எதற்கு’ என்று கேட்டதற்கு அவர்கள் பதில் தரவில்லை” என்றார் வருத்தத்துடன்.

குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன், “கல்வி வரியாக வசூலிக்கப்படும் நிதியைக் கல்விக்கு மட்டுமே செலவிட வேண்டும். சென்னையில் சில மாநகராட்சிப் பள்ளிகளை மூடிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். சில பள்ளிகளைப் பக்கத்தில் இருக்கும் பிற பள்ளி களுடன் இணைத்துவிட்டார்கள். ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்’ என்று கேட்டபோது, ‘குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது’ என்கிறார்கள். கூவம், அடையாறு ஆற்றோரங்களில் வசித்த குடும்பங்களைக் கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்றம் செய்துள்ளனர். அங்கு குழந்தைகள் இருக்கின்றனர்; ஆனால், பள்ளிகள் இல்லை. வாடகைக் கட்டங்களில்தான் பள்ளிகள் செயல்படுகின்றன. பல பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் இல்லை. சில பள்ளிகளில், தரமான ஆய்வகங்கள் இல்லை. ‘தமிழ்நாட்டில் நிறைய பள்ளிகளில் உள்ள கழிவறைகள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றமே விமர்சித்துள்ளது” என்றார் வருத்தத்துடன்.
இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமாரிடம் விளக்கம் கேட்டோம். “சென்னைப் பள்ளிகளில் அவ்வப்போது பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொண்டு வருகிறோம். பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அம்மா உணவகம் போன்ற வேறு வகையில் செலவழித்துவிட்டோம் என்று மண்டல அதிகாரிகள் சொல்ல முடியாது. அதற்கு வாய்ப்புகள் இல்லை. மாநகராட்சிப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அதன்படி உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். நீங்கள் சொன்ன விவரங்களையும் கவனத்தில் கொள்கிறோம்” என்றார் விளக்கமாக.
- கே.பாலசுப்பிரமணி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்