அலசல்
Published:Updated:

பி.ஜே.பி-யில் சேர்ந்தால் காஸ் கனெக்‌ஷன்!

பி.ஜே.பி-யில் சேர்ந்தால் காஸ் கனெக்‌ஷன்!
பிரீமியம் ஸ்டோரி
News
பி.ஜே.பி-யில் சேர்ந்தால் காஸ் கனெக்‌ஷன்!

உஜ்வாலா உஜாலா

“மதுரை மாவட்டத்தில் பி.ஜே.பி-யினர் பணம் வாங்கிக்கொண்டு இலவச காஸ் இணைப்புகளை வழங்குகிறார்கள்” என்று மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்து பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

இதுகுறித்துப் புகார் கொடுத்த மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயனிடம் பேசினோம். ‘‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா விரிவாக்கத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த, சமையல் எரிவாயு வசதி இல்லாத குடும்பங்களுக்கு, இலவச காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. கூடவே இலவச காஸ் அடுப்பும் வழங்குகிறார்கள். இந்த இலவச காஸ் இணைப்பு வழங்குவதற்கு, பயனாளிகளிடம் இங்குள்ள பி.ஜே.பி-யினர் பணம் வாங்குகிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை, மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவோ, மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவோ, அல்லது மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மூலமாகவோ வழங்குவதுதான் வழக்கம். அப்படிச் செய்தால்தான், உண்மையான பயனாளிகளுக்குத் திட்டம் சென்றடையும்.

பி.ஜே.பி-யில் சேர்ந்தால் காஸ் கனெக்‌ஷன்!

ஆனால், இந்தத் திட்டத்தில் பி.ஜே.பி-யினர் முறைகேடு செய்கிறார்கள். காஸ் ஏஜென்சிகள் மூலமாகப் பட்டியல் பெற்றுக்கொண்டு, பயனாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு காஸ் இணைப்புகளை வழங்கி வருகின்றனர். மேலும், பயனாளிகளை பி.ஜே.பி-யினர் தங்கள் கட்சியில் உறுப்பினராக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இலவச இணைப்புக்காக அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லியும் வசூலில் ஈடுபடுகிறார்கள். அத்துடன் நிற்காமல், தங்கள் சொந்தப் பணத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதுபோல போஸ்டர்கள் அடித்தும், பேனர்கள் வைத்தும் விளம்பரம் தேடுகிறார்கள். எனவேதான், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சம்பந்தப்பட்ட பி.ஜே.பி-யினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவசமாக காஸ் இணைப்புகளை வழங்க வேண்டும் என்றும் மனு கொடுத்தோம்’’ என்றார்.

வாடிப்பட்டி, மேலூர், அலங்காநல்லூர், திருமங்கலம் உள்பட பல இடங்களில் நாம் விசாரித்ததில் உஜ்வாலா திட்டத்துக்காக பயனாளிகளிடம் பி.ஜே.பி-யினர் பணம் வாங்குவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

பி.ஜே.பி-யில் சேர்ந்தால் காஸ் கனெக்‌ஷன்!

இந்த விவகாரம் குறித்து பி.ஜே.பி-யின் மதுரை மாவட்டத் தலைவர் சசிராமனிடம் கேட்டதற்கு, ‘‘உஜ்வாலா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சியால் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. காங்கிரஸ்காரர்கள் இப்படிப் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சொல்லக்கூடாது. எதிர்க்கட்சி என்றால் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்கின்றனர். பி.ஜே.பி-யினர் இப்படி பணம் வாங்கித்தான் காஸ் வழங்குகிறார்கள் என்று உறுதி செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்ரமணியிடம் கேட்டோம். ‘‘இது மத்திய அரசின் திட்டம். எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இதில் தவறுகள் நடப்பதாகப் புகார் எதுவும் வரவில்லை. அப்படியே புகார் வந்தாலும், அது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாத விஷயம்’’ என்றார்.

- அருண் சின்னதுரை,  படம்: வீ.சதீஷ்குமார்