அலசல்
Published:Updated:

“கலெக்டர் காலிங்... டி.என்.பி.எஸ்.சி ஆபீஸர் காலிங்!”

“கலெக்டர் காலிங்... டி.என்.பி.எஸ்.சி ஆபீஸர் காலிங்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கலெக்டர் காலிங்... டி.என்.பி.எஸ்.சி ஆபீஸர் காலிங்!”

தேர்வாணையத் தில்லுமுல்லுகள்!

யிற்றைக் கட்டி வாயைக் கட்டி, படாதபாடு பட்டுப் படித்து, அரசாங்க வேலைக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கிறார்கள் தமிழகத்தின் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல லட்சம் பேர். ஆனால், அவர்களின் வயிற்றில் அடிப்பதுபோல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகளில் தகிடுதத்தம் நடப்பது குறித்த செய்திகள் அனைவரையும் அதிர வைத்துள்ளன. குறிப்பாக, குரூப் 1 பணிகளுக்கான தேர்வின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள், ‘சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று அரசியல் கட்சிகள் குரல் எழுப்பும் அளவுக்கு பகீர் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, தி.மு.க செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், “2016-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில், 74 பதவிகளுக்கு மனிதநேய மையம், அப்போலோ பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுத் தேர்வு எழுதியவர்கள், 62 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதும், இந்த மையங்களில் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வுகளில் உள்ள கேள்விகளில் 60 சதவிகிதம் கேள்விகள் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்டுள்ளன என்பதும் மிகப்பெரிய மோசடியாகவும், நேர்மையாகத் தேர்வு எழுதும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் விதத்திலும் உள்ளது.

“கலெக்டர் காலிங்... டி.என்.பி.எஸ்.சி ஆபீஸர் காலிங்!”

இந்த இமாலய முறைகேடு வழக்கில், முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாமலும், கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுப்பதற்கு உதவியாகவும் சென்னை மாநகரக் காவல்துறையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தேர்வாணையத்தில் உள்ளவர்களும், அந்த இரண்டு பயிற்சி மையத்தினரும் ரகசியக் கூட்டணி வைத்து முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். இதில் குற்றம்சாட்டப்படும் முன்னாள் மேயரும், அ.தி.மு.க புள்ளியுமான சைதை துரைசாமியிடம் காவல்துறை இதுவரை விசாரணை நடத்தவில்லை. அப்போலோ பயிற்சி மையத்தின் இயக்குநர் சாம் ராஜேஸ்வரனுக்கு முன்ஜாமீன் அளிப்பதை  அ.தி.மு.க அரசு எதிர்க்கவில்லை.

ஆகவே, இந்த விசாரணையை உயர் நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும், முறைகேட்டுக்குத் பணியாளர் தேர்வாணையத்தின் உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்தின் முக்கிய புள்ளிகள் உள்ளிட்டோரைக் காலம் தாழ்த்தாமல் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “டி.என்.பி.எஸ்.சி தலைவர் அருள்மொழி, முக்கியமான கால கட்டத்தில் விடுப்பில் சென்றுள்ளார். அவர் சொந்தக் காரணங்களுக்காக விடுப்பில் சென்றாரா? அல்லது, முறைகேடுகள் செய்வதற்கு வசதியாக விடுப்பில் செல்லும்படி நிர்ப்பந்திக்கப் பட்டாரா? முதன்மைத் தேர்வு முடிந்த ஒன்பது மாதங்களில் அதன் முடிவுகளை வெளியிட அருள்மொழி பல முறை முயன்றும், அதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது உண்மையா? அப்படியானால் அதற்கு யார் காரணம்?” எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எப்போது பார்த்தாலும் எங்கள் மையத்தில் பயிற்சிபெற்றவர்கள் 50 பேர் வெற்றி... எங்கள் மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 100 பேர் வெற்றி என்று செய்தித்தாள்களில் படபடக்கும் செய்திகளை நம்பி பயிற்சிக்காக ஓடோடி வரும் தமிழகத்தின் இளையதலைமுறை, தற்போது இந்த முறைகேடுகளால் நிலைகுலைந்துபோயுள்ளது. இந்த மோசடிகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பாக, பழங்கதை ஒன்றை முதலில் தெரிந்து கொள்வது முக்கியம்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில், டி.என்.பி.எஸ்.சி தேர்வு விடைத்தாள் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப் பட்டது. அதில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் எழுதப்பட்டிருந்தன. அது, ஒரு தபாலில் வைக்கப்பட்டு அந்தத் தனியார் தொலைக்காட்சிக்கு அனுப்பப் பட்டிருந்தது. அத்துடன் வைக்கப்பட்டிருந்த கடிதத்தில், “டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்படித்தான் முறைகேடு நடக்கிறது; வினாக்களுக்கான விடைகளை வெளியில் உள்ளவர்கள் எழுதிக்கொடுத்து, அதை உள்ளே சேர்த்துவிடுகின்றனர். அதற்குச் சாட்சிதான் இந்த விடைத்தாள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை, ஒரு ‘ஸ்கூப்’ செய்தியாக அந்தத் தொலைக்காட்சி வெளியிட்டது. அதையடுத்து, சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் புகார் கொடுத்தது. அதில், “தங்கள் ஆணையத்தின் மீது இப்படி தவறாகக் குற்றம்சாட்டும் தனியார் தொலைக்காட்சி மீதும், அந்த விடைத்தாள் குறித்த விவகாரத்திலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகாரில் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்தப் புகார், சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்டது. போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தனியார் தொலைக்காட்சிக்கு வந்த விடைத்தாளில், பதில்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தன. அதில் இருந்த பதிவு எண்ணை வைத்து, அந்தத் தேர்வை எழுதிய நபரை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர், ஒரு பெண். குரூப்-1 தேர்வை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அவரது விடைத்தாள் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பத்திரமாக இருந்தது. அவர் எழுதிய விடைத்தாளுக்கும் தனியார் தொலைக்காட்சியில் வெளியான விடைத்தாளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரியவந்தது. அப்படியானால், இந்த விடைத்தாளில் எதற்காகப் போலியாக விடைகளை எழுதினார்கள்? அதைச் செய்தது யார்? விடைத்தாள் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்று மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அந்தத் தபாலில் இருந்த முகவரி போலி என்பது தெரியவந்தது. அதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அதில், டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தின் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் சிவசங்கர், சந்தேகத்துக்குரிய சில நபர்களுடன் பேசியிருப்பது தெரியவந்தது. அதையடுத்து, அவரையும் அந்த நபர்களையும் விசாரணைக்கு உட்படுத்தியது போலீஸ்.

சிவசங்கரிடம் நடத்திய விசாரணையில், அவர்தான் விடைத்தாளை எடுத்து வெளியில் கொடுத்தவர் என்பது தெரியவந்தது. அவர் ஏன் அதைக் கொடுத்தார் என்று விசாரித்தபோது, ராம்குமார் என்பவர் மீது சந்தேக ரேகை படிந்தது. ராம்குமார், 2014-ம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதுவதற்காக சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ‘மனிதநேய அறக்கட்டளை’ பயிற்சி மையத்தில் படித்தவர். எப்படியாவது குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்,  அதற்கான வழிகளை அவர் தேடிக்கொண்டிந்தார். அது பற்றி, ராம்குமார் தன் மாமா சேதுராமனிடம் பேசியுள்ளார். அதையடுத்து அவர், தனக்குத் தெரிந்தவர்களிடம் பேசி, பால்ராஜ் என்பவரை ராம்குமாருக்கு அறிமுகம் செய்துள்ளார். பால்ராஜ், ‘ரூ. 25 லட்சம் கொடுத்தால், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற வைக்கிறேன்’ என்று ராம்குமாரிடம் கூறியுள்ளார். அதன்படி ரூ. 25 லட்சத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், தேர்வில் தோல்வியடைந்து விட்டதால், ரூ. 2 லட்சத்தைப் பிடித்துக்கொண்டு மீதியை ராம்குமாருக்குத் திருப்பிக் கொடுத்துள்ளார் பால்ராஜ்.  பின்னர், ‘2015-ல் குரூப் 1 தேர்வு வருகிறது. அதில் உதவி செய்கிறேன்’ என்று சொல்லி ராம்குமாரிடம் பால்ராஜ் ரூ. 5 லட்சம் கேட்டுள்ளார். ரூ. 2 லட்சம் மட்டும் ராம்குமார் கொடுத்துள்ளார்.

பால்ராஜ்  இரண்டு புது சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். அவற்றில் ஒன்றை கலெக்டர் ஒருவர் பெயரிலும், மற்றொரு சிம் கார்டை டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரி ஒருவர் பெயரிலும் தன்னுடைய மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இப்படிப் பதிவுசெய்து, மற்றொருவருக்கு தொலைபேசியில் அழைத்தால், அவரின் ‘காலர் ஐடி’-யில் ‘கலெக்டர் காலிங்’, ‘டி.என்.பி.எஸ்.சி ஆபீஸர்’ காலிங்... என்று காட்டும். இந்த டெக்னிக்கைப் பயன்படுத்திய பால்ராஜ், கலெக்டர் ஒருவர் அழைப்பதுபோல் காசிராம்குமாரை அழைத்து, “நமக்கு வேண்டப்பட்ட ராம்குமார் என்பவர் வருவார்; அவருக்குத் தேவையானதைச் செய்து கொடுங்கள்” என உத்தரவிட்டுள்ளார். அதை நம்பிய காசிராம்குமார், ‘இந்த விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது; தேர்வு விடைத்தாள் திருத்தும் பொறுப்பில் உள்ள சிவசங்கரை ராம்குமாருக்கு அறிமுகம் செய்கிறேன். அவரிடம் பேசட்டும்’ என்று சொல்லி, சிவசங்கரின் போன் நம்பரை ராம்குமாரிடம் கொடுத்துள்ளார். சிவசங்கரிடம் பால்ராஜும், ராம்குமாரும் பேசியுள்ளனர். அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்ட சிவசங்கர், ‘விடைத்தாளை உன்னிடம் கொடுத்து, அதை மீண்டும் உள்ளே சேர்ப்பதுதான் என் வேலை. அதில் நீ பாஸ் செய்வதற்கோ... ஃபெயிலாவதற்கோ என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது’ என்று சொல்லி, தேர்வு எழுத பதிவுசெய்து கடைசி நேரத்தில் பங்கேற்காமல்போன ஒருவரின் விடைத்தாளை ராம்குமாருக்குக் கொடுத்துள்ளனர்.

1981 முதல் சென்னையில் வசிக்கும் பால்ராஜ், அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் சப்-காண்டிராக்டை எடுத்துச் செய்தவர். அதுபோக, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்பவர். இவர், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பில்லிங் சூப்பர்வைசர், டி.டி.இ., அசிஸ்டென்ட் மேனேஜர் ஆகிய பதவிகளை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 15 லட்சம் வரை ஏற்கெனவே மோசடி செய்தவர். அதுதொடர்பாக அவர் மீது பதிவான வழக்கு நிலுவையில் உள்ளன. இந்த நேரத்தில்தான், பால்ராஜுக்கு ராம்குமாரின் மாமா சேதுராமன் அறிமுகமாகியுள்ளார்.

இதைப் பற்றி பேசும் தேர்வாணைய வட்டாரத்தைச் சேர்ந்த சிலர், “ராம்குமாருக்கு டி.என்.பி.எஸ்.சி விடைத்தாள் கிடைத்தாலும், அதில் விடைகளை எழுதி மீண்டும் உள்ளே சேர்ப்பது அத்தனை எளிதான விஷயமல்ல. டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரியாக உதயச்சந்திரன் இருந்தபோது, அனைத்து தேர்வு நடைமுறைகளையும் கேமராவில் பதிவு செய்யும் முறையைக் கொண்டு வந்துவிட்டார். மேலும், ஒரு தேர்வர் தேர்வு எழுதும்போது, அந்த அறையின் சூப்பர்வைசர், தேர்வர், தலைமை சூப்பர்வைசர், டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஒருவர் ஆகியோர் அந்த விடைத்தாளில் கையெழுத்திட்டு, சீலிட்ட கவரில் வைத்து அனுப்புவார்கள். டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்துக்கு வந்தபிறகு, அவற்றுக்கு கணினி மூலம் ‘டம்மி’ நம்பர்கள் கொடுத்துவிடுவார்கள். இதெல்லாம் தெரியாமல்தான், விடைத்தாளை உள்ளே சேர்த்துவிடுகிறோம் என்று சொல்லி ஏமாற்றியுள்ளனர். ஆக, ராம்குமார் தேர்வு எழுதியதாகவே கணக்கில் வரவில்லை. பிறகு, எப்படி அவர் பாஸ் செய்வது? அந்தக் கோபத்தில்தான் தேர்வு முடிவுகளை ரத்து செய்யவும், மீண்டும் தேர்வை நடத்த வைக்கவும், ராம்குமார் உள்ளிட்ட சிலர் அந்த விடைத்தாளை தனியார் தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர்” என்கிறார்கள்.

இந்த விஷயம் இப்படி திசை திரும்பினாலும்... மேலும் மேலும் பல்வேறு தகவல்கள் சுழற்றி அடிக்க, அவையெல்லாம் மனித நேய மையத்தின்  சைதை துரைசாமி மற்றும் அப்பல்லோ சாம் ராஜேஸ்வரன் ஆகியோரைக் கடைசியாகச் சுழற்ற ஆரம்பித்துள்ளது.

(தொடரும்)

- ஜோ.ஸ்டாலின்