Published:Updated:

தாமிரபரணி... நதிநீர் இணைப்பில் ₹100 கோடி ஊழல்!

தாமிரபரணி... நதிநீர் இணைப்பில் ₹100 கோடி ஊழல்!
பிரீமியம் ஸ்டோரி
News
தாமிரபரணி... நதிநீர் இணைப்பில் ₹100 கோடி ஊழல்!

தாமிரபரணி... நதிநீர் இணைப்பில் ₹100 கோடி ஊழல்!

முதன்முதலாகத் தமிழகத்தில் தொடங்கப்பட்ட நதிநீர் இணைப்புத் திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம். இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப் பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தாமிரபரணி... நதிநீர் இணைப்பில் ₹100 கோடி ஊழல்!

தமிழ்நாட்டில் உற்பத்தியாகித் தமிழக எல்லைக்குள் ஓடி கடலில் கலப்பதால், அண்டை மாநிலங்களுடன் தண்ணீர்ப் பிரச்னை ஏதுமில்லாத ஆறாகத் தாமிரபரணி விளங்குகிறது. தாமிரபரணியில் ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் சராசரியாக 15 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. வீணாகும் தண்ணீரைத் தேரிக்காடுகள் பகுதிக்குத் திருப்பிவிட வெள்ளநீர் வடிகால்வாய் வெட்டப்பட்டு, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தாமிரபரணி ஆற்றின் கிளையான கன்னடியன் கால்வாயிருந்து புதிதாகக் கால்வாய் அமைத்து, திசையன்விளை அருகே எம்.எல்.தேரி எனும் கிராமம் வரை, 73 கி.மீ தூரம் நீரைத் தேக்கத் திட்டமிடப்பட்டது. இந்த வெள்ளநீர்க் கால்வாயுடன், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியே வரும் நம்பியாறு, கருமேனியாறு, எலுமிச்சையாறு, கோரையாறு, பச்சையாறு உள்ளிட்ட காட்டாறுகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

வெள்ளங்குழி முதல் எம்.எல்.தேரி வரை 3,000 கன அடி தண்ணீர் கொண்டுசெல்லும் அளவுக்கு, கால்வாய் வெட்டும் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதற்காக, 319 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2009 பிப்ரவரி 29-ம் தேதி அப்போதைய முதல்வரான கருணாநிதி, திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தப் பணிகள் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. வெள்ளங்குழி - திடியூர் மற்றும் திடியூர் - மூலக்கரைப்பட்டி என்ற இருகட்டப் பணிகள் 39 கி.மீ தூரத்துக்கு முடிக்கப்பட்டன. 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்தப் பணிகளைத் தமிழக அரசு கிடப்பில் போட்டது. இந்தப் பணிகள் நிறைவேறினால் ராதாபுரம், நாங்குநேரி, திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால், முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு நீதிமன்றத்துக்குச் சென்று போராடி இந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடப்பதாக, இப்போது புகார் கிளம்பியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தாமிரபரணி... நதிநீர் இணைப்பில் ₹100 கோடி ஊழல்!

இதுபற்றி முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவுவிடம் பேசினோம். ‘‘இந்தத் திட்டத்தை தி.மு.க கொண்டுவந்தது. அதற்காகவே இவர்கள் கிடப்பில் போட்டார்கள். இந்தத் திட்டம் முடிவடைந்தால், தேரிக்காடுகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். அதில் உள்ள உவர் தன்மை மறையும். அத்துடன், 50,000 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஏராளமான கிராமங்களுக்குக் குடிநீர் வசதி கிடைக்கும். அதனால், ஏழு வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்கக் கோரி நீதிமன்றத்துக்குச் சென்றேன். தமிழக அரசு, திட்டத்தை மீண்டும் தொடங்கு வதாக உறுதியளித்தது.

இந்த நிலையில், 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களாகக் கால்வாய் வெட்டும் பணிக்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக, 161.84 கோடி ரூபாய் நில ஆர்ஜிதத்துக்கும், 61.21 கோடி ரூபாய் கால்வாய் வெட்டும் பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எந்தப் பணியுமே நடக்கவில்லை. ஆனால், பணிகள் நடப்பதாக அரசு அறிவித்தது.

அதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், ‘அரசு ஒதுக்கிய நிதியில் என்ன பணிகள் நடந்தன?’ எனக் கேட்டேன். அதில் கிடைத்த தகவல்கள் என்னை அதிர்ச்சியடைய வைத்தன. மூன்றாவது, நான்காவது கட்டங்களாக 34 கி.மீ தூரத்துக்குக் கால்வாய் வெட்டும் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, ஏற்கெனவே கால்வாய் வெட்டிய இடங்களில் தனித்தனியே 30 சீரமைப்புப் பணிகள் செய்ததாகச் சொல்லிச் சுருட்டிவிட்டார்கள். இதில், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. இதுதவிர, கால்வாய் தோண்டும்போது கிடைத்த பாறைகளையும் கற்களையும் அங்கேயே குவித்து வைத்திருந்தார்கள். அவற்றை உள்ளூர் ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலர்,  எம். சாண்ட் தயாரிக்கவும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். இதிலும் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருக்கிறது’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. வருவாய்த் துறையினர் அந்தப் பணிகளை முடித்துக் கொடுத்தால், உடனடியாக நாங்கள் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டமாகக் கால்வாய் தோண்டும் பணிகளைத் தொடங்கி முடித்துவிடுவோம். ஏற்கெனவே தோண்டப் பட்ட இடங்களில் மீண்டும் கற்களும் மண்ணும் விழுந்து மூடிவிட்டன. சில இடங்களில் பணிகள் முழுமையாக முடிவடையாமல் இருந்தன. அதனால்தான், அந்த இடங்களில் மீண்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. விதிமுறைகளுக்கு உட்பட்டே பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்று முடித்துக்கொண்டனர்.

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்