Published:Updated:

“நாங்கள் தூர்வாரினோம்... ரூ.19 லட்சம் செலவழித்ததாக அதிகாரிகள் கல்வெட்டு வைத்தனர்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நாங்கள் தூர்வாரினோம்... ரூ.19 லட்சம் செலவழித்ததாக அதிகாரிகள் கல்வெட்டு வைத்தனர்!”
“நாங்கள் தூர்வாரினோம்... ரூ.19 லட்சம் செலவழித்ததாக அதிகாரிகள் கல்வெட்டு வைத்தனர்!”

“நாங்கள் தூர்வாரினோம்... ரூ.19 லட்சம் செலவழித்ததாக அதிகாரிகள் கல்வெட்டு வைத்தனர்!”

பிரீமியம் ஸ்டோரி

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் செயல்படுத்து வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது’ என்று சட்டமன்றத்தில் பெருமையாகப் பேசினார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ் வேலையே செய்யாமல், பல லட்சங்களை அதிகாரிகள் லபக்கிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரில் 350 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய குளம் உள்ளது. 500 ஏக்கருக்கும் மேலான விளைநிலங்களின் பாசனத்துக்கு ஆதாரமாக இந்தக் குளம் விளங்குகிறது. பிளாஸ்டிக் குப்பைகளும் முள்செடிகளும் நிறைந்துகிடந்த இந்தக் குளத்தில், சமூக ஆர்வலர்களும் கல்லூரி மாணவர்களும் இணைந்து தூர்வாரினர். ஆனால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் இந்தக் குளத்தைத் தூர்வாரியதாகக் கணக்குக் காட்டி, ரூ.19 லட்சத்தை அதிகாரிகள் சுருட்டிவிட்டனர் என்று குற்றம்சாட்டுகிறார்கள் குண்டூர் மக்கள்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் நெடுஞ்செழியன், “எங்கள் ஊரில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதே இல்லை. ஆனால், கடந்த வருடம் பெரியகுளம் வறண்டுபோய் விட்டது. குடிநீருக்கே மக்கள் திண்டாடினர். அப்போதுதான், பெரியகுளத்தை ஆழப்படுத்தி, தண்ணீரைச் சேமிக்க முடிவெடுத்தோம். நானும், பெல் மகேந்திரன் என்பவரும் இணைந்து ‘குண்டூர் பெரியகுளம் காப்புக் குழு’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினோம். பிறகு, எங்களுக்கு உதவிட தண்ணீர் அமைப்பின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டோம்.

“நாங்கள் தூர்வாரினோம்... ரூ.19 லட்சம் செலவழித்ததாக அதிகாரிகள் கல்வெட்டு வைத்தனர்!”

அதையடுத்து, 2017 ஜூனில், கலெக்டர் ராசாமணி முன்னிலையில் குளத்தைத் தூர்வாரும் பணியைத் தொடங்கினோம். அப்போது எங்களிடம் பேசிய கலெக்டர், ‘தூர்வாரும் பணியைச் சிறப்பாகச் செய்யுங்கள். குளத்தின் நடுவே திட்டுகள் அமைத்து மரங்கள் உண்டாக்கி, வெளிநாட்டுப் பறவைகள் வந்துசெல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய பணிகள் மேற்கொள்ளப்படும். சுற்றுலாத்துறையின் மூலம் குளத்தில் படகு விடவும், குளத்தின் கரையில் நடைப்பயிற்சிக்குத் தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தார்.

விவசாயிகள், பெண்கள், திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் இணைந்து குப்பைகளை அகற்றினோம். வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி வாங்கி, விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுத்துக் கொடுத்தோம். 100 மீட்டர் அகலம், 3 அடி ஆழம் என மண் எடுத்து, குளத்தின் கரையைப் பலப்படுத்தினோம். இதற்காக, சுமார் 50 நாள்கள் வேலை செய்தோம். அதற்கான செலவுகளை, குண்டூர் விவசாயிகள் சங்கத்தினரும் நண்பர் ஒருவரும் ஏற்றுக்கொண்டனர். மொத்தம் ரூ.9 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால், ரூ.19 லட்சம் அரசு செலவு செய்ததாகக் கணக்குக் காட்டி, அதிகாரிகள் மோசடி செய்துள்ளனர்’’ என்றார் ஆவேசமாக.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரிசங்கு, “நாங்கள் செய்த பணிகளை மாவட்ட கலெக்டர் அடிக்கடி வந்து பார்த்தார். அடுத்த சில வாரங்களில், தொடர்ந்து மழை பெய்ததால் குளம் நிரம்ப ஆரம்பித்தது. அதனால், தொடர்ந்து குளத்தைத் தூர்வார முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, குண்டூர் பெரிய குளத்தின் கரைகளைப் பலப்படுத்தவும், மதகுகளைப் புதுப்பிக்கவும் உலக வங்கியிலிருந்து ரூ.2.75 கோடி நிதி உதவிக் கிடைத்துள்ளதாகக் கூறிய பொதுப்பணித் துறை அதிகாரிகள், ‘தூர்வாரும் பணியை நீங்கள் தொடருங்கள்’ என்றார்கள். மழையின் காரணமாகப் பணிகள் நடக்கவில்லை.

“நாங்கள் தூர்வாரினோம்... ரூ.19 லட்சம் செலவழித்ததாக அதிகாரிகள் கல்வெட்டு வைத்தனர்!”

இந்த நிலையில்தான், 2017-18-ம் நிதியாண்டில் ரூ.19 லட்சம் செலவில் தூர்வாரியதாகவும், அதற்கான பணிகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி 45 நாள்கள் நடந்தன என்றும், மீதம் ரூ.5 ஆயிரம் கையிருப்பு உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கல்வெட்டு வைத்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பிப்ரவரி மாதம் முழுவதும் குளத்தில் நீர் நிரம்பியிருந்து. மே மாதம்தான் நீர் வடிந்தது. அப்படியிருக்க, அந்தக் காலகட்டத்தில் குளத்தில் எப்படித் தூர்வாரியிருக்க முடியும்? இதுகுறித்து கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தோம். ஆனால், எங்கள் புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளைக் காப்பாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டினர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் கேட்டோம். ‘‘குண்டூர் குளம் மொத்தம் 350 ஏக்கர் பரப்பில் இருக்கிறது. சமூக ஆர்வலர்கள் தூர்வாரியதாகச் சொல்லப்படும் பகுதி ஒருபுறம் எனில்,  அரசு சார்பில் வேலை செய்யப்பட்டது இன்னொரு பகுதி. இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 17 லட்சம் நிதியில், மார்ச் மாதம் வரை ரூ.4.15 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு ‘ஊரக வேலை உறுதி திட்டத்தில் இயந்திரங்களைக் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தலாம்’ என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குளத்தின் கரையில் கல்வெட்டு வைத்ததுதான் பிரச்னைக்கு அடித்தளம்’’ என்றார்.

‘ரூ.19 லட்சத்தில் ரூ.5 ஆயிரம்தான் கையிருப்பு இருப்பதாக’ கல்வெட்டு சொல்வதற்கும், கலெக்டர் சொல்வதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள். பதில் சொல்வது யாரோ?

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு