
முறைகேட்டிலா முன்னேறுவது?
லஞ்சமும் ஊழலும் புரையோடிப்போயிருக்கும் தமிழக ஆட்சி நிர்வாகத்தின் அசிங்கமான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது, ‘ட்ரான்ஸ்பரென்ஸி இன்டர்நேஷனல்’ என்ற பன்னாட்டு சேவை அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வின் முடிவுகள். ஆய்வு முடிவுகளின்படி ஊழலில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பத்திரப்பதிவுத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, போக்குவரத்துத்துறை போன்ற துறைகள் மற்ற துறைகளைவிட இந்த விஷயத்தில் முன்னணியில் இருக்கின்றன என்ற உண்மையையும் போட்டுடைத்திருக்கிறது அந்த ஆய்வு.

தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி... என்று நம் மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ள அத்தனை பேரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளைச் சந்தித்துவருகிறார்கள். ஊழலைக் களைய வேண்டும் என்ற நோக்கத்துடன் லோக் ஆயுக்தா, தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று பல ஏற்பாடுகள் இருந்தாலும், சாத்தியப்பட்டவரை அவற்றைச் செயல்படுத்தாமலோ, நீர்த்துப்போக வைத்தோ தப்பித்துக்கொள்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள். எம்.பி மற்றும் எம்..எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காகச் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அப்படித் தமிழகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் வழக்கு, ஸ்டாலின்மீது போடப்பட்ட வழக்கு என்பதும் அதுவும் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு என்பதும் ஓர் உதாரணம்.
அரசு அலுவலகங்கள் அனைத்திலும் சிசிடிவி கேமரா வைக்கப்பட வேண்டும் என்று இந்த ஆய்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். இந்த அரசு சிசிடிவி கேமரா வைப்பதிலும் ஊழல் செய்யும். அதனால் ஒரு சில மாதங்களில் அதுவும் இயங்காது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நம் சட்டைப் பைகளிலேயே கேமராக்கள் இருக்கின்றன. ஊழலைத் தடுப்பதற்கும் ஊழலை அம்பலப்படுத்துவதற்குமான ஆயுதமாகப் பொதுமக்கள் இதைப் பயன்படுத்த வேண்டும். மேலும், பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்கள் ‘மீ டூ’ இயக்கம் ஆரம்பித்திருப்பதைப்போல, லஞ்சம், ஊழலால் பாதிக்கப்பட்டவர்களும் அதை வெளிப்படையாகச் சொல்லி, அம்பலப்படுத்த முன்வர வேண்டும். திருந்தாத அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பிக்க நாம் ஐந்தாண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. நம் கையில் இப்போது வாக்குச்சீட்டு மட்டுமன்றி, ஊழலை அம்பலப்படுத்தும் இதுபோன்ற நவீன ஆயுதங்களும் இருக்கின்றன என்பதைப் புரியவைப்போம்.