சினிமா
Published:Updated:

உள்குத்து... ஊழல்... மோதல்... சி.பி.ஐ!

உள்குத்து... ஊழல்... மோதல்... சி.பி.ஐ!
பிரீமியம் ஸ்டோரி
News
உள்குத்து... ஊழல்... மோதல்... சி.பி.ஐ!

உள்குத்து... ஊழல்... மோதல்... சி.பி.ஐ!

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழலை 2013-ம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா, ‘‘சி.பி.ஐ அமைப்பு கூண்டுக் கிளியாக உள்ளது. எஜமானன் சொல்வதை அப்படியே ஒப்பிக்கிறது’’ என்று கோபமாகச் சொன்னார். ‘மத்திய அரசின் ஏவல் துறையாக சி.பி.ஐ இருக்கிறது’ என்பதற்கு நீதிமன்றம் கொடுத்த ‘நற்சான்றிதழாக’ அது கருதப்பட்டது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் சூழல் என்பதை சி.பி.ஐ அமைப்புக்குள் நடக்கும் விவகாரங்கள் உணர்த்துகின்றன. சி.பி.ஐ அமைப்பில் நிகழ்ந்த குரூரச் சண்டையில் இயக்குநர் அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்கள். இது, ‘சி.பி.ஐ அமைப்பின் நம்பர் 1 அதிகாரிக்கும் நம்பர் 2 அதிகாரிக்கும் இடையிலான மோதலாக’க் காட்டப்படுகிறது. ஆனால், ரஃபேல் விவகாரத்துடன் இதைத் தொடர்புப்படுத்தி எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள், நேரடியாக பிரதமர் மோடியைக் குறிவைக்கின்றன.  

உள்குத்து... ஊழல்... மோதல்... சி.பி.ஐ!


‘சி.பி.ஐ-யில் தங்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்துகொள்வதற்காக பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டவர் தான் அஸ்தானா’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. தன்னை விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து வழக்கு போட்ட அலோக் வர்மா, ‘பெரிய மனிதர்களுக்கு எதிரான சில வழக்குகளின் புலனாய்வு, அரசு எதிர்பார்த்த திசையில் போகவில்லை என்பதால் அந்தப் புலனாய்வுகளுக்கு ராகேஷ் அஸ்தானா தடையாக இருந்தார்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

யார் இந்த ராகேஷ் அஸ்தானா? மோடி பிரதமரானதும், தனக்கு விருப்பமான பல அதிகாரிகளை குஜராத்திலிருந்து டெல்லி வரவழைத்து வைத்துக்கொண்டார். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் அஸ்தானா. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவிடம் விசாரணை நடத்தி, அவரைக் கைது செய்ததன்மூலம் புகழ்பெற்றவர். குஜராத் மாநில போலீஸிலும், சி.பி.ஐ பணியிலும் மாறி மாறி இருந்தவர். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு இவரைத்தான் தலைவராக நியமித்தார், அப்போதைய குஜராத் முதல்வரான மோடி. முஸ்லிம்கள் சிலர் சதி செய்து ரயிலை எரித்ததாக அந்த வழக்கு அதன்பிறகே திசைமாறியது. இப்போது நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு, விஜய் மல்லையா வழக்கு, லல்லுமீதான ரயில்வே ஊழல் வழக்கு என இந்தியாவின் மிக முக்கியமான பல வழக்குகளை விசாரித்து வருபவர் இவர்தான். இவரை சர்தார் படேலாகவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸாகவும் சித்திரித்து இப்போது வீடியோக்கள் உலா வருகின்றன. மோடியை ஆதரிப்பவர்களின் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து இவை பரப்பப்படுகின்றன.

இன்னொரு பக்கம், அலோக் வர்மாவை சி.பி.ஐ இயக்குநர் பதவிக்குக் கொண்டுவந்ததும் மோடிதான். சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக இருந்த ஆர்.கே.தத்தாவே 2017 ஜனவரியில் சி.பி.ஐ இயக்குநர் ஆகியிருக்க வேண்டும். ஆனால், சர்ச்சைக்குரிய முறையில் அவர் 2016 டிசம்பரில் உள்துறை அமைச்சகத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த அலோக் வர்மா அங்கிருந்து சி.பி.ஐ இயக்குநர் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். சி.பி.ஐ-யில் பணிபுரிந்த அனுபவமே இல்லாத அலோக் வர்மா நியமிக்கப் பட்டது அப்போதே சர்ச்சையானது. பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் டோவல் பரிந்துரையில்தான் இவர் நியமிக்கப்பட்டதாகப் பேச்சு உண்டு. 

உள்குத்து... ஊழல்... மோதல்... சி.பி.ஐ!

இந்நிலையில் 2017 அக்டோபரில் சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப் பட்டார். மற்ற மாநில போலீஸ் படைகளில் இருப்பதுபோல, சி.பி.ஐ-க்கு எனத் தனியாக நேரடி நியமனங்கள் செய்யப் படுவதில்லை. வெவ்வேறு மாநில போலீஸ் படைகளி லிருந்து சிறந்த அதிகாரிகள் டெபுடேஷனில் இங்கு வருவார்கள். எஸ்.பி அந்தஸ்துக்கு மேலே இருக்கும் அதிகாரிகளை நியமிப்பது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி). இந்த நியமனங் களுக்கு சி.பி.ஐ இயக்குநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். 

ராகேஷ் அஸ்தானா நியமனத்துக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார் அலோக் வர்மா. ‘சி.பி.ஐ விசாரிக்கும் வழக்கு ஒன்றில், சந்தேகத்தின் நிழல் அஸ்தானாமீது படிந்துள்ளது’ எனக் காரணம் சொன்னார். ஆனால், அவரின் எதிர்ப்பையும்மீறி அஸ்தானா சி.பி.ஐ-க்குள் நுழைந்தார். ஏற்கெனவே சி.பி.ஐ-யில் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், தன்னை சி.பி.ஐ அமைப்பின் தலைவராகவே நினைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார். அலோக் வர்மாவுக்குத் தகவல் சொல்லாமலே ரெய்டுகளுக்குப் போனார். தனியாகக் கூட்டங்கள் நடத்தினார். அஸ்தானா பரிந்துரை செய்த அத்தனை அதிகாரிகளுக்கும் சி.பி.ஐ-யில் பணி நியமனம் கிடைத்தது. அலோக் வர்மாவின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கொந்தளித்த அலோக் வர்மா, ‘‘அஸ்தானாமீது ஆறு ஊழல் புகார்கள் உள்ளன. அவர் பரிந்துரையின் மூலம் சி.பி.ஐ-க்கு வந்துள்ள அதிகாரிகள்மீதும் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன’’ என்று வெடித்தார்.

அஸ்தானா எப்படிப்பட்டவர் என்பதை குஜராத்தைச் சேர்ந்த நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் விஷயத்தில் தெரிந்துகொள்ளலாம். பல்வேறு வங்கிகளில் சுமார் 5,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, மல்லையா போலவே வெளிநாட்டுக்கு ஓடிவிட்டனர் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர்கள். இந்த விஷயத்தை சி.பி.ஐ விசாரிக்கிறது. நிறுவன அலுவலகங்களில் ரெய்டுக்குப் போன அதிகாரிகளிடம், குட்கா ரெய்டுக்குப் போன இன்கம்டாக்ஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்தது போல ஒரு டைரி கிடைக்கிறது. ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.3.83 கோடி கொடுக்கப்பட்டதாக அதில் எழுதியிருந்தது. 2017 ஆகஸ்ட்டில் இதை லஞ்ச வழக்காகப் பதிவுசெய்தது சி.பி.ஐ.

2016 நவம்பர் 25-ம் தேதி அஸ்தானாவின் மகள் திருமணம், குஜராத் மாவட்டம் வதோதராவில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தின் ‘சங்கீத்’ நிகழ்வு ஒரு பண்ணை வீட்டில் நடைபெற்றது. ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான சேதன் சந்தேஸராவின் பண்ணை வீடு அது. அஸ்தானாவின் குடும்பத்தினரும் உறவினர்களும் விமானங்களிலும் கார்களிலும் பயணித்துத் திருமண நிகழ்வைச் சிறப்பாக முடித்தனர். ‘ட்ராவல் சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனம் இதற்கான டிக்கெட்டுகளைப் போட்டுக் கொடுத்தது. எல்லா டிக்கெட்டுகளுக்கும் பணம் கொடுத்தது, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம்.

இதுமட்டுமல்ல... இந்தத் திருமணம், பரோடா மன்னர் குடும்பத்துக்குச் சொந்தமான லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில்தான் நடந்தது. இதற்குக் கட்டணமாக அவர்கள் ஒரு பைசாகூட வாங்கவில்லை. திருமண விருந்தைச் சமைத்துக் கொடுத்த ஹோட்டல் எக்ஸ்பிரஸ் டவர்ஸ், இதற்காக எந்தக் கட்டணமும் வாங்கவில்லை. திருமணத்துக்கு வந்தவர்களுக்காக 19 அறைகளைத் தந்தது அந்த ஹோட்டல். 3,200 ரூபாய் வாடகை வாங்கும் அறைகளை வெறும் 175 ரூபாய் வாடகைக்குக் கொடுத்திருக்கிறார்கள். சன் சிட்டி கிளப் என்ற ரிசார்ட் 35 அறைகளை இலவசமாகக் கொடுத்தது. இப்படி ‘மாமூல் ஏட்டய்யா’ போல திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் அஸ்தானா.

இவற்றையெல்லாம் சி.பி.ஐ டீம் அனுப்பித் தோண்டியெடுத்தார், இயக்குநர் அலோக் வர்மா. இதைத்தான் ‘என் பெயரைக் களங்கப்படுத்த இயக்குநர் அலோக் வர்மா சதி செய்தார்’ எனக் குற்றம் சாட்டினார் அஸ்தானா. அத்துடன் நிற்கவில்லை. ‘இறைச்சி ஏற்றுமதியாளர் மொய்ன் குரேஷிக்கு எதிரான வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்காக ஹைதராபாத் தொழிலதிபர் சதீஷ் சனா என்பவரிடம் அலோக் வர்மா இரண்டு கோடி ரூபாய் பணம் வாங்கினார்’ என மத்திய கேபினட் செயலாளருக்குக் கடிதம் எழுதினார். அந்த சனா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இப்போது ராகேஷ் அஸ்தானா மீதே சி.பி.ஐ வழக்கு பதிவு செய்திருப்பதுதான் எதிர்பாராத திருப்பம்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மொய்ன் குரேஷி, இந்தியாவின் முக்கியமான இறைச்சி ஏற்றுமதியாளர். பணமோசடியிலும் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 2014-ம் ஆண்டு அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. அப்போது கிடைத்த ஆவணங்கள், அவரின் இன்னொரு முகத்தை அம்பலப்படுத்தியது. அதாவது, சி.பி.ஐ வழக்குகளில் சிக்கும் பலரிடம் அவர் பேரம் பேசுவார். ‘‘பணம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் டீலிங் முடித்து, வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறேன்’’ என்பார். இப்படிப் பல அதிகாரிகளுக்குப் பல கோடிகளை அவர் வாங்கிக்கொடுத்திருக்கிறார். சி.பி.ஐ இயக்குநராக இருந்த ஏ.பி.சிங்கிடம் இவர் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதுதொடர்பான விசாரணையைத் தொடர்ந்து குரேஷி கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு குரேஷி இந்த சி.பி.ஐ டீலிங்கை வெளிப்படையாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடன் வழக்கில் சிக்கியவர்தான் சதீஷ் சனா. ‘தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க ஓர் அதிகாரி ஐந்து கோடி ரூபாய் கேட்டார்’ என்று சொன்ன சனா, ‘அந்த அதிகாரி அஸ்தானா’ என அடையாளமும் காட்டினார். இதற்காக இடைத் தரகர்கள் தன்னுடன் பேசிய விவரங்களையும் அவர் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சனாவை ஒரு நீதிபதி முன் ஆஜர்செய்து வாக்குமூலம் கொடுக்கவைத்த சி.பி.ஐ., அஸ்தானா பெயரை முதல் குற்றவாளியாகச் சேர்த்து வழக்கு பதிவு செய்தது. இந்த பேரத்தில் தொடர்புள்ளவர் என சி.பி.ஐ டிஎஸ்.பி-யான தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ வரலாற்றில் முதல் முறையாக சி.பி.ஐ-யின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் ராகேஷ் அஸ்தானாவைக் கைதுசெய்யவும் சி.பி.ஐ அனுமதி கேட்டது. இந்தச் சூழலில்தான் அக்டோபர் 23 நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருமே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவைப் பொறுப்பு இயக்குநராக நியமித்திருக்கிறார்கள்.

நாகேஸ்வர ராவ் வந்ததுமே, அலோக் வர்மாவின் டீமிலிருந்த பல அதிகாரிகள் எங்கெங்கோ தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள். ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார்களைச் சொல்லி, வழக்கும் போட்டவர் அலோக் வர்மா. ‘குற்றச்சாட்டுக்கு உள்ளானவர், குற்றம் சுமத்தியவர் என இருவரையுமே ஒரேமாதிரி தண்டிப்பது எப்படி சரியாகும்?’ என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வி.

நாகேஸ்வர ராவும் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவர் அல்ல. ‘சென்னையில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஒரு நிலம் தனியாருக்கு விற்கப்பட்ட விவகாரத்தில் இவரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமானதாக இருக்கிறது’ என சி.பி.ஐ விசாரணை செய்துவருகிறது. ‘சில அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார்’ எனச் சொல்லி, இவரை சி.பி.ஐ-யில் சேர்ப்பதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப் பட்டது. இதைமீறி அவர் சேர்க்கப்பட்டார். ஆயுதத் தரகர் சஞ்சய் பண்டாரியின் டைரியில், லஞ்சம் வாங்கியதாக வருமானவரித் துறை அதிகாரிகள் 70 பேரின் பெயர்கள் இருந்தன. இந்த வழக்கை நாகேஸ்வர ராவ் விசாரித்தார். இதில் அத்தனை அதிகாரிகளையும் காப்பாற்ற முயன்றதாக ராவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இவரை சி.பி.ஐ-யிலிருந்து வெளியேற்றுமாறு பரிந்துரையும் அனுப்பப்பட்டது. இவரைத்தான் இப்போது பொறுப்பு இயக்குநர் ஆக்கியுள்ளார்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளால் நிரம்பிய சி.பி.ஐ-தான் எல்லா விவகாரங்களிலும் உண்மையை வெளியில் கொண்டுவரும் என்று நம்புகிறோம்.

சி.பி.ஐ-யின் குப்பையைத் தோண்டினால், ‘MeToo’ விவகாரத்தைவிட அதிக அசிங்கங்கள் வெளியில் வரும்.

தி.முருகன்

உள்குத்து... ஊழல்... மோதல்... சி.பி.ஐ!

ரஃபேல் விவகாரம் காரணம்?

லோக் வர்மாமீது மத்திய அரசு கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. காரணம், ரஃபேல் விவகாரம். ‘ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டது தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சூழலில், ‘ரஃபேல் பேரத்தில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் 132 பக்கங்களில் சில ஆதாரங்களுடன் ஒரு புகாரைக் கொடுத்தனர். இதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதல் பெயராக பிரதமர் நரேந்திர மோடி பெயர் இருந்தது. ‘பிரதமரைக் கைதுசெய்யத்தான் அரசியல் சட்டப்படி அனுமதி தேவை. பிரதமர்மீது வழக்கு போடுவதற்கு யார் அனுமதியும் தேவையில்லை. நாங்கள் கொடுத்த புகாரை வைத்து வழக்கு போடுங்கள்’ என பிரசாந்த் பூஷண் அதிரடியாகக் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதற்கு முன்பாகவே, பிரசாந்த் பூஷணையும் அருண் ஷோரியையும் அலோக் வர்மா தனியாக சந்தித்துப் பேசியதாக, பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய உளவுத்துறை தகவல் சொன்னது. இந்தச் சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி-யான சஞ்சய் சிங்கும், சில ஆதாரங்களை இணைத்து, இதேபோல ஒரு புகார் கொடுத்திருந்தார். 

‘‘இந்த இரண்டு புகார்களுடன் இருந்த ஆதாரங்களின் உண்மைத்தன்மை குறித்து, பாதுகாப்பு அமைச்சகத்தில் அலோக் வர்மா கேட்டார். ரஃபேல் விஷயத்தில் ஆரம்பகட்ட விசாரணையை நடத்த முடிவெடுத்தார். அலோக் வர்மா காட்டிய இந்த ஆர்வம் பலரையும் திடுக்கிட வைத்தது. இதனால்தான் அவர் சி.பி.ஐ-யிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்’’ என டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.