2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 டாப் 10 பிரச்னைகள் - ஊழல் சாம்பியன்ஸ்!

2018 டாப் 10 பிரச்னைகள் - ஊழல் சாம்பியன்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
2018 டாப் 10 பிரச்னைகள் - ஊழல் சாம்பியன்ஸ்!

ஜெயராம் வெங்கடேசன் அறப்போர் இயக்கம்

2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

சுதந்திர இந்தியாவில் ஒரே ஆண்டில் இத்தனை அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இதுவரை எழவில்லை. ஊழலின் இமயத்தை எட்ட தமிழக அமைச்சர்களுக்குள் கடும்போட்டி நிலவியது. ஏற்கெனவே பெரும் கடனில் இருக்கிறது மின்துறை. 2012 முதல் 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் 6,000 கோடிக்கும் மேல் ஊழல் செய்து மேலும் அந்தத் துறையை முடக்கிப் போட்டிருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் வெளிவந்து, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பல அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் எழுந்து விசாரணை தொடங்கியுள்ளது.

2018 டாப் 10 பிரச்னைகள் - ஊழல் சாம்பியன்ஸ்!

ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் குட்கா வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ-க்கு மாற்றியது. சி.பி.ஐ, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வீடு,  போலீஸ் டி.ஜி.பி வீடு உட்பட பல இடங்களில் திடீர் சோதனை செய்தது. இருப்பினும் இன்று வரை பெரிய புள்ளிகள்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றமே. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கடந்த ஆண்டு வருமான வரித்துறை செய்த சோதனையில் பணி நியமனத்திற்காக லஞ்சம் வாங்கிய ஆதாரமும், அவரது ஜல்லி குவாரியில் சட்டரீதியாக அனுமதித்ததைத் தாண்டி 8 மடங்கு வெட்டி யெடுக்கப்பட்ட ஆதாரங்களும் வெளிவந்தன.

2018 டாப் 10 பிரச்னைகள் - ஊழல் சாம்பியன்ஸ்!

மிக முக்கியமாக, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்மீதே எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள். முதலமைச்சர் எடப்பாடி தனது இலாகாவான நெடுஞ்சாலைத்துறையில் அவரின் உறவினர்களுக்கே விதிகளைமீறி  ஒப்பந்தம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றியது. உச்சநீதிமன்றம் விசாரணை மாற்றத்திற்குத் தடை விதித்தது. ‘துணை முதல்வர் ஓ.பி.எஸ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்தார்’ என்று தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விரிவாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய ஆதாரங்களும் வெளிவந்தன. அவர்மீதான புகார், லஞ்ச ஒழிப்புத்துறையிலும் சென்னை உயர்நீதி மன்றத்திலும் விசாரணையில் உள்ளது.

ஏழைக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தைக்கூட இவர்கள் விட்டுவைக்க வில்லை. முட்டை ஒப்பந்தம் எடுத்த குமாரசாமியின் நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்குக் கொடுத்த லஞ்சம் மட்டும் 2,400 கோடி என்று வருமான வரி சோதனையில் தெரிய வந்துள்ளது.

இப்படி ஊழலில் மூழ்கியவர்களே ஊழல் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் லோக் ஆயுக்தா சட்டம் இந்தாண்டு தமிழகத்தில் நிறைவேற்றப் பட்டது. உச்சநீதிமன்றத்தின் கடும் சாடலுக்குப் பிறகு வேறு வழியின்றி இயற்றப்பட்ட இந்தச் சட்டத்திலும் தன்னிச்சையாக ஊழலை விசாரிக்க எந்த ஒரு வழியும் இல்லை.

2018 டாப் 10 பிரச்னைகள் - ஊழல் சாம்பியன்ஸ்!

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுமீதும் ரபேல் போர் விமானக் கொள்முதல்மீதான ஊழல் குற்றச்சாட்டு கடுமையாக எழுந்தது. அதில் பிரதமரே சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், உச்சநீதிமன்றம் இதன்மீது விசாரணை அவசியமில்லை என்று சொன்னது அதிர்ச்சியலைகளைப் பரவவிட்டுள்ளது.

ஊழலை ஒழிக்கப்போகிறோம் என்று ஆட்சிக்கு வந்த பா.ஜ.க ஊழல்வாதிகளைக் காப்பாற்ற ஊழல்தடுப்புச் சட்டத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் செய்தது. `எந்த ஒரு பொது ஊழியரின் மீது ஊழல் புகார் வந்தாலும் அரசின் ஒப்புதலின்றி அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை ஆரம்பிக்கக் கூடாது’ என்ற அந்த விதி ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.