அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!

நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!

நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!

நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே, ஊழல் விவகாரங்களில் தந்திரிகளாக இருந்த மந்திரிகள், அவர் இல்லாத இந்த இரண்டரை ஆண்டுக்காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்? இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் எத்தனையோ புகார்கள், குற்றச்சாட்டுகள், ஊழல்கள், ரெய்டுகள்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி மொத்த அமைச்சரவைமீதும் ஊழல்கறை. ஆனால், “அம்மாவின் வழி நடக்கும் இந்த ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை, முறைகேடும் இல்லை” என்று விளக்கம் கொடுக்கிறார்கள் அமைச்சர் பெருமக்கள். கூவத்தூரில் தொடங்கிய ஊழல் ஓட்டம், கொடநாட்டைக் கடந்து கோட்டைவரை கடை பரப்பியிருக்கிறது. கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்!

நாற்றமெடுக்கும் குட்கா!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்வதற்காக உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்களுடன் லாபியில் ஈடுபட்டனர். இந்த லாபியில் ஏரியா சுகாதாரத் துறை அதிகாரிமுதல் அமைச்சர்வரை பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகத்தில் குட்கா குடோன்களில் நடந்த வருமானவரிச் சோதனையில்தான், இது வெளிச்சத்துக்கு வந்தது. குட்கா உரிமையாளர் மாதவ ராவின் சென்னை குடோனில் நடந்த ரெய்டில் டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் குட்கா விற்பனை செய்ய எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற தகவல்கள் இருந்தன. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் என உயர்மட்டத்தில் இருந்தவர்கள் சுமார் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகப் புகார்கள் படிக்கப்பட்டன. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. சட்டமன்றத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கொண்டுவந்து போராட்டம் நடத்தியது தி.மு.க.

நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!

விஜயபாஸ்கர்மீது நடவடிக்கை பாய்வதற்குப் பதில், குட்காவை அவைக்குள் கொண்டுவந்த தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்மீது உரிமை மீறல் பிரச்னை பாய்ந்தது. தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸ், குட்கா வழக்கு பதிவுசெய்தும், எந்த முன்னேற்றமும் இல்லை. தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில், குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை போட்டது சி.பி.ஐ. தொடர்ச்சியாக, குட்கா உரிமையாளர் மாதவ ராவ், விற்பனையாளர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கைதுசெய்தது சி.பி.ஐ. விஜயபாஸ்கர், அவரது உதவியாளர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்ட நிலையில், தார்மீகமாகக்கூடப் பதவி விலகாமல் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் விஜயபாஸ்கரும், டி.கே.ராஜேந்திரனும்.  

நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம்

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையில், அளவு கடந்த ஊழல்கள் நடைபெறுகின்றன” என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கவர்னர் பன்வாரி லால் புரோஹித்திடமும் மனு கொடுத்தார். “நெடுஞ்சாலைத் துறையில் பேக்கேஜ், பேக்கேஜ் ஆகத்தான் சாலைகள் டெண்டர் விடப்படுகின்றன. ஒரு ரோடு டெண்டர் யாருக்குத் தர வேண்டும் என்பதை முன் கூட்டியே முடிவு செய்து விட்டு, இரண்டு அல்லது மூன்று பேருக்கு மட்டும் டெண்டர் கொடுப்பதாக முடிவு செய்வார்கள். அவர்களுக்கு ஏற்றார் போல, டெண்டரில் சில விதிமுறைகளைக் கொண்டு, ஸ்பெஷிபிகேஷன் கொண்டு வருவார்கள். மற்றவர்களை போடக் கூடாது என்று மிரட்டுவார்கள். நெடுஞ்சாலைத்துறையில் இப்படித்தான் எஸ்.பி.கே நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தார்கள். டெண்டர்கள் வெளிப்படையாக நடக்கிறது என்றால், யார், யாருக்கு இதுவரை டெண்டர்கள் கொடுக்கப்பட்டது என்பதை ஆன்லைன் டெண்டரில் வெளியிடலாமே இணையதளம் அளவிலேயே சில விவரங்களை முடக்கி வைத்திருக்கின்றனர். இந்த அளவுக்கு கூட்டு சதி செய்திருக்கின்றனர்” என்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் உள்விவகாரங்கள் அறிந்தவர்கள்.

இந்த விவகாரங்களை தினகரனின் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்கள். இதன்பிறகு சில காலம் கழித்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தது. இந்தக் குற்றசாட்டுகளின் தொடர்ச்சியாகதான் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களான செய்யாத்துரை, நாகராஜன் போன்றவர்களின் இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. இதில் 180 கோடி ரூபாய் கைபற்றப்பட்டது. “நெடுஞ்சாலை துறையில் ஐந்து சாலைத் திட்டப் பணிகளுக்கு விடப்பட்ட டெண்டர்கள் முதல்வரின் உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 1,500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என தி.மு.க தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அதற்கு எந்த ரெஸ்பான்சும் இல்லை. “முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் விடப்படும் ஒப்பந்தங்களில் முதல்வரின் உறவினர்களுக்குச் சாதகமாக டெண்டர்கள் தரப்படுகின்றன. இதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருக்கின்றன” என்று ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ‘எடப்பாடி மகனின் உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க திட்டங்களின் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளி வெளிப்படைத் தன்மைச் சட்டம் 1998-ன் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது. விரிவான விசாரணை நடத்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்றவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டிருந்தது தி.மு.க. விசாரணைக்குப் பின்னர், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தடை பெற்றார் எடப்பாடி பழனிசாமி.

சொத்துக் குவிப்பு

தலைவி வழியில் முதல்வர், துணை முதல்வரும் இருவர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்குகள் பாய்ந்திருக்கின்றன. “2016-ம் ஆண்டு தேர்தலின்போது, ஓ.பன்னீர்செல்வம், தன் வருமானத்தைக் குறைவாகத் தெரிவித்துள்ளார். பெரியகுளத்தில் தனக்குள்ள விவசாய நிலங்களையும், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டின் சொத்து மதிப்புகளையும் அவர் மறைத்துள்ளார். வருமானமே இல்லாத குடும்பத் தலைவியான அவரின் மனைவி விஜயலட்சுமிக்கு 78 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக அவருடைய வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். ஓ.பி.எஸ். மகன்கள் பல நிறுவனங்களில் இயக்குநர்களாக உள்ளனர். தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் சி.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்த டைரியில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.நான்கு கோடி கொடுத்ததாகக் குறிப்புகள் உள்ளன. இதுபற்றியெல்லாம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது தி.மு.க.

வழக்கில் ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்’ என்று தெரிவித்தார். உடனே நீதிமன்றம், ‘மனுதாரரின் குற்றச்சாட்டையும், அதற்கான ஆதாரங்களையும் போலீஸார் பெற்று விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். ஒருவேளை போலீஸாரின் புலன் விசாரணையில் காலதாமதம் செய்வதாக மனுதாரர் கருதினால், அவர் எப்போது வேண்டுமானாலும், இந்த நீதிமன்றத்தை அணுகலாம்’ என்றது. இதன்பிறகு இந்த வழக்கின் விசாரணை என்ன ஆனது என்றே தெரியவில்லை.  

நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!

உள்ளாட்சித் துறை ஒப்பந்தம்

உள்ளாட்சித் துறையில் நடைபெறும் ஊழல் குறித்து ஆர்.டி.ஐ மூலம் அம்பலப்படுத்தியது, ‘அறப்போர் இயக்கம்’. அந்தத் தகவல்கள் அடிப்படையில், உள்ளாட்சித் துறை அமைச்சர்     எஸ்.பி.வேலுமணி, ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குபோட்டது, ‘அறப்போர் இயக்கம்’. “வெளிப்படையான ஆன்லைன் டெண்டர் முறையில் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற நிலை இருக்கிறது. இப்படிச் செய்தால், அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் கமிஷன் கிடைக்காது. அதனால் தான், ஒப்பந்ததாரரிடம், ‘மெஷினரி சான்றிதழ்’ வாங்க வேண்டும் என்ற நடைமுறையைச் சென்னை மாநகராட்சியில் வலிந்து, திணித்திருக்கின்றனர். குறிப்பிட்ட நபர்களுக்கு டெண்டர் கொடுப்பது என்று முடிவானவுடன், அந்த நபர்களுக்கான மிஷினரி சான்றிதழையும், அதிகாரிகள் தயார் செய்துவிடுவார்கள். கமிஷனை முன்கூட்டியே கொடுத்துவிட்டு, அந்தச் சான்றிதழை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். இது தெரியாமல், மிஷினரி சான்றிதழ் கேட்டு மற்ற ஒப்பந்ததாரர்கள் வந்தால், அவர்களை எவ்வளவு அலையவிட முடியுமோ, அவ்வளவு அலைய விடுவார்கள்.

வெளிப்படையாக டெண்டர் நடக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த டம்மியான டெண்டர் விண்ணப்பங்களை வேண்டுமென்றே பெறுகின்றனர். இப்படி நடக்கும் முறைகேடுகளும் ஆதாரத்துடன் வெளியே வந்திருக்கின்றன. வெவ்வேறு இடங்களிலிருக்கும் இரண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்கள், ஒரே கம்ப்யூட்டரிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது அந்த கம்ப்யூட்டரின் ஐ.பி முகவரியிலிருந்து தெரியவந்திருக்கிறது. இப்படி ஒரு டெண்டரில், டம்மியாக இரண்டு மூன்று பேர்களைச் சேர்த்துவிட்டு, அந்த அமைச்சர் சொல்லும் ஒருநபருக்கு மட்டுமே டெண்டர் வழங்குவார்கள். இதுதான் உள்ளாட்சித் துறையின் ஆன்லைன் டெண்டர் வழங்கும்முறை” என்கின்றனர், அறப்போர் இயக்கத்தினர். உள்ளாட்சித் துறையைப் பொறுத்தவரை கோவையைச் சேர்ந்த கே.சி.பி.இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இது முக்கியப் புள்ளியின் பினாமிகளால் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம்தான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னை மாநகராட்சியில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான டெண்டர்களை எடுத்துள்ளது. மற்ற மாநகராட்சிகளிலும் இந்த நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் குற்றச்சாட்டுகள் கிளைவிரிக்கின்றன. இதுதொடர்பான வழக்கில், “அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஆரம்பகட்ட விசாரணை நிலைகுறித்து மார்ச் 28-க்குள் தெரிவிக்க வேண்டும்” என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!

கிரானைட் ஊழல்

2012-ம் ஆண்டு மதுரையில் ஆட்சியராக இருந்த சகாயம், தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். ‘கிரானைட் கொள்ளை எப்படி நடைபெறுகிறது; இதனால், மதுரை மாவட்டத்தில் அரசு நிலங்கள், குளங்கள், பாசனக் கால்வாய்கள் எப்படிச் சூறையாடப்பட்டன; கிரானைட் கொள்ளையால் அரசுக்கு 16,388 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவித்திருந்தார். ஆனால், அரசு சார்பில் இதுகுறித்து விசாரணை நடத்தப்படவில்லை. மாறாக, சகாயம் மாற்றப்பட்டார். உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி போட்ட வழக்கைத் தொடர்ந்து சகாயம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்ட பிறகும் அதன்மீது பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டன.

பருப்புக் கொள்முதல்

தமிழக அரசின் சிறப்புப் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ், உணவுத்துறை சார்பில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டன. இந்தக் கொள்முதலில் பெரும் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு டன் உளுந்தம் பருப்பு 89 ஆயிரம் ரூபாயும், ஒரு டன்  துவரம் பருப்பு 75 ஆயிரம் ரூபாயும் என விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சந்தை விலையைவிட அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதால், 350 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. மசூர் பருப்புக் கொள்முதலில் 380 கோடி ரூபாய் இழப்பு என, ஆண்டுக்கு 730 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

முட்டைக் கொள்முதல்

சத்துணவுத் திட்டத்துக்காக முட்டைகள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாகச் சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. முட்டை ஒன்றுக்கு 4.51 ரூபாய் விலையில் ஓர் ஆண்டுக்கு முட்டை விநியோகிப்பதற்கு நாமக்கல்லைச் சேர்ந்த நேச்சுரல் ஃபுட் புரோடக்ட்ஸ், திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்குத் தரப்பட்டது. நாமக்கல் பகுதியில் முட்டைக் கொள்முதல் செய்வதற்காகத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட 3.31 ரூபாய் விலையைவிட 1.20 ரூபாய் அதிகம். மாதத்துக்கு 8.55 கோடி முட்டைக் கொள்முதல் செய்யப்படுவதுடன்,. மாதத்துக்கு 12.31 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் வருமானவரித் துறை திருச்செங்கோடு, சென்னை உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தியது.

சத்துணவுத் திட்டம்

சத்துணவுத் திட்டத்துக்காக சத்துமாவு, பருப்பு, முட்டை ஆகியவைகளை சப்ளை செய்யும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ‘கிறிஸ்டி’ நிறுவனத்தின்மீது  தொடர் புகார்கள் வந்துகொண்டிருந்தன. இப்படியான சூழலில், அந்த நிறுவனத்துக்குத் தொடர்புடைய அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தி, பல ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. இந்த ஆவணங்களில் சில, மீடியாவில் வெளியாகி பரபரப்பைப் பற்றவைத்தது. அந்த ஆவணங்களைப் பரிசோதித்ததில், கிறிஸ்டி நிறுவனம் அரசு உயர் அதிகாரிகள், அவர்களது உறவினர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு 2,400 கோடி ரூபாயவரையில் லஞ்சம் கொடுத்ததாகச் செய்திகள் வெளியாகின. உச்சகட்டமாக நடந்த மெகா ஊழல் என விமர்சனங்கள் எழுந்தன.

தாது மணல்

கார்னெட், இல்மனைட், ரூட்டைல் போன்ற தாது மணல்களை வெட்டியெடுக்க மத்திய அரசு கடுமையான விதிகளை வகுத்துள்ளது. இதில் மோனோசைட் என்ற தாதுவை எடுப்பதற்கு, மத்திய அரசு தொடர்ந்து தடைவிதித்தது. மோனோசைட் தாதுவைக் கையாள, இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்திடம் அனுமதிபெற வேண்டும். தாதுமணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோனோசைட் தாதுவை, ஹைதராபாத்தில் உள்ள அணு தாது வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். தாது மணலை வெட்டி எடுக்கும் உரிமங்கள் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசுக்கு இல்லை. ஆனால், இந்தச் சட்டங்கள் எதையுமே மதிக்காமல் 2012-13-ம் ஆண்டில் மோனோசைட் கலந்த தாது மணல் வெட்டி எடுப்பதற்கான 16 உரிமங்களைத் தனியார் நிறுவனங்களுக்குத்  தமிழக அரசுக்கு வழங்கியது. மோனோசைட்டை எடுப்பதற்கான உரிமத் தொகையாக வெறும் 125 ரூபாயைத் தமிழக அரசு நிர்ணயித்தது. அதேபோல, கார்னெட் மணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட 111 உரிமங்களில் 96 உரிமங்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது. இல்மனைட் தாது அள்ளுவதற்கான 44 உரிமங்களும், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, அனுமதி இல்லாத இடங்களிலும் தாது மணல் அள்ளப்படுகின்றன. இந்தக் கொள்ளைகுறித்த தகவல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலேயே உள்ளன. தாது மணல் கொள்ளை குறித்து ஆய்வுசெய்ய ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவரின் அறிக்கை 2013-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அன்றே ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. ‘இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும்கூட, அதனை தமிழக அரசு மதிக்கவில்லலை; அந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இந்த ஊழல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!

இது ஒருபுறம் இருக்க... மறுபுறம், தமிழக கனிமவளக் கொள்ளை தொடர்பான வழக்கை, கடந்த 2015-ம் ஆண்டு தானாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்தது. அப்போது, நீதிமன்றத்தால் amicus curiae ஆக நியமிக்கப்பட்டவர் வி.ரமேஷ். இவர், உயர் நீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில்,  ‘தமிழகத்தில் உள்ள கனிம நிறுவனங்களிலிருக்கும் குடோன்களில் 37,000 மெட்ரிக் டன் மோனசைட் இருக்கிறது’ எனக் கூறி இருந்தார். ‘இவை அனைத்தும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தன என்றும், அதில், 777 மெட்ரிக் டன் ஏற்றுமதிக்குத் தயாராக இருந்தது’ எனவும் அவர் தெரிவித்திருந்தார். .இந்த அறிக்கையை அடுத்துதான் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், விரிவாக ஆய்வுசெய்ய குழு ஒன்றை அமைக்கும்படி சொன்னது. அதன்படி, சத்யபிரதா சாகு ஐ.ஏ.எஸ் தலைமையில்  ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், மூன்று மாவட்டங்களிலும்  தனியார் நிறுவனங்களிடம்  மணல், கனிமங்கள் ஆகியவை  1.55 கோடி டன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தனியார் நிறுவனங்கள் தரப்பில் தங்களிடம் 85.58 லட்சம் டன்தான் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவின் ஆய்வில், 69.89 லட்சம் டன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பண விநியோகப் புகாரில், டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக இருந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, குவாரிகள் உள்ளிட்ட பல இடங்களில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. தினகரனை தேர்தலில் வெற்றிபெற வைப்பதற்காக, ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய்வீதம் 89 கோடி ரூபாய் எடப்பாடி பழனிசாமி,  அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் வழியாகப் பட்டுவாடா செய்யப்பட்ட விவரம் ஆதாரங்களோடு வெளியாகின. இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றத்துக்கே தெரியாமல் ரத்துசெய்தார்கள்.

சிலைத் திருட்டு... தங்கம் முறைகேடு!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் செய்யப்பட்ட சிலைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில் தலைமை ஸ்தபதியான முத்தையா, அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா உட்பட பலர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிலைத் திருட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்காக விசாரணை நடத்தும் அதிகாரி பொன்.மாணிக்கவேலை, ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவருக்கு எதிராக அதிகார அஸ்திரங்களை வீசினார்கள். பணி ஓய்வுக்குப் பிறகும் அவரை, சிறப்பு அதிகாரியாக நியமித்தது உயர் நீதிமன்றம்.

இவ்வளவுக்குப் பிறகும், “பூதக்கண்ணாடியைவைத்துப் பார்த்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் ஊழலைக் காண முடியாது’’ என்கிறார் முதல்வர் எடப்பாடி.

நம்புங்க மக்களே நம்புங்க!

-  எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, கே.பாலசுப்ரமணி