சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே!

தொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே!
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே!

தொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே!

பெருநகரப் பேருந்தின் பயணியிடம் வெறும் பத்து ரூபாய் இருக்கும் ஒரு பர்சை பிக்பாக்கெட் அடிக்கும் ஒருவன் சிக்கினால் அவ்வளவுதான்... பிரித்து மேய்ந்துவிடுவார்கள். விவசாயம் செய்கிறேன் என்று ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி, மழை பொய்த்து, கிணறு வற்றி, நோய் தாக்கி, விளைச்சலின்றிப்போய், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் உங்களின் ஓட்டுவீட்டு வாசலில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டுவார்கள். லேத் பட்டறை நடத்துகிறேன் என்று வங்கியில் கடன் வாங்கி, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு எனப் பலமுனைத் தாக்குதலில் பாதித்து, பட்டறையை மூடிவிட்டு, வட்டி கட்டாமலிருந்தால் பேப்பரில் உங்கள் படம் போட்டு விளம்பரம் கொடுப்பார்கள். ஆனால், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, ஒரு ரூபாயும் கட்டாமல் நீங்கள் உலகம் சுற்றக்கிளம்பிவிடலாம். ஒரு கண்டிஷன்... உங்களுக்கு யாராவது ஒரு செளக்கிதாரைத் தெரிந்திருக்க வேண்டும்.

தொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே!

சட்டங்களில் ஓட்டைகள் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் சாமானியர்கள் யாரும் அந்த ஓட்டைகளில் தப்பிக்கவே முடியாது. பெருமுதலாளிகள்தான் அதில் வெளியே வந்து கோட்டையும் கட்டிக் கொள்ளலாம். இற்றுப்போன சட்டங்களால் இன்றைய இந்தியாவுக்கான இன்னுமோர் அச்சுறுத்தல்... பொருளாதாரக் குற்றங்கள்.

லஞ்சம், ஊழல், பணமோசடி, பெருநிறுவன மோசடி, பொருள் கடத்தல், வரி ஏய்ப்பு, கந்துவட்டி, சட்டவிரோத ஏற்றுமதி; இறக்குமதி எனப் பொருளாதாரக் குற்றங்கள் பலவகையுண்டு. இதன் பாதிப்புகள் ‘கேயாஸ் தியரி’ போல எங்கெங்கோ சுற்றி, நம்மையே வந்தடையும். கடந்த சில வருடங்களாக, இந்தியாவில் பொருளாதாரக்குற்றம் இழைப்பவர்களின் எண்ணிக்கை கடல் மணலாய்ப் பெருகிவருகிறது.

ஒன்றல்ல இரண்டல்ல, கடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரக்குற்றம் புரிந்து விட்டு, இந்தியாவிலிருந்து 36 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடியிருக்கிறார்கள். இதைச் சொல்லியிருப்பது ஏதோ ஓர் ஆய்வு நிறுவனத்தின் இணையப்பக்கப் புள்ளி விவரமில்லை; உச்சநீதிமன்றத்தில் இந்த கணக்கைச் சொல்லியிருக்கிறது, இந்திய அமலாக்கத்துறை.

தொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே!

கோடிகளில் ஏமாற்றிவிட்டு, தேசத்தையே அதிரச்செய்த நிரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, மெஹுல் சோக்சி, சந்தேசரா சகோதரர்கள் உட்பட 36 பேர், தங்கள்மீதான பொருளாதாரக் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மிக முக்கியப் பேசுபொருளாக இருந்த அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கின் ( வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் நடந்த ஊழல்) முக்கியக்குற்றவாளியான சுஷேன் மோகன் குப்தா, திஹார் சிறையில் இருக்கிறார். சிறையி லிருந்து பிணையில் வரக்கோரிய அவரது மனு, உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அவரது சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ‘‘சுஷேன் மோகன் குப்தா, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவார். தற்போது விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாகி விட்டது. அவருக்கு இந்தியாவில் இருப்பதற்கான அடிப்படைகள் இருப்பதால், இந்தியாவை விட்டு அவர் தப்பித்துச்செல்ல மாட்டார்’’ என்று உறுதியளித்தார்.

தொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே!

குறுக்கிட்ட அமலாக்கத்துறையின் வழக்கறிஞர்கள் டி.பி.சிங், என்.கே.மட்டா ஆகியோர், ‘‘அவரை விடவும் இந்தியாவில்  இருப்பதற்கான அடிப்படைகள் கொண்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி உட்பட 36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பித்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஆதாரங்களை அழிக்க சுஷேன் மோகன் குப்தா முயன்றுள்ளார். விசாரணை தற்போது மிகவும் முக்கியமான கட்டத்தில் இருப்பதால் பிணை வழங்கக்கூடாது’’ என்று வாதிட்டனர். இதை ஏற்று சுஷேன் மோகன் குப்தாவின் மனுவை நீதிபதி ரத்து செய்தார்.

இந்த வழக்கு விவகாரம் ஒருபுறமிருக்க, இந்தியாவிலிருந்து தப்பிய தொழிலதிபர்களின் எண்ணிக்கையை மத்திய அரசின் அமலாக்கத்துறையே பகிரங்கமாகத் தெரிவித்தது, நாடெங்கும் பரபரப்பான விவாதமானது. இப்படி எண்ணிக்கையைக் கூறுவது முதல்முறை இல்லை. கடந்த ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், பொருளாதாரக் குற்றவாளிகள் என 31 பேரைக் கைகாட்டியது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 27 பொருளாதாரக் குற்றவாளிகள் தப்பிவிட்டதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் சிவபிரதாப் ஷுக்லாவே தெரிவித்தார். பொருளாதாரக் குற்ற விசாரணையிலிருந்து 91 பேர் தப்பிக்க வாய்ப்பிருப்பதாக ஒரு பட்டியலையும் நாடாளுமன்றத்தில் வெளியிட்டது மத்திய அரசு. ஆனால் அதைத் தடுக்கும் எந்த முயற்சிகளிலும் இறங்கவில்லை.

தொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே!

‘அந்நிய முதலீடுகளைக் கொண்டுவந்து விட்டோம்’ என்று எல்லா அரசுகளும் தம்பட்டம் அடிக்கின்றன. இன்னொருபுறம் இங்கிருந்து சுரண்டிக்கொண்டு அந்நிய நாடுகளுக்குத் தப்பியோடுகிறார்கள் தொழிலதிபர்கள். ஆனந்த  சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே!

-ஜெனிஃபர் ம.ஆ.