Published:Updated:

நல்லா இருக்கும் சாலைக்கு ரூ.5,000 கோடி!

சாலை
பிரீமியம் ஸ்டோரி
சாலை

கல்லா கட்டும் கமிஷன் மாஃபியா

நல்லா இருக்கும் சாலைக்கு ரூ.5,000 கோடி!

கல்லா கட்டும் கமிஷன் மாஃபியா

Published:Updated:
சாலை
பிரீமியம் ஸ்டோரி
சாலை
தஞ்சாவூரில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் தொடர்பான வழக்கு, தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

இதற்கிடையே, `தஞ்சாவூர் மட்டுமல்ல... பொதுவாகவே மாநிலம் முழுவதும் நல்ல நிலையில் உள்ள சாலைகளுக்கும் `பராமரிப்பு’ என்கிற பெயரில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்க அரசு தீவிரம்காட்டுகிறது. இவ்வளவு நிதி நெருக்கடியிலும் கமிஷன் அடிக்கவே இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன’ எனப் புகார் கிளம்பியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசினார்கள். ‘‘சாலைகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பதற்காக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, 2020-21 ஆண்டு பட்ஜெட்டில் சாலைப் பணிகளுக்கு 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், சுமார் 5,000 கோடி ரூபாய்க்குமேல் சிறு கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, சாலைகளின் தரத்தை கள ஆய்வின்மூலம் மதிப்பீடு செய்து, செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். ஆனால் எதையுமே ஆய்வுசெய்யாமல், ஒவ்வொரு கோட்டத்துக்கும் பங்கு பிரிப்பதுபோல் 100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் என நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இதில் பணிகள் நடைபெறுமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், பணம் மட்டும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்குச் சென்றுவிடும்’’ என்றவர்கள், சில உதாரணங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

நல்லா இருக்கும் சாலைக்கு ரூ.5,000 கோடி!

‘‘திருவள்ளூர் மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் இது. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் மாநில நெடுஞ்சாலைத் துறையின் சாலை ஒன்று அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருப்பதால் அதிக வாகனங்கள் செல்வதில்லை. அதனால், சாலை நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அந்தச் சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அங்கே சென்றபோது, ‘இந்த ரோடு நல்லாத்தானே சார் இருக்கு…’ என்று வனத்துறை அதிகாரிகள் கேட்க, ‘நிதி ஒதுக்கியாச்சு. செலவு செய்யணுமே’ என்று நெடுஞ்சாலைத் துறையினர் நெளிந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓர் உட்கோட்டத்தில், ஐந்து ஆண்டுகளைக் கடந்த அனைத்து சாலைகளுமே நல்ல நிலையில் உள்ளன. ஆனால் அங்கு, 200 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். கண்துடைப்புக்காக, செலவு செய்ய வேண்டும் என தேவையில்லாத இடங்களில் சிறிய பாலங்கள், தடுப்புச்சுவர்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயார்செய்துள்ளார்கள். ‘என் உட்கோட்டத்தில் சாலைகள் நன்றாக இருக்கின்றன’ என்று அதிகாரி ஒருவர் சொன்னதற்கு, ‘தண்ணீர் செல்வதற்கு வழி அமைப்பதுபோல் ஐந்து சிறிய பாலங்கள் அமைப்பதற்கு புரொப்போசல் கொடுங்கள்’ என்று கேட்டார்கள். ஆனால், அங்கெல்லாம் தண்ணீர் செல்வதற்கான வழியே தேவையில்லை.

நல்லா இருக்கும் சாலைக்கு ரூ.5,000 கோடி!

ஒரு சிறிய பாலம் அமைப்பதற்கு 90 லட்சம் ரூபாய் செலவாகும். ஐந்து சிறிய பாலங்கள் அமைத்தால், நான்கரை கோடி ரூபாய் ஆகிறது. மூன்று மீட்டர் உயரமும் 85 மீட்டர் நீளமும்கொண்ட தடுப்புச்சுவர் அமைப்பதற்கு 30 லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் புரொப்போசல் போடப்படுகிறது. ஏழெட்டு இடங்களில் இப்படி தடுப்புச்சுவர் அமைத்தால், அதற்கு ஐந்து கோடி ரூபாய் வரை செலவாகும். ஊரடங்கு காலத்தில் அலுவலகக் கதவுகளை மூடிவிட்டு, இப்படியான திட்டங்களைத் தயாரிக்கும் வேலையைத்தான் செய்துவந்தோம். இப்படி தமிழகம் முழுவதுமிருந்து அனுப்பப்பட்ட திட்ட மதிப்பீடுகள், தற்போது சென்னையில் இருக்கின்றன. விரைவில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது. மாநிலம் முழுவதும் இந்தத் தொகையை பங்கு பிரித்துக் கொடுப்பதற்காகவே ஒப்பந்ததாரர்கள் போர்வையில் புதுப்புது ஆட்கள் உருவாகியிருக் கிறார்கள். இவர்கள் எந்த ஒப்பந்தப் பணிகளும் செய்யாமல் பெயருக்கு ஒரு கம்பெனியை உருவாக்கி மொத்த தொகையையும் சுருட்டும் மாஃபியா போன்று செயல்படுகிறார்கள். மக்கள் வரிப்பணம் அனைத்தும் கமிஷனாக இவர்கள் கைக்குச் செல்கிறது என்பதுதான் வேதனை’’ என்றனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு போதுமான நிதியைத் தரவில்லை. நிதி நெருக்கடியில் தவிக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்கும்போது, சாலைப் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 5,000 கோடி ரூபாயை கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை களுக்காகச் செலவிடலாம்.

இதுபற்றிக் கேட்க, நெடுஞ்சாலைத் துறைச் செயலாளர் கார்த்தியின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். ‘‘செயலாளர் மீட்டிங்கில் இருக்கிறார்’’ என்றார்கள். நம் தொடர்பு எண்ணை வாங்கிக்கொண்டு, “செயலாளர் உங்களைத் தொடர்புகொள்வார்’’ என்றார்கள்.

அவர், நம்மைத் தொடர்புகொண்டு விளக்கங்கள் தரும்பட்சத்தில் அதை வெளியிடுகிறோம்.