
புதுடெல்லி: வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி, மத்திய அரசு இங்கிலாந்து தூதருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள அவரை, அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் மல்லையாவை கைது செய்ய மும்பை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் மல்லையாவுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தில் தங்கியுள்ள விஜய் மல்லையா மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருகிறது. எனவே அவரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரி, டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிச்சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை, மத்திய அரசு முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.