Published:Updated:

கருப்பு பணம் பிரச்னையை தீர்க்க மந்திர தீர்வு இல்லை: மன்மோகன்

கருப்பு பணம் பிரச்னையை தீர்க்க மந்திர தீர்வு இல்லை: மன்மோகன்
கருப்பு பணம் பிரச்னையை தீர்க்க மந்திர தீர்வு இல்லை: மன்மோகன்
கருப்பு பணம் பிரச்னையை தீர்க்க மந்திர தீர்வு இல்லை: மன்மோகன்

புதுடெல்லி: கருப்பு பணம் ஒரு பிரச்னைதான் என்றாலும் அதனை தீர்க்க மந்திர தீர்வு ஏதுமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் ஜி - 20 நாடுகள் மாநாட்டிலும், பிரேசிலில் ரியோ பிளஸ் - 20 மாநாட்டிலும் பங்கேற்றுவிட்டு,நேற்றிரவு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங்,"கருப்பு பண பிரச்னையை தீர்ப்பதற்கான ஜி 20 நாடுகள் கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறபோதிலும்,அதனை உடனடியாக தீர்க்க மந்திர தீர்வு ஏதுமில்லை.அதை மெதுவாகத்தான் தீர்க்க முடியும் என நான் கருதுகிறேன். 

இந்தியா போன்ற நாடுகளின் பிரச்னைக்கு சர்வதேச யோசனைகள் தீர்வாக இருக்காது. இது போன்ற கடினமான காலங்களில் நாம் வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்க முடியாது.நமது பொருளாதாரத் திட்டங்களை நாம்தான் வகுக்க வேண்டும்.

நிதி மேலாண்மையைத் திறம்படவும்,நம்பகத்தன்மையுடனும் கையாள நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

வருவாய்க்கும் செலவினத்துக்கும் இடையே உள்ள பற்றாக்குறையைப் போக்க திட்டவட்டமான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அன்னிய நேரடி மற்றும் நிதி சார்ந்த முதலீடுகளை ஊக்கப்படுத்துவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.வளர்ச்சி வீதத்தை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கூட்டாட்சி நடைபெறும் இந்தியாவில் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம். குறிப்பாக மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியும்,மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சிப் பாதையில் நாம் முன்னேற முடியும்.

2008-ம் ஆண்டு உலகின் பிற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் நமது நாட்டின் வளர்ச்சி வீதம் பாதிக்கப்பட்டது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக குறைந்தது. இந்தச் சரிவிலிருந்து மீள நமக்கு 2 ஆண்டுகளானது.

ஆனால், தொடர்ந்து அதன்பின் ஐரோப்பிய மண்டலத்தில் பொருளாதாரத் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் செய்யப்பட்டிருந்த முதலீடுகளை விலக்கிக் கொண்ட முதலீட்டாளர்கள், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துள்ளது என்றார் பிரதமர்.

அடுத்த நிதியமைச்சராக யாரை நியமிப்பது என்பது குறித்து யோசனை செய்து வருகிறேன்.பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளேன். நாட்டுக்கு வெளியே இருக்கும்போது,எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடுவது சரியாக இருக்காது.நிதியமைச்சர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவு செய்த பின், முறைப்படி தெரிவிக்கப்படும்"என்றார்.

இதற்கிடையே மத்திய நிதியமைச்சர் பொறுப்பை பிரதமரே வகிப்பார் என்று கூறப்படுகிறது.