பிரீமியம் ஸ்டோரி

சொத்துக்குவிப்பு வழக்கின் கயிறு கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தாலும், ‘ரஜினி மல... அஜித் தல’ என்று வசனங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஆனால், அவருடைய பால்வளத் துறைதான் கெட்டுப்போன ஆவின் பாலைப்போல் நாறிக்கொண்டிருக்கிறது.

வைத்தியநாதன் - ராஜேந்திர பாலாஜி
வைத்தியநாதன் - ராஜேந்திர பாலாஜி

பால் உற்பத்தியில் குஜராத்தின் அமுல் முதல் இடத்திலும், கர்நாடக அரசின் நந்தினி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. தமிழகத்தின் ஆவின், போட்டிப் பட்டியலிலேயே இல்லை. கடந்த நிதியாண்டில் (2018-2019) அமுல் நிறுவனம் 45,000 கோடி ரூபாய்க்கு பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்திருக்கிறது. நந்தினி நிறுவனம், 15,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது. ஆனால், ஆவின் நிறுவனம் 5,994 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்திருக்கிறது.

தனியார் பாலைவிட ஆவின் பால் தரமாக இருந்தாலும், அது நுகர்வோரைச் சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. `அதிக வருவாய் ஈட்ட வேண்டிய ஆவின் நிறுவனம், நஷ்டத்தில் இயங்குவதற்கு இவர்தான் காரணம்’ என்று பலரும் ஆளுங்கட்சியில் செல்வாக்காக இருக்கும் ஒப்பந்ததாரர் வைத்தியநாதனை சுட்டிக் காட்டுகிறார்கள். ஏற்கெனவே, பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் இந்த வைத்தியநாதன். அந்த வழக்கில் போதுமான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்து, வைத்தியநாதன் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது சென்னை உயர் நீதிமன்றம். தற்போது இந்த வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

அப்போது வைத்தியநாதனுடன் தொடர்பில் இருந்த காரணத்துக்காக அப்போதைய பால்வளத் துறை அமைச்சர் துறை மாற்றம் செய்யப்பட்டார். வைத்தியநாதனின் கட்சிப் பதவியையும் ஜெயலலிதா பறித்தார். ‘‘அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி ஆட்சியில், ஆவினில் இப்போதும் வைத்தியநாதனின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது’’ என்கிறார்கள் துறை அதிகாரிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒப்பந்ததாரர்கள், ‘‘ஆன்லைன் டெண்டரில் அகில இந்திய அளவில் எவரும் கலந்துகொள்ளலாம். ஆனாலும், வைத்தியநாதன் தரப்பினர் யாரையும் கலந்துகொள்ளவிடுவதில்லை. ஒன்று... விலையை அதிகப்படுத்துகிறார்கள் அல்லது ஆன்லைன் மூலம் ஆர்டர் பெறுபவர்களுக்கு அதிகாரிகள் உதவியுடன் `பால் ஸ்டாக் இல்லை’ என இழுத்தடிக்கிறார்கள். இதன்மூலம், ஆவின் பால் டெண்டரில் கலந்துகொள்ள மற்ற நிறுவனங்கள் யோசிக்கின்றன. இதைப் பயன்படுத்தி ஆவின் பாலை வைத்தியநாதன், அவரின் தம்பி ராஜ்குமார் ஆகிய இருவர் மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். ஆவின் அலுவலகத்துக்கு வரும் வைத்தியநாதன், ‘ராஜேந்திர பாலாஜி, பேருக்குத்தான் அமைச்சர். நான்தான் ஆவினுக்கு அமைச்சர்’ என்று பகிரங்கமாகவே பேசுகிறார். அமைச்சர் ஆசி அவருக்கு இருப்பதால், அலுவலர்களும் அவர்கள் சொல்வதைச் செய்கிறார்கள். இது ராஜேந்திர பாலாஜிக்குத் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்பவர்கள், அமைச்சர்மீதும் ஏராளமான புகார்களை வாசிக்கின்றனர்.

பொங்கிவழியும் ஆவின் ஊழல்!

‘‘தனது ஆதரவாளர் பிரபாத் என்பவரை, சிறப்பு அதிகாரி என்ற பதவியில் அமரவைத்திருக்கிறார் அமைச்சர். இப்படியொரு பதவியே முன்பு ஆவினில் கிடையாது. இவருக்காகவே இந்தப் பதவி உருவாக்கப்பட்டு ஆவின் தலைமை அலுவலகத்தில் தனி அறை, மாதச்சம்பளம், கார் என வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆவின் மேலாண் இயக்குநராக காமராஜ் இருந்த காலத்தில்தான் இவர் பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் கேட்கும் கமிஷனுக்கு ஒப்புக்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன. இதனால், பல ஒப்பந்ததாரர்கள் ஆவின் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை. கமிஷன் வாங்குவதற்காக ஒருவரை அரசு சம்பளத்துடன் பதவியில் வைத்திருக்கும் ஒரே துறை ஆவின் மட்டும்தான். வைத்தியநாதன், பிரபாத் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டில்தான் தற்போது ஆவின் இருக்கிறது. முதலமைச்சர் சில அதிரடி முடிவுகளை எடுத்தால்தான், ஆவினைக் காப்பாற்ற முடியும்’’ என்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.

பொங்கிவழியும் ஆவின் ஊழல்!

ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகள்குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுச்சாமி, ‘‘டி.என்.பி.எஸ்.சி ஊழலுக்கு அடுத்ததாக மிகப்பெரிய ஊழல் ஆவினில் நடந்திருக்கிறது. சுனில் பாலிவால் மேலாண் இயக்குநராக இருந்தபோது, 34 ஆக இருந்த மொத்த விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்தினார். அவருக்குப் பிறகு வந்த காமராஜ் அந்த முறையையே ஒழித்து, 11 பேரை சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டாக ஒரே நாளில் நியமனம் செய்தார். இதனால் ஆவினுக்கு மாதம் 1.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

அதேபோல் ஒன்றியங்களைக் கவனித்துவந்த லாரி உரிமையாளர்கள் ஒப்பந்த முறை ரத்துசெய்யப்பட்டது. ஆவின் நிறுவனத்துக்காக இயக்கப்படும் லாரி ஒப்பந்தத்தை தமிழகம் முழுவதும் ‘கிறிஸ்டி ஃபுட்ஸ்’ என்ற ஒரே நிறுவனத்துக்குத் தாரைவார்க்கும்விதமாக, ஒப்பந்தங்களை இணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்கள். ஏற்கெனவே ஒப்பந்தத்துக்கு லாரி ஓட்டுவோரிடம், லாரி வாடகையையும் உயர்த்தாமல் காலம்தாழ்த்தினார்கள். இப்போது கிலோமீட்டருக்கு 27.60 பைசா வீதம் தரப்படும் வாடகையை இன்னும் குறைத்துக்கொள்ளுமாறு ஆவின் அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர். இது, ஆவின் ஒப்பந்தத்திலிருந்து லாரி உரிமையாளர்களை வெளியேற்றும் செயல்.

ஆவின் பாலில் கலப்படம் செய்த காரணத்துக்காக சிலர்மீது வழக்கு நடந்தது. அதற்காகவே அப்போதைய அமைச்சர் துறை மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அதில் சம்பந்தப்பட்ட நபர்கள்தான் ஆவின் அலுவலகத்தை இப்போது தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெற வாய்ப்பில்லை’’ என்றார்.

ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் விளக்கம் கேட்டோம். ‘‘அமைச்சர் பெயரைச் சொல்லி நான் மிரட்டுகிறேன். அவரின் பெயரைவைத்து டெண்டரில் முறைகேடுகள் செய்திருக்கிறேன் என்றெல்லாம் என்மீது புகார் கூறுபவர்கள், அதற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்.

35 வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். தொழில் திறமை இல்லாதவர்கள் தங்கள் தகுதியின்மையை மறைப்பதற்காக, என்மீது பழிகளைச் சுமத்துகிறார்கள். உண்மையில் ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகளை எதிர்த்துதான் நானே போராடிவருகிறேன்.

உபரி பால் விநியோகத்தில் ஆவின் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்துவந்த நிலையில், என்னுடைய கோரிக்கையால்தான் உபரி பாலை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ‘தேசிய கூட்டுறவு பால் கூட்டமைப்பு லிமிடெட்’ உருவாக்கப்பட்டு, அதன்மூலமாக டெண்டர் கோரப்பட்டது. இதில், இந்தியா முழுவதிலுமிருந்து மொத்தம் 10 நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்யத் தேர்வுசெய்யப்பட்டன. அவற்றில் ஆர்காட் என்ற பெயரில் நானும், ஆர்.கே என்ற பெயரில் என் தம்பியும் ஆவின் பால் டெண்டர் எடுத்திருப்பது உண்மைதான். எங்களைப்போல் மேலும் எட்டு நிறுவனங்கள் இதே டெண்டரை எடுத்திருக்கின்றன. இணையம் வழியாக நடக்கும் டெண்டரில் யாரும் கலந்து கொள்ளலாம் என்கிறபோது, இதில் எப்படி நான் முறைகேடு செய்ய முடியும்?

ஏற்கெனவே, ஆவின் பால் கலப்படம் என்று சொல்லி என்மீது வழக்குத் தொடுத்தனர். ஆனால், நீதிமன்றத்தில் ‘என்மீது குற்றம் எதுவும் இல்லை’ என்று நிரூபித்து வெளியே வந்துவிட்டேன். என் பெயரில் ஒரு பால் டேங்கர் லாரிகூட ஓடவில்லை. சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்ட் ஆபரேட்டர்ஸ் குரூப்தான் தமிழ்நாடு முழுக்க பால் டேங்கர் லாரிகளை ஓட்டிவருகின்றனர். நான் மறுபடியும் டேங்கர் லாரி தொழிலுக்கு வந்துவிடக் கூடாது என்ற திட்டத்தோடுதான் என்மீது இதுபோன்ற பொய்ப் புகார்களைக் கூறிவருகின்றனர்.

ஆவினில் நடைபெற்றுவரும் தில்லுமுல்லு களைக் களைவதற்காக லோக் ஆயுக்தா வரை புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்துவருகிறேன். இதனால், முறைகேடுகளில் ஈடுபட்டுவந்த ஆவின் அதிகாரிகள் பலரும் பாதிக்கப்பட்டனர். அந்தக் கோபத்திலும், தொழில்ரீதியாக என் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமலும் என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர்’’ என்றார் அழுத்தமாக.

சிறப்பு அதிகாரியான பிரபாத்திடம் பேசினோம். “பால்வளத் துறை சம்பந்தமான புகார் மனுக்கள் மற்றும் அமைச்சருக்கு வரும் மனுக்களைப் பெற்று அவற்றை அமைச்சரின் பார்வைக்குக் கொண்டுசென்று தீர்வுகளைப் பெற்றுத் தருவதுதான் என் வேலை. கட்சிக்காரர்கள் தொடங்கி பால் முகவர்கள் வரை என்னிடம் மனு கொடுக்கிறார்கள். அவற்றை அமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்கிறேன். மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அமைச்சர் எழுதித் தருவதை அலுவலகத்தில் கொடுக்கிறேன். இந்த வேலையைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது’’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விளக்கம் பெற முயன்றும் முடியவில்லை. அவரின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரியான mlasivakasi@tn.gov.in என்ற ஐ.டி-க்கு விளக்கம் கேட்டு மெயில் அனுப்பியிருக்கிறோம். பதிலளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

ராஜேந்திர பாலாஜி எக்குத்தப்பாகப் பேசுவதையே கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமி, அவரிடம் உள்ள பால்வளத் துறையை மீட்க என்ன செய்யப்போகிறார்?

இந்தக் கணக்கு புரியுதா?

வின் நிறுவனம் கொடுத்த புள்ளிவிவரங்களின்படி...

சுனில் பாலிவால் நிர்வாக இயக்குநராக இருந்த 2016–2017 நிதியாண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை – 5,281 கோடி ரூபாய்.

அந்த நிதியாண்டின் நிகர லாபம் – 139.34 கோடி ரூபாய்.

காமராஜ் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகு, 2017–2018 நிதியாண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை– 5,478 கோடி ரூபாய்.

அந்த நிதியாண்டில் ஆவின் அடைந்த நஷ்டம் – 27.96 கோடி ரூபாய்

2018–2019 நிதியாண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை – 5,994 கோடி ரூபாய்.

அந்த நிதியாண்டில் ஆவின் அடைந்த நஷ்டம் – 13.36 கோடி ரூபாய்.

‘‘700 கோடி ரூபாய் மதிப்புக்குக் குறைவாக விற்பனை இருந்தபோது 139.34 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய நிறுவனம், எப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக விற்பனை நடந்தும் நஷ்டமடைந்தது?’’ என்று கேள்வி எழுப்பும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுச்சாமி, ‘‘இதைவைத்தே 300 கோடி ரூபாய் வரை நஷ்டத்துக்குக் காரணமான ஊழலைக் கண்டுபிடிக்க, சி.பி.ஐ விசாரணை வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு