Published:Updated:

9 வருடப் பகைக்கு பழிதீர்த்துக் கொண்டாரா அமித்ஷா, சிதம்பர ரகசியம் என்ன?

P.Chidambaram arrested
P.Chidambaram arrested

இது, கிரிமினல் வழக்கு இல்லை, சிவில் வழக்கு மட்டுமே என டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா பண பேர விவகாரத்தில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி போலீஸாரின் உதவியுடன் நேற்று நள்ளிரவு சிபிஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கான முன்ஜாமீனை நேற்று முன் தினம் மறுத்தது. சிதம்பரத்தைக் கைதுசெய்தால் மட்டுமே இந்த வழக்கை விசாரிக்க முடியும் என சிபிஐ-யும் அமலாக்கத்துறையும் தொடர்ந்து வற்புறுத்தியதை அடுத்து, நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

P.Chidambaram
P.Chidambaram

சிபிஐ-யிடம் சிக்காமலும் அதே நேரத்தில் ஓடி ஒளியாமலும் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தார், சிதம்பரம். முன்ஜாம்மின் மனு நிராகரிக்கப்பட்டதால், அடுத்து உச்ச நீதிமன்றத்தின் உதவியைக் கோரினார். அவரது சிறப்பு விடுப்பு மனுவை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அனுப்பிவைத்தது. ஆனால், உச்சநீதிமன்றமும் அவரது மனுவை உடனே விசாரிக்க மறுத்துவிட்டது. மனுவை விசாரணைக்கே எடுத்துக்கொள்ளாமல், ரஞ்சன் கோகாய் அமர்வு கலைந்து சென்றது.

இதற்கிடையே, சிபிஐ டெல்லி விமான நிலையத்தில் அவரைத் தேடி நோட்டீஸ் ஒட்டியது. இரண்டு மணி நேரத்தில் சிபிஐ-யிடம் வந்து சரணடையுமாறு அவர் வீட்டு வாசலிலும் நோட்டீஸ் மிரட்டியது. ஆனால், நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு திடீரென வந்த ப.சிதம்பரம், ‘‘நான் ஓடி ஒளியவில்லை மாறாக நீதியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்! இந்த வழக்கில் என்மீதோ என் குடும்பத்தினர் யார் மீதுமோ எந்த குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படவில்லை’’ என்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அங்கிருந்து வீட்டுக்கு அவர் கிளம்பிச்செல்ல, அங்கே விரைந்தனர் சிபிஐ அதிகாரிகள். டெல்லி மட்டுமின்றி தேசம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

P.Chidambaram
P.Chidambaram

இரவு 10:00 மணியளவில், சிதம்பரத்தின் வீட்டை அடைந்த அதிகாரிகள், முன்னால் உயர்ந்து நின்ற வாயில் கதவைத் திறக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு எந்தப் பதிலும் இல்லை என்றதும், வீட்டிற்குள் செல்வதற்காக காம்பவுண்டு சுவரில் ஏறிக்குதித்தனர் சிபிஐ அதிகாரிகளும் டெல்லி போலீஸாரும்.

உள்ளே சென்று, கால் மணி நேரத்துக்கும் மேலாக சிதம்பரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட வாக்குவாதத்துக்குப் பின், அவர்களுடன் கிளம்பினார் சிதம்பரம். காரில் ஏறும்போது, சற்று கலவரமான முகத்துடன் காணப்பட்டார். வாகனம் சிபிஐ அலுவலகம் சென்றது. அவர் கைதுசெய்யப்பட்டதை சிபிஐ அதிகாரிகள் உறுதிசெய்தனர். சிபிஐ விருந்தினர்கள் அறையில் காவல் வைக்கப்பட்டார், முன்னாள் உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

தமிழகத்தைச் சேர்ந்த சிபிஐ விசாரணை அதிகாரி ஒருவர்தான், இந்தத் தகவலை சிதம்பரம் தரப்புக்கு கசியவிட்டார் என்ற பரபரப்பான குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
`3 சி.பி.ஐ குழு; உதவிய டெல்லி போலீஸ்!' - சிதம்பரம் கைதின்போது என்ன நடந்தது?

இந்த விவகாரத்தில், சிதம்பரத்தை நேற்று முன் தினமே கைது செய்திருக்க முடியுமென்ற சூழ்நிலை இருந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த சிபிஐ விசாரணை அதிகாரி ஒருவர்தான், இந்தத் தகவலை சிதம்பரம் தரப்புக்குக் கசியவிட்டார் என்ற பரபரப்பான குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. அநேகமாக, அந்த அதிகாரிமீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்ற தகவலும் சிபிஐ வட்டாரத்தில் பரவியிருக்கிறது.

ஏன் இந்தக் கைது...?

ஐ.என்.எக்ஸ் விவகாரத்தின் வரலாற்றை கொஞ்சம் புரட்டிப்பார்ப்போம். 2007-ம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாட்டிலிருந்து சுமார் 305 கோடி ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 2017-ம் ஆண்டு சிபிஐ தரப்பு முதல்தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல்செய்தது.

Indrani Mukerjea
Indrani Mukerjea
இந்திராணி முகர்ஜி, தன் மகளைக் கொலைசெய்த வழக்கில் தற்போது மும்பை சிறையில் உள்ளார்.

முறைகேடுகள் நடந்ததாகச் சொல்லப்படும் சமயத்தில், மத்திய நிதித்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அவர் பதவியில் இருந்த சமயம், ஜனவரி 2008-ல் நிதி அமைச்சகத்தின் நிதி புலனாய்வுப் பிரிவு, வெளிநாட்டு நேரடி முதலீடாக மொரீஷியஸைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் முதலீடு செய்யவிருந்த ரூ. 305 கோடிக்கு அனுமதி அளித்தது.

பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர்தான் அந்த நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளர்கள். அதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா மீது அந்நியச் செலவாணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக, 2010-ல் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்திராணி முகர்ஜி, தன் மகளைக் கொலைசெய்த வழக்கில் தற்போது மும்பை சிறையில் உள்ளார். அவர் அப்ரூவராக மாறியபின்பே இந்த வழக்கில் சிதம்பரம் மீதான பிடி மேலும் இறுகியது.

Karthi Chidambaram
Karthi Chidambaram

பல வருடங்கள் கழித்து, வேறு ஒரு விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரான பாஸ்கர்ராமனின் கணிப்பொறியைப் பார்வையிட்ட அமலாக்கத்துறையினர், அதில் ஐ.என்.எக்ஸ் மீடியா கார்த்தி சிதம்பரத்தின் ’செஸ்’ நிறுவனத்துக்கு பணப்பரிமாற்றம் செய்ததற்கான ஆவணத்தைக் கண்டெடுத்தனர்.

இவை அத்தனையுமே சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்தவை. இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ சார்பில் ஊழல் புகார் பதிவுசெய்யப்பட்டது. அப்பா மற்றும் மகன் இருவருக்கும் சொந்தமான அத்தனை இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.

P.Chidambaram - Amit Shah
P.Chidambaram - Amit Shah

இதுதொடர்பாகக் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட கார்த்தி, பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது, சிவகங்கை தொகுதி எம்.பி-யாக உள்ளார். தற்போது, பாரதிய ஜனதாவின் பார்வை சிதம்பரத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. இது, கிரிமினல் வழக்கு இல்லை சிவில் வழக்கு மட்டுமே என டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது.

குட்கா விவகாரத்தில் சிக்கிய விஜயபாஸ்கர், இன்று வரை அமைச்சராகத் தொடர்கிறார்.

ஆனால், சிவில் வழக்கை கிரிமினல் வழக்குபோல சிபிஐ சித்திரிக்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது, அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என்கிறார், தி.மு.க தலைவர் ஸ்டாலின். தமிழக தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியதில், இன்று வரை யாரையுமே கைது செய்யவில்லை. குட்கா விவகாரத்தில் சிக்கிய விஜயபாஸ்கர், இன்று வரை அமைச்சராகத் தொடர்கிறார். ஆனால், அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாத சிபிஐ, ஏன் சிதம்பரத்தை மட்டும் கைதுசெய்கிறது என்று கேட்கிறார், திருச்சி வேலுசாமி.

P.Chidambaram with Modi
P.Chidambaram with Modi

பழிவாங்குகிறாரா அமித் ஷா?

அமித் ஷா, இரண்டு ஆண்டுகள் குஜராத் செல்லவே முடியாமல் அவர் டெல்லியில் முடக்கப்பட்டார்.

சிதம்பரத்தைக் கைதுசெய்ததன் பின்னணியில் அமித் ஷா-வின் தனிப்பட்ட பகை இருப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. கடந்த 2010-ம் ஆண்டில், குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்தபோது, போலி என்கவுன்டர் வழக்கில் அவரை சிபிஐ கைதுசெய்தது. இரண்டு ஆண்டுகள் குஜராத் செல்லவே முடியாமல் அவர் டெல்லியில் முடக்கப்பட்டார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர், ப.சிதம்பரம். இப்போது உள்துறை அமைச்சராக அமித் ஷா வந்ததும், சிதம்பரத்தைக் கைதுசெய்திருக்கிறது சிபிஐ .

சி.பி.ஐ மாளிகையில் சிதம்பரம்! அன்று சிறப்பு விருந்தினராக... இன்று `கைதி’யாக!

இவ்விரு விவகாரங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் தவறுகள் செய்தார்களா இல்லையா என்ற விவாதத்தைத் தாண்டி, சிபிஐ ஆளும்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுகிறதா என்ற கேள்வியும் வலுத்திருக்கிறது. சிதம்பரம் சிக்கலில் இருப்பதைத் தொடர்ந்து, பி.ஜே.பி அரசின் அடுத்த குறி யாராக இருக்குமென்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல், இந்தப் பட்டியலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அமித்ஷாவை அப்போது கைதுசெய்ததில் அவரது பின்புலம் அதிகமாக இருந்தது என்ற பேச்சு இன்று வரை இருக்கிறது. ஆனால், அவர்மீது வலுவான வழக்குகள் எதுவுமில்லை. எனவே, அவர்மீது புதிதாக ஏதாவது குற்றச்சாட்டுகள் எழுப்பி, வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்றும் காங்கிரஸார் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Shashi Tharoor
Shashi Tharoor

அடுத்ததாக, பி.ஜே.பி அரசுக்கு எதிராகப் பல விஷயங்களைப் 'பளிச்'செனப் பேசிவரும் சசிதரூர் மீதும் பலரது பார்வை திரும்பியுள்ளது. சுனந்தா மர்ம மரணம் தொடர்பான வழக்கில் சசிதரூரை இழுப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும், லண்டனில் சொத்துகள் வாங்கியதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் ராபர்ட் வதேராவுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுத்தவும் பா.ஜ.க முயலலாம் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். முக்கியத் தலைவர்கள்மீது வழக்குகள் பாயும் ஆபத்து இருப்பதால், கட்சி சிதறுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறது இந்திய தேசியக் காங்கிரஸ் தலைமை.

அடுத்த கட்டுரைக்கு