Published:Updated:

மதுரை: ஆர்.டி.ஐ தகவல் மூலம் அம்பலமாகும் மத்திய சிறை ஊழல்?! - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை மத்திய சிறைச்சாலை

``மற்ற சிறைகளைவிட மதுரை சிறையில்தான் இந்த ஊழல் பெரிய அளவில் நடந்துள்ளது. இதை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு விசாரணை செய்ய வேண்டும். அப்போதுதான் வேறு என்ன மாதிரியான மோசடிகளெல்லாம் நடந்துள்ளன என்பதும் தெரியவரும்'' என்கிறார்கள்.

Published:Updated:

மதுரை: ஆர்.டி.ஐ தகவல் மூலம் அம்பலமாகும் மத்திய சிறை ஊழல்?! - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

``மற்ற சிறைகளைவிட மதுரை சிறையில்தான் இந்த ஊழல் பெரிய அளவில் நடந்துள்ளது. இதை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு விசாரணை செய்ய வேண்டும். அப்போதுதான் வேறு என்ன மாதிரியான மோசடிகளெல்லாம் நடந்துள்ளன என்பதும் தெரியவரும்'' என்கிறார்கள்.

மதுரை மத்திய சிறைச்சாலை

மதுரை மத்திய சிறையில் கைதிகள் தொழில் செய்வதற்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சிறைத்துறை அதிகாரிகள் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக கிளம்பியுள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மத்திய சிறைச்சாலை
மதுரை மத்திய சிறைச்சாலை

பல்வேறு சூழல்களால் தண்டனைக்குள்ளாகி சிறையில் காலத்தைக் கழிக்கும் சிறைவாசிகளின் மனநிலையை மாற்றவும், அவர்கள் தண்டனை முடிந்து வெளியில் செல்லும்போது பொருளாதாரப் பிரச்னை இல்லாமல் சமூகத்துடன் இணைந்து வாழ ஏதுவாகவும் சிறைக்குள் தொழில் பயிற்சிகளும் வேலையும் அளிக்கப்படுகின்றன.

சிறைச்சாலை என்பது கொட்டடி என்கின்ற சூழல் மாறி மனமாற்றம், தொழில் கற்கும் இடமாக மாற்ற உயர் நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகளின் வழிகாட்டலில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி ஆண்டுதோறும் அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது.


இதன் மூலம் சிறைக்குள் விவசாயம், நெசவு, மரவேலைகள் உள்ளிட்ட பல தொழில்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி, உணவுப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு சிறை வாசலில் அமைக்கப்பட்ட பிரிசன் பஜார் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பல பொருள்களை மற்ற அரசுத் துறைகள் வாங்கிக்கொள்கின்றன. விற்பனையில் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதம் சிறைவாசிகளுக்குப் பங்குத்தொகையாக வழங்கப்படுகிறது.

மத்திய சிறை
மத்திய சிறை

இந்த நிலையில்தான் மதுரை சிறையில் ஸ்டேஷனரிப் பொருள்கள் தயாரித்ததில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், இதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தாக்கல் செய்த 'சிறை கைதிகள் உரிமை மைய' இயக்குநர் வழக்கறிஞர் பி.புகழேந்தியிடம் பேசினோம். "மதுரை சிறையில் கடந்த ஐந்து வருடங்களாக கைதிகள் மூலம் தயாரிக்கப்படும் ஸ்டேஷனரிப் பொருள்களும், மருத்துவப் பொருள்களும் தமிழகத்திலுள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதாகச் சொல்லப்பட்டது. ஸ்டேஷனரிப் பொருள்கள், பேன்டேஜ்கள் தயாரிக்கத் தேவையான பொருளை வாங்க ஆண்டுதோறும் அரசு மூலம் சிறைத்துறைக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அது ஒவ்வொரு சிறைக்கும் வழங்கப்படுகிறது.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

மதுரை மத்திய சிறையில் சிறிய அளவிலேயே இந்த வேலைகள் நடந்துள்ள நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக அதிகமான ஆர்டர்களுக்காக அதிகமாகப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக சிறை நிர்வாகத்தினர் ஆவணங்கள் தயாரித்து வைத்துள்ளனர்.

ஆனால், இதில் மோசடி நடப்பதாக எனக்குக் கிடைத்த தகவலைவைத்து விசாரித்தபோது அதிகமான ஆர்டர் வந்ததுபோல் போலியாக பில்கள் தயாரித்து ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது. அதிகமான ஆர்டர்கள் வந்ததால் அதிகமான சிறைவாசிகளால் அதிகமாக பொருள்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்காக அவர்களுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்பட்டதுபோல பில் தயாரித்து அரசு வழங்கிய நிதியில் பல கோடி மோசடி செய்துள்ளனர்.

இதைப் பற்றி சிறைத்துறை ஆவணங்களில், பல மாவட்ட நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களுக்கு அதிக அளவில் ஸ்டேஷனரிப் பொருள்கள் சப்ளை செய்திருப்பதாக பில் எழுதியுள்ளனர். மதுரை சிறைத்துறை ஆவணங்களின்படி அந்தந்தத் தேதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலங்களில் அவர்கள் சொன்ன கணக்கின்படி பொருள்கள் வாங்கப்பட்டனவா என்பதை ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டதில் மதுரை சிறையின் மோசடி தெரியவந்தது.

உதாரணத்துக்கு கடந்த 2.7.2019-ல் இவர்களிடமிருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிறிய கடித உறைகள் 5,000, நடுத்தர கடித உறைகள் 5,000, ஃபைல் பேடு 250 பெற்றுள்ளனர். ஆனால், சிறைத்துறை ஆவணத்தில் சிறிய கடித உறைகள் 50,000, மீடியம் கடித உறைகள் 1,50,000 வழங்கியதாக உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதேபோல் 3.6.2019 -ல் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி நீதிமன்றத்தில் சிறிய கடித உறை 2,000, மீடியம் கடித உறைகள் 2,000 பெற்றிருக்கிறார்கள். ஆனால், சிறை ஆவணத்தில் சிறிய கடித உறை 50,000, மீடியம் கடித உறை 1,00,000, பெரிய கடித உறைகள் 1,50,000 அனுப்பியதாக எழுதியிருக்கிறார்கள்.


சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு 2018 முதல் 2021 வரை, மூன்று வகையான அஞ்சல் உறைகள் அதிக அளவில் ஆர்டர் கொடுக்கப்பட்டதாக பில் போட்டுள்ளனர். ஆனால், அப்படியொரு ஆர்டரே கொடுக்கப்படவில்லை என்று சிவகங்கை மாவட்ட நீதித்துறையினர் ஆர்.டி.ஐ மூலம் பதில் தந்தனர்.


இதுபோல் திண்டுக்கல், மேலூர் எனப் பல ஊர்களிலுள்ள அலுவலகங்களுக்கு பெரிய அளவில் கடித உறைகள், ஃபைல் பேடுகள் அனுப்பியதாகவும், மருத்துவமனைகளுக்கு பேண்டேஜ் ரோல்கள் அனுப்பியதாகவும் ஆவணங்கள் தயாரித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, 2019 ஜூன் முதல் 2021 ஜூன் வரை மட்டும் 30 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. அந்த ஆண்டு 30 கோடி ரூபாய் நிதி செலவு செய்ததற்கு ஆடிட்டிங்கும் செய்யப்பட்டுள்ளது.

விஷயம் இதுதான், மதுரை சிறையில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு அதிகமான ஆர்டர்கள் வருவதாகவும், அதனால், அதிகமான கைதிகள் ஸ்டேஷனரிப் பொருள்கள் உற்பத்தி செய்வதாகவும், அவர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்கப்படுவதகாவும் போலியாக பில் தயாரித்து பல கோடிகளை ஏப்பம்விட்டிருக்கிறார்கள். சிறைத்துறை அதிகாரிகள் சிலர் புதிய கார்கள் உள்ளிட்டவை வாங்கி வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொண்டதாகவும் தகவல் வருகிறது.


இதில் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக மதுரை சிறை எஸ்.பி-யாக முன்பிருந்த ஊர்மிளாவுக்கும், டி.ஐ.ஜி பழனிக்கும் இதில் தொடர்பு உள்ளது. இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கும், சிறைத்துறை டி.ஜி.பி-க்கும் புகார் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால்தான் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளேன்.

மதுரை மத்திய சிறை
மதுரை மத்திய சிறை

மற்ற சிறைகளைவிட மதுரை சிறையில்தான் இந்த ஊழல் பெரிய அளவில் நடந்துள்ளது. இதை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு விசாரணை செய்ய வேண்டும். அப்போதுதான் வேறு என்ன மாதிரியான மோசடிகளெல்லாம் நடந்துள்ளன என்பதும் தெரியவரும்'' என்றார்.

`கோவை சிறையில் கிளிப்பிங் பேட் தயாரிக்க 42 மெஷின்கள் உள்ள நிலையில் அவர்களின் உற்பத்தி/விற்பனை கணக்கை காட்டிலும், மூன்று மெஷின் மட்டும் உள்ள மதுரை சிறையில் கடந்த ஐந்து வருடங்களாக அதிகமாகக் காட்டிவருகிறார்கள்’ என்றும், `பிரிசன் பஜாருக்குப் பொருள்கள் தயாரிக்கும் சிறைவாசிகளுக்கு நியாயமான பங்குத்தொகை வழங்கப்படவில்லை என்ற புகாரும் இருக்கிறது’ என்கிறார்கள்' மதுரை சிறையை பற்றி நன்கு அறிந்த வழக்கறிஞர்கள்.


இந்த குற்றச்சாட்டு பற்றி தற்போதைய சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். "இது பற்றி நான் எதுவும் கூற முடியாது. நான் பொறுப்புக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இது குறித்து எனக்கு மேலே உயரதிகாரிகள் முடிவெடுப்பார்கள்" என்றார். மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி பழனியின் அலைபேசிக்குத் தொடர்ந்து முயன்றோம். எஸ்.எம்.எஸ் அனுப்பியும் அவர், நமது அழைப்பை ஏற்கவில்லை. விரைவில் விசாரணைக்கு வரும் இந்த வழக்கு மூலம் பல ஊழல்கள் வெளிவரும் என்கிறார்கள்.