Published:Updated:

விழுப்புரம்: 56 ஏக்கருக்கு பதிலாக, 158 ஏக்கர்! - போலி திட்ட மதிப்பீடு மூலம் ரூ.35 லட்சம் முறைகேடு?

குடிமராமத்துப் பணியை முறையாகச் செய்யாமலேயே 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறி, பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்டது பஞ்சமாதேவி கிராமம். இந்த கிராமத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில், குடிமராமத்துப் பணி திட்டத்தின் கீழ், தூர்வாரப்பட்டதாகக் கூறி பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் சார்பில், 'மக்களுக்குப் பயன்படாத ஏரியில் குடிசை போடும் ஆர்பாட்டம்' ௭ன்று நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்தக் கட்சியின் சார்பாக சுமார் 10 நபர்கள் வரை மட்டுமே பங்கேற்றனர். ஆனால், காவல்துறை தரப்பில் அதிக அளவில் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

பேச்சுவார்த்தையில் தாசில்தார்
பேச்சுவார்த்தையில் தாசில்தார்

இது தொடர்பாக, அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சீனிவாசனிடம் பேசினோம். "நான் பஞ்சமாதேவி பகுதியைச் சேர்ந்தவன். எங்கள் பகுதியிலுள்ள ஏரியை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கொண்டு சென்று தூர்வார வேண்டும் என்பதற்காக அந்தத் திட்டத்தில் எங்கள் ஏரியைச் சேர்க்கும்படி விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குக் கடந்த ஏப்ரல் மாதம் சென்றிருந்தேன். அங்கு எனக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுவிட்டதாக சில முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் மட்டுமே கிடைத்தன. அதில் சந்தேகம் எழுந்ததால், கடந்த ஏப்ரல் மாதம், 29-ம் தேதி 'தகவல் அறியும் உரிமை சட்ட'த்தின் கீழ் தகவல் கேட்டிருந்தேன். அடுத்த 30 நாள்கள் காத்திருந்தேன். தகவல் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து, கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தேன். சரியான பதில் கிடைக்கவில்லை. அதன் பிறகு, மே 8-ம் தேதி, இன்றைய தினம் (15.06.2021) அந்த ஏரியில் போராட்டம் நடத்தப்போவதாக தாசில்தாரிடம் கடிதம் கொடுத்தேன். போராட்டத்துக்கு இடைப்பட்ட காலத்தில், இணையம் மற்றும் இதர வழிகளின் மூலமாக முக்கிய ஆவணங்களைச் சேகரித்துவைத்திருந்தேன். மேலோட்டமாக RTI தகவலும் கிடைத்தது. 2018-ல் டெண்டர் விடப்பட்டு, 2019 - 2020-ல் பணி செய்து முடிக்கப்பட்டதாக திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

56 ஏக்கர் பரப்பளவுகொண்டதுதான் அந்த ஏரி. ஆனால், 158 ஏக்கர் பரப்பளவுகொண்டது எனப் பொய்யான திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து, குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், தூர்வாருதல், மதகுகளைச் சீரமைத்தல் போன்ற பணிகளுக்காக 35 லட்சம் ரூபாய் வரை பெற்று முறைகேடு நடைபெற்றுள்ளது. திட்டப் பணியின் மதிப்பீட்டை அதிகரிப்பதற்காக, 102 ஏக்கரைப் பொய்யாகக் கூட்டிக் காண்பித்துள்ளனர். 'பஞ்சமாதேவி பெரிய ஏரி பாசன விவசாயிகள் சங்கம்' என ஒரு சங்கம் அமைக்கப்பட்டு, விவசாயிகள் சார்பாக இந்தப் பணி நடைபெறுவதைப்போல குடிமராமத்துப் பணி திட்டத்தின் கீழ் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்தச் சங்கத்தின் தலைவராக சந்திரசேகர் என்பவரும், பொருளாளராக ஆறுமுகம் என்பவரும் இருக்கிறார்கள். இவர்கள் மூலமாகவே அந்தத் தொகை முழுவதும் பெறப்பட்டுள்ளது.

RTI தகவல்
RTI தகவல்

சந்திரசேகர் என்பவரிடம் கேட்டபோது, ` `நானே பணிகள் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறேன்’ எனக் கூறிய அதிமுக பிரமுகர் ஒருவரிடமே காசோலைகள் அனைத்தையும் கொடுத்தேன்' எனக் கூறுகிறார். நான் சேகரித்த தகவலைப் பற்றி தாசில்தாரிடம் தெரிவித்தேன். அதன்பேரில் கடந்த 13.06.2021 அன்று சம்பந்தப்பட்ட ஏரியை நேரில் வந்து பார்வையிட்டார் தாசில்தார். வேலை நடக்கவில்லை என உறுதி செய்தார்.

அதனால், நேற்று முன்தினம் (14.06.2021) 'பீஸ் கமிட்டி மீட்டிங்' வெச்சிருந்தாங்க. அங்கு வந்திருந்த உதவிப் பொறியாளரோ... 'நாளை ஏரிப் பகுதியிலேயே சம்பந்தப்பட்ட ஆவணங்களை அளிக்கிறோம்' என உறுதி அளித்துவிட்டுச் சென்றிருந்தார். ஆனால், நேற்று (15.06.2021) எங்கள் மாவட்டத் தலைவர் கோ.கலியமூர்த்தி தலைமையில், குடிசை போடும் போராட்டத்தில் ஈடுபட்டபோது எந்தவிதமான புள்ளிவிவர ஆவணங்களையும் அதிகாரிகள் கொடுக்கவில்லை. நாளைக்குத் தருவதாக உறுதி அளித்துவிட்டுப் போயிருக்காங்க" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தக் கட்சியின் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, "நாங்கள் அறிவித்தபடி அந்த ஏரியில் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், ஐந்து வேன்கள், நான்கு ஜீப்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் எங்களைக் கைதுசெய்வதற்காக அங்கு குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்த ஊர் மக்களும் அங்கு வரத் தொடங்கிட்டாங்க. 'என்னென்ன வேலை செய்யப்பட்டிருக்கிறது' என்பதை விவரிக்க எஸ்.டி.ஓ வந்திருந்தார். 9.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டதாக ஒரு பாலம் ஒன்றைக் காட்டினார். ஆனால், அதன் மதிப்பு அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய்கூட இருக்காது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ₹1,887 கோடி முறைகேடு... DHFL நிறுவனம் சிக்கியது எப்படி?

ஊர் மக்களும், இது தொடர்பாக கேள்வி எழுப்ப தொடங்கிட்டாங்க. அதனால, நாளைக்கு தாசில்தாரிடம் திட்டம் தொடர்பான புள்ளிவிவரங்களை ஒப்படைப்பதாக எழுதிக் கொடுத்துட்டு எஸ்.டி.ஓ போயிருக்காரு. இந்த போலியான திட்டத்தின் மூலம் நடந்த முறைகேடான பணம் முழுவதும் மீட்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நபர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை" என்றார்.

இது தொடர்பாக மேலும் கிடைக்கப்பெறும் தகவல்களைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு