அரசியல்
அலசல்
Published:Updated:

வெளிச்சந்தையில் ரூ.450... அரசு மானியத்துடன் ரூ.952! - வண்டுப் பொறியா... வழிப்பறியா?

தென்னை காண்டாமிருக வண்டு
பிரீமியம் ஸ்டோரி
News
தென்னை காண்டாமிருக வண்டு

இனக்கவர்ச்சிப் பொறியின் விலை, நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபட்டு இருந்தாலும், அரசு கொள்முதல் செய்ததைவிடச் சந்தை விலை குறைவாகவே இருக்கிறது.

தென்னை காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்தும் பொறிகளைக் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, ஈரோடு இடைத்தேர்தலுக்கு மத்தியில் அனலைக் கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக ஈரோடு ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருக்கும் கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி தளபதியிடம் பேசினோம்.

“தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் தென்னைச் சாகுபடி முக்கியப் பங்கு வகிப்பதால், தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டுகளைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறிகளை தமிழ்நாடு அரசு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிவருகிறது. காண்டாமிருக வண்டை ஒழிக்க இனக்கவர்ச்சிப் பொறியை ‘கிரீன்கான் அக்ரோடெக்’ என்ற நிறுவனத்திடமிருந்து 1,400 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்கிறது. பின்னர் அதை, தென்னை விவசாயிகளுக்கு 50% மானியத்தில் (ரூ.700) வழங்குவதாகச் சொல்லி, 252 ரூபாய் ஜி.எஸ்.டி வரியுடன் ஒரு பொறியை 952 ரூபாய்க்குக் கொடுக்கிறது. இந்த இனக்கவர்ச்சிப் பொறி வெளிச்சந்தையிலேயே 360 ரூபாய் முதல் 450 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதற்கு வாய்ப்பிருப்பதால், இது குறித்து விரிவான விசாரணை வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம்” என்றார்.

தென்னை காண்டாமிருக வண்டு
தென்னை காண்டாமிருக வண்டு

இந்தப் புகாரின் உண்மைத் தன்மையை அறிய விசாரணையில் இறங்கினோம். இனக்கவர்ச்சிப் பொறியின் விலை, நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபட்டு இருந்தாலும், அரசு கொள்முதல் செய்ததைவிடச் சந்தை விலை குறைவாகவே இருக்கிறது. வேளாண்துறை மானிய விலையில் வழங்கும் பொறிகளின் விலை, வெளிச் சந்தையைவிட மிக அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு மாவட்ட வேளாண் அலுவலகத்திலும் இந்தப் பொறிகள் பல ஆண்டுகளாகச் சீண்ட ஆளில்லாமல் தேங்கிக்கிடப்பதாகச் சொல்கிறார்கள் அந்தத் துறையைச் சேர்ந்த சிலர்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் விளக்கம் கேட்டோம். “ஒவ்வொரு பொருளுக்கும் தரம் என்ற ஒன்று இருக்கிறது. விலை குறைவாகக் கிடைக்கும் காண்டாமிருக வண்டு இனக்கவர்ச்சிப் பொறிகளும் வெளிச்சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், அதிலிருக்கும் கெமிக்கல் 120 நாள்களுக்கு மட்டுமே பயன் தரும். அரசு வழங்கும் பொறியோ ஓராண்டு வரை பயன்தரக்கூடியது. பொறிகளை வழங்கும் தனியார் நிறுவனம்கூட, ஓப்பன் டெண்டர் மூலமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு பொறிகள் தேவையோ, அதை மாவட்ட அதிகாரிகளே கொள்முதல் செய்துகொள்கிறார்கள். இனக்கவர்ச்சிப் பொறி தொடர்பாக ஈரோட்டில் பழைய பில்லை வைத்து புகார் மனு அளித்திருக்கிறார்கள். உண்மையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இடைத்தேர்தல் நடக்கும் நேரத்தில் திடீரென ஈரோடு மாவட்டத்திலிருந்து இப்படியொரு புகார் கிளம்பியிருப்பதன் பின்னணியையும் நாம் பார்க்க வேண்டும்” என்றார்.

புகார் எந்த நோக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும், நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் கடமை!