Published:Updated:

தனிநபர் கழிவறை கட்ட நிதி வழங்குவதில் முறைகேடு? - சர்ச்சையில் சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிவறை கட்டிய ஏழைப் பயனாளிகளுக்கு முழுமையாகத் தொகை வழங்காமல் அமைப்பு சாரா தனியார் நிறுவனத்திற்குக் கழிவறை கட்ட அனுமதியளித்ததோடு நிதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாநகராட்சி
சேலம் மாநகராட்சி ( எம். விஜயகுமார் )

``சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிவறை கட்டிய ஏழைப் பயனாளிகளுக்கு முழுமையாகத் தொகை வழங்காமல் அமைப்பு சாரா தனியார் நிறுவனத்திற்குக் கழிவறை கட்ட அனுமதியளித்ததோடு நிதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது சம்பந்தமாகத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டால் தகவல் கொடுக்க மறுக்கிறார்கள்'' என்கிறார், சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிவராமன்.

மேலும் அவர் கூறுகையில்,``பாரத பிரதமரின் ஸ்வச் பாரத் என்கிற தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் தனிநபர் கழிவறை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒரு கழிவறை கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.4,000, மாநில அரசு ரூ.2,000 மற்றும் மாநகராட்சி ரூ.2,000 என மொத்தம் 8,000 ரூபாய் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

கழிவறை
கழிவறை

ஆனால், சேலம் மாநகராட்சியில் மொத்தம் 4,527 தனிநபர் கழிவறை கட்ட பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தனர். 3,927 ஏழைப் பயனாளிகள் கழிவறைகளைக் கட்டியும் அவர்களுக்கு மாநகராட்சியில் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக முழுமையாக நிதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆனால், வாஸ் (நீர் சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்கள்) என்ற அமைப்பு சாரா தனியார் நிறுவனத்திற்கு 600 கழிவறைகள் கட்ட அனுமதி வழங்கியதோடு அதற்கான முழுத் தொகையான ரூ.48,00,000 உடனே வழங்கி இருக்கிறது.

ஏற்கெனவே அந்த வாஸ் அமைப்பு சாரா நிறுவனத்திற்கு 600 கழிவறைகள் கட்டுவதற்கு பாரத் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனம் ஒரு கழிவறைக்கு ரூ.13,000 வீதம் ரூ.78,00,000 கொடுத்துள்ளது. வாஸ் நிறுவனம் ஒரு கழிவறையை ரூ.21,000 -ம் மதிப்பீட்டில் கட்டி இருக்கிறது. ஏன் இந்தப் பாரபட்சம் என்று தெரியவில்லை. இதில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக சேலம் மாநகராட்சியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகவல் கேட்டு 3 மாதங்கள் ஆகியும் தகவல் கொடுக்க மறுக்கிறார்கள்'' என்றார்.

இதுபற்றி வாஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியத்திடம் கேட்டோம். ```அரசு கொடுக்கும் 8,000 ரூபாய்க்குத் தனிநபர் கழிவறை கட்ட முடியாது. அப்படிக் கட்டினாலும் அதைப் பயன்படுத்த முடியாது. அதனால் சி.எஸ்.ஆர் என்கிற பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் மூலம் 600 கழிவறைகள் கட்டுவதற்கு பாரத் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ஒரு தனிநபர் கழிவறைக்கு 12,500 ரூபாயும், சேலம் மாநகராட்சிலிருந்து ரூ.8,000 பெற்று ரூ.20,500 மதிப்பீட்டில் சிறப்பாகக் கட்டி இருக்கிறோம். இப்படி 600 தனிநபர் கழிவறைகள் 6 மாதத்தில் கட்டி முடித்திருக்கிறோம்'' என்றார்.

சிவராமன்
சிவராமன்

இதுபற்றி மாநகர நல அலுவலர் பார்த்திபன்,``தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தனிநபர் கழிவறை கட்டுவதற்கு அரசு 8,000 ரூபாய் மானியமாக வழங்குகிறது. அது ஸ்லம் ஏரியாவில் உள்ள மக்களுக்குப் போதுமானதாக இல்லாததால் அவர்கள் தனிநபர் கழிவறை கட்டுவதில்லை. சிலர் பெயருக்காக மட்டுமே கட்டுகிறார்கள். அதைப் பயன்படுத்துவது இல்லை.

அதனால், தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பல ப்ராஜெக்ட் பணிகளைச் செய்யும் வாஸ் நிறுவனம் பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு திட்டத்தின் மூலம் உதவிகளைப் பெற்று முன்மாதிரியான கழிவறைகள் கட்டுவதால் அதற்கு அனுமதி கொடுத்தோம். இந்நிறுவனத்திற்கான நிதி வழங்கி விட்டோம். 3,927 பயனாளிகள் இன்னும் கட்டி முடிக்காததால் முழுமையாக இன்னும் நிதி வழங்கப்படவில்லை'' என்றார்.